Friday, 23 August 2019

அணு விஞ்ஞானி ஹோமி சேத்னா பிறந்தநாள் - ஆகஸ்ட் 24.

அது 1974ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மீர் மாவட்டத்தில் தார் பாலைவனம் பரவிக் கிடைக்கும் பொக்ரான் நகரில் இருந்து டெல்லிக்கு  ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மறுமுனையில் இருந்தவர் அன்றய பிரதமர் இந்திரா காந்தி. பேசிய குரல் ஒரே ஒரு செய்தியைத்தான் கூறியது. " புத்தர் சிரித்தார் " இரண்டே சொற்களில் பாரதம் வெற்றிகரமாக தனது அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்தது என்பது அந்த சங்கேத வாக்கியத்தின் பொருள். இந்த மகத்தான சாதனை ஹோமி நுஸுர்வான்ஜி சேத்னா இந்திய அணுசக்தி நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது நடைபெற்றது.


பாரசீக நாட்டில் இருந்து தங்கள் மத நம்பிக்கைகளை காப்பாற்றிக் கொள்ள பாரத தேசத்திற்கு அடைக்கலம் வந்த இனம் பார்சி மக்கள். பாலில் கலந்த சர்க்கரை போல பாரத நாட்டிற்கு பெரும் தொண்டாற்றிய சிறுபான்மை இனம் பார்சி இனம். புகழ்பெற்ற அறிஞர்களை தொழில்முனைவோர்களை ஆராய்ச்சியாளர்களை ராணுவ தளபதிகளை இந்த தேசத்திற்கு அளித்த இனம் அது. ஹோமி சேத்னாவும் பார்சி இனத்தைச் சார்ந்தவர்தான்.

1923ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ஆம் நாள் இன்றய மும்பை நகரில் பிறந்தவர் சேத்னா. மும்பை தூய சவேரியார் பள்ளியிலும் பின்னர் மும்பை பல்கலைக்கழகத்திலும் படித்த சேத்னா அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றார். சிறிது காலம் இங்கிலாந்து நாட்டில் பணியாற்றி விட்டு பாரதம் திரும்பிய சேத்னா Indian Rare Earth நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார்.

அணு உலைகளுக்கு தேவையான மூலப் பொருள்களான தோரியம் மற்றும் புளூட்டோனியம் ஆகிய தனிமங்களை பிரித்தெடுக்கும் ஆலையை மும்பை நகரில் உள்ள டிராம்பே பகுதியிலும், செறிவூட்டப்பட்ட யுரேனியம் தனிமத்தை பிரித்தெடுக்கும் ஆலையை இன்றய ஜார்கண்ட் மாநிலத்திலும் பின்னர் நாட்டின் முதல் அணு மின் உற்பத்தி நிலையத்தை மும்பையிலும் உருவாக்கிய குழுக்களுக்கு தலைவராக இருந்து பணியாற்றினார்.

அடுத்தடுத்து மர்மமான முறையில் பாரத நாட்டின் முன்னோடி விஞ்ஞானிகளான ஹோமி பாபா மற்றும் விக்ரம் சாராபாய் ஆகியோர் மரணமடைந்ததைத் தொடர்ந்து இந்திய அணுசக்தி நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

உலக நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்த உறுப்பினர்களான ஐந்து நாடுகள் தவிர வேறு எந்த நாடும் அணு சக்தித் துறையில் ஆராய்ச்சிகள் நடத்தக் கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பேசிக் கொண்டு இருந்த காலம் அது. அந்த தீர்மானம் நிறைவேற்றப் படுவதற்கு முன்னர் பாரதம் அணு ஆயுத சோதனையைச் செய்ய முடிவு செய்தது. அந்த பொறுப்பு சேத்னாவிடம் ஒப்படைக்கப்பட்டது. புத்தர் சிரித்தார், பூமி அதிர்ந்தது. பாரதத்தின் திறமை உலகமெங்கும் ஐயமே இல்லாமல் நிலைநாட்டப்பட்டது.

நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானியான ஹோமி சேத்னாவுக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி நாடு மரியாதை செலுத்தியது. பட்நாகர் விருது, பல்வேறு பல்கலைக்கழகங்கள் அளித்த முனைவர் பட்டங்கள் என்று சேத்னா கவுரவம் செய்யப்பட்டார்.

ஒரு சிறந்த தலைவரின் இலக்கணம் என்பது தன்னைக் காட்டிலும் சிறந்த தலைவர்களை உருவாக்குவதுதான். ராஜா ராமண்ணா, பி கே ஐயங்கார் என்று அடுத்த தலைமுறை அணுசக்திதுறை தலைவர்களை பட்டை தீட்டி சேத்னா நாட்டுக்கு அளித்தார். ஹோமி பாபாவும், விக்ரம் சாராபாயும், ஹோமி சேத்னாவும் அமைத்த பாதையில் இன்று நாடு நடை போடுகிறது.

தனது எண்பத்தி ஏழாவது வயதில் 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் ஹோமி சேத்னா காலமானார்.

நாட்டின் பாதுகாப்புக்கு பெரும்பங்காற்றிய அறிஞருக்கு ஒரே இந்தியா தளம் தலை வணங்குகிறது. 

Thursday, 22 August 2019

கண்ணன் வருகின்ற நேரம் - ஜன்மாஷ்டமி - 23 ஆகஸ்ட்

இன்று கோகுலாஷ்டமி திருநாள். நாடுமுழுவதும் வீடுகள் எல்லாம் வாசலைப் பெருகி, நீரிட்டு மெழுகி, கோலம் இட்டு வாசலில் இருந்து கண்ணனின் காலடித் தடத்தை வரைந்து வெண்ணையும் அதிரசமும் அக்கார அடிசிலும் தயாரித்து கண்ணன் வருகைக்காக மக்கள் காத்துக்கொண்டு இருக்கும் பெருநாள்.பாரத மண்ணின் இதிகாச நாயகன் சந்தேகமே இல்லாமல் நடையில் நின்று உயர் நாயகன் ராமன்தான். ஆனாலும்  மக்களின் உள்ளம் கவர்ந்தவன் கண்ணன்தான். ஆதியும் அந்தமும் இல்லாத இறைப் பொருள் மனிதனாக தோன்றி மக்கள் வாழும் வழியைச் சொல்லிச் சென்றதுதான் கண்ணனின் கதை.

ஒரு மனிதனுக்கு எப்படியெல்லாமோ துன்பங்கள் வரலாம், ஆனால் எல்லாவற்றையும் புன்முறுவலோடு எதிர்கொள்வது எப்படி என்பதையும், மகனாக, சகோதரனாக, நண்பனாக, அரசனாக, ராஜதந்திரியாக, நல்லாசானாக எப்படியெல்லாம் சமுதாயத்தோடு பழக வேண்டும் என்பதையும், இந்த சூழல் எந்த நேரத்திலும் கட்டுப்பட்டு விடாமல் தனித்திருப்பது எப்படி என்பதையும் கற்றுக்கொடுத்தவன் கண்ணன்.

பிறப்பதற்கு முன்னமே அவனை அழிக்க எதிரி காத்துகொண்டு இருந்தான். ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்த இளமைப் பருவம், வளரும் பருவத்தில் வீசும் இடமெல்லாம் குளுமையைத் தரும் தென்றல் போன்ற செயல்கள், எப்போதும் நண்பர்கள் பட்டாளம் சூழ வாழும் வாழ்க்கை, இசையே வாழ்வா இல்லை இசையோடு வாழ்வா என்று பிரித்து அறியாதபடி குழல் ஊதி மனமெல்லாம் கொள்ளை கொண்டாடும் திறமை, அழைப்பு வந்த உடன் அதனை மறுக்காமல் மதுரா நகருக்குச் சென்று மாமன் கம்சனை வென்ற வீரம், வெற்றி பெற்று அதனால் தனக்கு உரிமையான அரசை ஏற்காமல் அதனை உக்ரசேன மஹாராஜாவிற்கே அளித்த பெருந்தன்மை, கம்சனின் மாமனாரான ஜராசந்தனின் தாக்குதலுக்கு நாட்டு மக்களை பலியிடாமல் மத்திய பாரதத்தில் இருந்து மேற்கு கடற்கரை நகரமாம் துவாரகா நகருக்கு மாறிச் சென்ற யதார்த்தவாதி, அதே ஜராசந்தனை பாண்டவர்களைக் கொண்டு அழித்த புத்திசாலித்தனம், பாண்டவர் தூதுவனாய் அமைதிப் பேச்சுவார்தையை முன்னெடுத்த அமைதியின் தூதுவன், அது முடியாமல் போக பார்த்தனுக்கு சாரதியாக அமர்ந்து, இலக்குகள்தான் முக்கியம் தனிமனிதனலல்ல என்று பாடம் நடத்திய கடமை வீரன், போர்க்களத்தில் சோர்வுற்று இருந்த அர்ஜுனனுக்கு கடமையை செய்ய உத்வேகம் ஊட்டிய மனோதத்துவ நிபுணன். கண்ணனின் பல்முக ஆளுமை என்பது நாம் எல்லோருமே அறிந்ததுதான்.

இன்றய காலத்தில் நாட்டிற்கு கண்ணன் கூறும் செய்தி என்ன ?

பிரச்சனைகளும் பின்னடைவுகளும் எல்லோர் வாழ்விலும் ஒரு தவிர்க்க முடியாத பகுதிதான். அதற்காக புலம்பிக் கொண்டு இருப்பதில் பயனில்லை. வாழுவது ஒரு வாழ்க்கை, அதை ஆனந்தமாக வாழுவது எப்படி என்பது கண்ணன் காட்டும் ஒரு  பாடம்.

இசையை ரசிக்கத் தெரியாத அல்லது இலக்கியத்தில் பரிச்சியம் இல்லாத தலைமுறைக்கு வாழ்க்கையை வாழத் தெரியாது. எனவே இவைகளில் குறைந்த பட்ச பரிட்சயமாவது இருக்க வேண்டும், இது கண்ணனின் கையில் உள்ள புல்லாங்குழல் இசைக்கும் பாடம்.

தேங்கிக் கிடக்கும் நீர் கெட்டுவிடும், வில்லில் இருந்து புறப்படாத அம்பு எந்த இலக்கையும் அடையாது. எல்லா மனிதர்களுக்கும் பயணம் என்பது மிக அவசியம். மதுரா நகரில் இருந்து கோகுலத்திற்கு, அங்கிருந்து மீண்டும் மதுரா நகருக்கு, அங்கிருந்து துவாரகாபுரிக்கு, பிறகு  அஸ்தினாபுரத்திற்கும் குருஷேத்திர படுகளத்திற்கும் என்ற கண்ணன் நடந்த பாதை காட்டும் வழி நமக்கு இதுதான்.

வேடிக்கையும் விளையாட்டும் குறும்புத்தனமும் என்று இருந்த கண்ணன் நல்லாசிரியனாக வழிகாட்டியாக ஜகதகுருவாக தன்னை வெளிகாட்டிக் கொண்டது குருஷேத்திர படுகளத்தில். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்த நாட்டில் பிறந்த மக்களுக்கு வழிகாட்டியாக அமைந்த கீதையை அங்கேதான் கண்ணன் கூறுகிறான். எழுநூறு ஸ்லோகங்களின் சாரம் என்ன ?

"ஆரியனுக்கு அடுக்காததும் புகழைக் கெடுக்கக் கூடியதுமான மனச் சோர்வை விட்டொழி. செயல் செய். செயல் புரிவது என்ற கடமைக்காக செயலைப் புரி. பலனின் மீது பற்றில்லாமல் செயல் செய். பெருந்தோளா ! பாரதா ! எழுந்து நில், செயல் புரி" இது தான் கண்ணன் நமக்கு காட்டும் வழி.

வரலாற்றின் முக்கியமான காலகட்டத்தில் நாடு இருக்கிறது, இந்த நாட்டிற்கான நமது பங்களிப்பை செய்ய நாம் செயல் பட வேண்டும். தொழில் செய்தாலும் கல்வி கற்றாலும் தேசத்தின் நன்மைக்கே என்ற அர்ப்பண உணர்வோடு செயல் செய்யவேண்டும் என்பதுதான் நமக்கு கண்ணனின் அறைகூவல்.

நம்மில் உள்ள கண்ணனை கண்டறிவோம், கண்ணனைக் கண்டடைவோம்.

நண்பர்களுக்கு ஒரே இந்தியா தளத்தின் ஜென்மாஷ்டமி வாழ்த்துகள். 

Wednesday, 21 August 2019

ஏக்நாத் ரானடே நினைவு தினம் - ஆகஸ்ட் 22.


நீலத் திரைகடல் ஓரத்திலே நித்தம் தவம் செய்யும் குமரி அன்னை. பாரத நாட்டின் தெற்கு எல்லையில் அன்னை தவம் செய்த ஸ்ரீபாத பாறையில் தவம் செய்ய கிழக்குப் பகுதியில் இருந்து ஒரு இளைஞர் வந்தார்.துறவறம் என்பது எந்த வேலையையும் செய்யாமல் இருப்பதல்ல, அது நாட்டுக்கு நாள்தோறும் உழைப்பது என்று கூறிய ஸ்வாமி விவேகானந்தர்தான அந்த இளைஞர். அதே பாறையில் ஸ்வாமிக்கு ஒரு மண்டபம் கட்ட வேண்டும், அது எண்ணற்ற பாரத இளைஞர்களை தேச சேவைக்கு தூண்டும் விளக்காக இருக்க வேண்டும் என்று பாரதத்தின் மேற்குப் பகுதியில் இருந்து ஒருவர் வந்தார். அவர்தான் ஏக்நாத் ரானடே.1914 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் நாள் மஹாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி மாவட்டத்தில் பிறந்தவர் ஏக்நாத் ரானடே. சிறு வயதிலேயே ஏக்நாத்தின் குடும்பம் நாகபுரி நகருக்கு குடியேறியது. தத்துவ இயலில் இளங்கலை படிப்பும் பின்னர் சட்டமும் பயின்றவர் ஏக்நாத் ரானடே. ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்கம் ஆரம்பித்த சிறுது காலத்திலேயே தனது பதின்ம வயதில் ஸ்வயம்சேவகராக இணைந்து கொண்டார் ஏக்நாத் ஜி. தேசபக்தியும், கொள்கைப் பிடிப்புமாக சங்கம் அவரை வார்த்தெடுத்தது. குடும்பத்தையும் இல்வாழ்கையையையும் துறந்து சங்கத்தின் முழுநேர சேவகராக பணியாற்றத் தொடங்கினார். தனது இருபத்தி நாலாம் வயதிலேயே ஜபல்பூர் நகரின் பிரச்சாரகராக நியமிக்கப்பட்டார். காந்தி கொலையைத் தொடர்ந்து சங்கம் தடை செய்யப்பட்டது. பல முழுநேர ஊழியர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஏக்நாத் ஜி தலைமறைவானார். தலைமறைவு வாழ்க்கை நடத்திக் கொண்டே சங்க பணிகளில் ஈடுபட்டார். அரசோடு நடந்த பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டார். சிறிது காலத்திலேயே காந்தி கொலைக்கும் சங்கத்திற்கும் சம்பந்தம் எதுவும் இல்லை என்று நிரூபணமாகி தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

வங்காளம், பிஹார், அஸாம் ஆகிய மாநிலங்கள் அடங்கிய பாரதத்தின் கிழக்குப் பகுதியின் க்ஷேத்திர பிரச்சாரக்காக 1950ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். பிரிவினைக்குப் பின்னால் கிழக்கு பாகிஸ்தானில் இருந்து பாரதம் வந்த ஹிந்து சகோதர்களை அரவணைத்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியை சிறப்பாக வழிநடத்தினார். சங்கத்தின் மிக முக்கியப் பொறுப்பான அகில இந்திய ப்ரச்சாரக் பிரமுக், பௌதிக் பிரமுக், சர்காரியவாக் ( செயலாளர் ) ஆகிய பொறுப்புளையும் ஏக்நாத் ஜி வகித்தார்.

1963ஆம் ஆண்டு ஸ்வாமி விவேகானந்தரின் நூறாவது ஆண்டு. அப்போது ஸ்வாமிஜியின் சிந்தனைகளை தொகுத்து " ஹிந்து ராஷ்டிரத்திற்கு ஒரு அறைகூவல்" ( Rousing Call to Hindu Nation ) என்ற புத்தகத்தை வெளியிட்டார். ஸ்வாமியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஸ்ரீபாத பாறையில் மணிமண்டபம் ஓன்று கட்ட திட்டம் உருவானது. சங்கத்தின் சார்பாக ஏக்நாத் ஜி குழுவின் செயலாளராக அடையாளம் காட்டப்பட்டார்.

பாரதம்  முழுவதும் பயணம் செய்து பொதுமக்களின் ஆதரவை விவேகானந்தரின் மண்டபத்திற்கு ஏக்நாத் ஜி திரட்டினார். முன்னூறுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை கடிதம் மூலம் தெரிவித்தனர். கட்சி வேறுபாடில்லாமல் எல்லா கட்சி தலைவர்களையும் கட்டுமானப் பணிக்கு ஆதரவு தெரிவிக்க வைத்தார். ஏக்நாத் ஜியின் அயராத உழைப்பின் காரணமாக இன்று ஸ்ரீபாத பாறையில் விவேகானந்தரின் நினைவு மண்டபம் கம்பிரமாக நிற்கிறது. அதனைத் தொடர்ந்து கன்யாகுமரி கடற்கரை அருகில் விவேகானந்த கேந்த்ராவை உருவாகும் முயற்சியில் ஈடுபட்டு அதனையும் வெற்றிகரமாக முடித்தார். இன்று விவேகானந்தா கேந்திரா பல்வேறு தேசியப் புனர் நிர்மாணப் பணிகளையும், கல்வி நிலையங்களையும் நடத்தி வருகிறது.

எந்த பலனையும் எதிர்பாராமல் நிஷ்காமியமாக  செயல்படும் கர்மயோகியாக தனது வாழ்க்கையை பெரும் குறிக்கோளுக்காக அர்ப்பணம் செய்யும் ஸ்வயம்சேவக்காக தனது வாழ்க்கையை மற்றவர்களுக்கு உதாரணமாக நடத்திக் காட்டியவர் ஏக்நாத் ரானடே ஜி அவர்கள்.

தனது அறுபத்தி ஏழாம் வயதில் 1982ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் நாள் ஏக்நாத் ஜி மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவர் உருவாக்கிய விவேகானந்தா கேந்த்ராவில் 23ஆம் நாள் மாலை சூரியன் மறையும் போது அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்து ஐம்பதாண்டுகளுக்கு மேலாக ஸ்வயம்சேவக்காக பாரதம் முழுவதும் பணியாற்றி, தெற்கு கோடியில் தனது அயராத உழைப்பினால் மிகப் பெரும் ஸ்தாபனத்தை உருவாக்கிய ஏக்நாத் ரானடே ஜியின் வாழ்க்கை நம் எல்லோருக்கும் பாடமாக அமையட்டும்.  

Tuesday, 20 August 2019

ஜீவா என்றோர் மானிடன் - ஆகஸ்ட் 21

தமிழகம் கண்ட தன்னலம் இல்லா தலைவர்களில் முக்கியமான தோழர் ஜீவா என்ற ப ஜீவானந்தத்தின் பிறந்தநாள் இன்று. காந்தியவாதியாகத் தொடங்கி பொதுவுடைமை போராளியாக பரிணமித்த தலைவர் ஜீவா. இந்த நாடுதான் எனது சொத்து என்று காந்தியிடம் ஜீவா கூற, இல்லை நீங்கள்தான் இந்த நாட்டின் சொத்து என்று காந்தியால் புகழப்பட்ட பெருமைக்கு சொந்தக்காரர். பிறப்பின் அடிப்படையில் பாரதியையும், அறியாமையால் கம்பனையும் திராவிட இயக்கங்கள் அவதூறு செய்த காலத்தில், மேடைதோறும் பாரதியையும் கம்பனையும் முழங்கி அவர்களை மக்களிடம் சேர்த்த இலக்கியவாதி தோழர் ஜீவா.நாகர்கோவில் மாவட்டத்தில் பூதப்பாண்டி நகரில் பட்டத்தார் பிள்ளை - உமையம்மாள் தம்பதியரின் மகனாக 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் நாள் பிறந்தவர் இவர். சிறுவயதிலேயே காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பள்ளிக்காலத்திலேயே தனது எழுத்தின் மூலம் காந்தியைப் பற்றியும் கதர் பற்றியும் கவிதைகளும் நாடகங்களும் எழுதி அதனை மேடையேற்றவும் செய்தார்.

ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை தண்டனை அனுபவித்தார். அப்போதுதான் பகத்சிங் மற்றும் அவர் தோழர்கள் தூக்கிலிடப்பட்டனர். போராளிகளின் மரணம் நாட்டில் பெரும் கிளர்ச்சியை உண்டு செய்தது. சிறையில் இருந்த ஜீவானந்தம் பொதுவுடைமை கருத்துக்களால் கவரப்பட்டார். பகத்சிங் எழுதிய நான் ஏன் நாத்திகன் ஆனேன் ? என்ற புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்தார். அதற்காக மீண்டும் சிறைப்பட்டார். புத்தகத்தை வெளியிட்ட ஈ வே ரா மன்னிப்பு கோரி சிறை தண்டனையில் இருந்து தப்பித்துக் கொண்டார். மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறி ஜீவா சிறையில் இருந்தார்.

1938ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக ஜீவா தேர்ந்தெடுக்கப் பட்டார். அப்போது அவரோடு தேர்வானவர்கள் தீரர் சத்தியமூர்த்தி, ராஜாஜி, காமராஜ் ஆகியோர். வழக்கம் போல உள்கட்சி பூசலால் 1939ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி இவரை கட்சியில் இருந்து நீக்கியது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்து விட்டு ஜீவா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.

அதன் பிறகு தனது வாழ்க்கை முழுவதும் பொது உடைமைவாதியாகவே ஜீவா வாழ்ந்தார். ஆங்கில அரசு கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்தது. எனவே சில ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். 1952ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராகப் பணியாற்றினார்.

இலக்கியத்தின் பால் தீராக தாகம் கொண்ட ஜீவா, தனது இறுதி காலத்தில் கலை இலக்கிய பெருமன்றத்தை துவங்கினார். இலக்கியத்தை மையப்படுத்தி 'தாமரை' இலக்கிய இதழை தொடங்கினார். 'ஜனசக்தி'  நாளிதழையும் தொடங்கினார்.

இத்தனை மக்கள் ஆதரவுடனும் பெரும்தலைவர்களுக்கு  பிடித்தமானவராக இருந்தாலும்,  துாய்மையான தலைவனாக எளிமையாகவும் இறுதிவரை நேர்மையாக தன் பொதுவாழ்வினை அமைத்துக்கொண்டார் தோழர் ஜீவா. 

உடல்நலம் குன்றிய நிலையில் கடந்த 1963-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18- ம் நாள் இயற்கை எய்தினார் ஜீவா.

கருத்துரீதியில் எதிரணியில் இருந்தாலும் எளிமையும், தூய்மையும், தேசபக்தியும் இணைந்து வாழ்ந்த மாமனிதன் தோழர் ஜீவாவின் வாழ்வு பொதுவாழ்வில் ஈடுபடும் அனைவரும் பின்பற்ற வேண்டிய பாடமாகும். 

கணினி உலகின் கதாநாயகன் - இன்போசிஸ் நாராயணமூர்த்தி - ஆகஸ்ட் 20

கல்வியும், உழைப்பும் ஒரு எளிய குடும்பத்தைச் சார்ந்த ஒருவனை எப்படி முன்னேற்றும் என்பதையும், அதன் பலன் எப்படி நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும் என்பதையும், எப்படி பல லட்சம் இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் என்பதையும், எல்லா தடைகளையும் தாண்டி எப்படி பாரதம் உலகின் முக்கியமான சக்தியாக விளங்க முடியும் என்பதை நமது கண்களுக்கு முன்னே காட்டிய வரலாறு திரு நாராயணமூர்த்தி அவர்களின் வரலாறு.கர்நாடக மாநிலத்தில் ஒரு எளிய மத்தியதர குடும்பத்தில் 1946ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி பிறந்தவர் நாராயணமூர்த்தி. அவரது தந்தைக்கு அவர் இந்திய ஆட்சிப்பணிக்கு செல்ல வேண்டும் என்பது எண்ணம். ஆனால் அன்றய இளைஞர்கள் போல நாராயணமூர்த்தி பொறியியல் துறையில் சேரவே ஆர்வம் கொண்டு இருந்தார். புகழ்வாய்ந்த இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ( IIT )  இடம் கிடைத்து இருந்தாலும், பொருளாதார நெருக்கடியால் அங்கே சேர முடியாமல் பிராந்திய பொறியியல் கல்லூரியில் ( REC ) மின் பொறியியல் இளங்கலை படிப்பில் சேர்ந்தார். பின்னர் கான்பூர் இந்திய தொழில்நுட்ப கல்லூரியில் ( IIT Kanpur ) முதுகலை பட்டம் பெற்றார்.

அஹமதாபாத் நகரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் பணி புரியத் தொடங்கிய நாராயணமூர்த்தி, கணினி துறையால் ஈர்க்கப்பட்டார். சிறிது காலம் புனா நகரில் இருந்த பத்னி கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்தார். பிறகு தன் நண்பர்களோடு இணைந்து இன்போசிஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். 1981ஆம் ஆண்டு மிகச் சிறிய முதலீட்டில் தொடங்கப்பட்ட நிறுவனம் இது. உலகம் முழுவதும் தொலைத்தொடர்பும் கணினிமயமாக்குதலும் அடுத்த இருபதாண்டுகளில் மிகப் பெரும் வளர்ச்சியை கண்டது. தங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை குறைந்த செலவில் அளிப்பதில் இன்போசிஸ் நிறுவனம் முன்னணியில் இருந்தது. எனவே அதே துறையில் இருந்த பல நிறுவனங்களைக் காட்டிலும் இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி பலமடங்கு அதிகமாக இருந்தது.

இருபதாம் நூற்றாண்டின் இறுதி பத்தாண்டுகளில் நரசிம்ம ராவால் தொடங்கப்பட்ட பொருளாதார தாராளமயமாக்கல் நாட்டின் பல்வேறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வித்திட்டது. மிகப் பெரும் இளைஞர் சமுதாயம், அதுவும் ஆங்கிலத்திலும் கணிதத்திலும் திறமையான இளைஞர் பட்டாளம் நாராயண மூர்த்திக்கு உறுதுணையாக அமைந்தது. இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி இந்த இளைஞர்களை பணக்காரர்களாக மாற்றியது. அதிகமான சம்பளம், நிறுவனத்தின் பங்குகளை அளித்தல் என்று திறமை வாய்ந்த இளைஞர்களை இன்போசிஸ் தக்க வைத்துக் கொண்டது.
வறுமைக்கோட்டுக்கு கீழேயும், மத்தியதர வர்க்கமாகவும் இருந்த பல குடும்பங்கள் பொருளாதாரத்தில் பெருமளவு முன்னேறின.  இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த பலர் பிறகு தனியாக நிறுவனங்களைத் தொடங்கி வெற்றிகரமான தொழிலதிபர்களாக விளங்குகின்றனர்.

நாராயணமூர்த்தி அவர்களின் மனைவி திருமதி சுதா மூர்த்தி இன்போசிஸ் அறக்கட்டளையை நிர்வகித்து வருகிறார். இதன் மூலம் கல்வி சுகாதாரம் போன்ற துறைகளில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை அவர் செய்து வருகிறார்.

பல்வேறு விருதுகளை பெற்ற நாராயணமூர்த்திக்கு பாரத அரசு பத்மஸ்ரீ மற்றும் பத்மவிபூஷண் விருதுகளை வழங்கி மரியாதை செலுத்தி உள்ளது.

பாரத நாட்டின் அறிவின் கூர்மையை உலகமெங்கும் பறைசாற்றிய திரு நாராயணமூர்த்திக்கு ஒரே இந்தியா தளம் தனது வாழ்த்துகளைத்  தெரிவித்துக் கொள்கிறது.

Sunday, 18 August 2019

தீரர் சத்தியமூர்த்தி பிறந்த தினம் - ஆகஸ்ட் 19

சுதந்திரத்திற்கு முன்னுள்ள காலத்தில்  காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தலைவராக விளங்கியவர் தீரர் சத்தியமூர்த்தி. பொய்யய்யே விதைத்து ஆட்சியைப் பிடித்த திராவிட சித்தாந்தத்தால் தவறாக சித்தரிக்கப்பட்ட வீரர்களில் முக்கியமான தலைவர் அவர்.இன்றய புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் என்ற ஊரில் சுந்தர சாஸ்திரிகள் - சுப்புலக்ஷ்மி அம்மாள் தம்பதியரின் மகனாக 1887ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆம் நாள் பிறந்தவர் தீரர் சத்தியமூர்த்தி. இவர் தந்தை வழக்கறிஞராகப் பணியாற்றியவர். சிறு வயதிலே சத்தியமூர்த்தி தந்தையை இழந்தார். எனவே தாயாரையும் சகோதரர்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு சத்தியமூர்த்திக்கு ஏற்பட்டது. சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் இளங்கலை வரலாறும் பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பும் முடித்து, சத்தியமூர்த்தி வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். அன்றய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஸ்ரீனிவாச ஐயங்கார் கீழ் பயிற்சி பெற்று வெற்றிகரமான வழக்கறிஞராக விளங்கினார்.

தனது கல்லூரி காலகட்டத்திலேயே மாணவர் தேர்தல்களில் பங்குகொண்டு சத்தியமூர்த்தி அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் இணைத்து, தனது பேச்சாற்றலால் முக்கிய தலைவராக உருவானார். மாண்டேகு செமஸ்போர்ட் சீர்திருத்தங்களை எதிர்த்தும் ரௌலட் சட்டத்தை எதிர்த்தும் இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு சென்று பாரதத்தின் குரலை ஒலித்த பண்டித மதன்மோகன் மாளவியாவின் தலைமையிலான குழுவில் இடம்பெற்றார். மதராஸ் ராஜதானியின் சட்டசபை உறுப்பினராகவும் பணியாற்றினார்.

சென்னையின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் பூண்டி நீர்த்தேக்கம் இவர் சென்னை மேயராக பதவி வகித்த காலத்தில் உருவாக்கியதுதான். கர்மவீரர் காமராஜரின் அரசியல் குரு சத்யமூர்த்திதான். பூண்டி நீர்தேக்கத்திற்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அலுவலக கட்டடத்திற்கும் சத்தியமூர்த்தியின் பெயரை காமராஜ் சூட்டினார். தனிநபர் சத்தியாகிரஹப் போராட்டத்தில் கலந்து கொண்டு அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார். ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டதற்காக, தடையை மீறி தேசியக் கொடியை ஏற்றியதற்காக, அந்நிய துணிக்கடை முன்பாக மறியல் செய்ததற்காக என்று பலமுறை சத்தியமூர்த்தி சிறைவாசம் அனுபவித்தார். சிறையில் இருந்தவாறே போட்டியிட்டு மத்திய நாடாளுமன்றத்திற்கு தேர்வானார்.

தீரர், சொல்லின் செல்வர், நாவரசர் சத்தியமூர்த்தி சட்டசபையில் மதுவிலக்கு, தீண்டாமை, நிற பேதம், சமூக ஏற்றத்தாழ்வுகள், மக்களின் அடிப்படை வசதிகள், பெண் கல்வி, பெண்ணுரிமை எனப் பல செய்திகளை விவாதித்து அலசியிருக்கிறார். பாரதியாரின்  கவிதை நூல்களை அரசு தடை செய்தபோது, 1.10.1928ல் இவர் பேசிய பேச்சு சட்டசபை வரலாற்றில் தனித்த சிறப்புடையது. ‘பாரதி பாடல் எழுதிய  ஏட்டை எரிக்கலாம்; அதை ப்பாடும் வாயை, கேட்டவர் மனத்து உணர்வை என்ன செய்ய முடியும்?’ என்றார். காந்தியடிகள் ‘இது போன்ற பல சத்திய மூர்த்திகள் இருந்தால் ஆங்கிலேயர் என்றோ நாட்டை விட்டு ஓடியிருப்பர்” எனப் புகழ்ந்தார்.

தமிழை ஆட்சி மொழியாக்க அப்போதே வாதாடினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக இவரும் உதவினார். கே.பி. சுந்தராம்பாளை, கிட்டப்பாவை மேடைகளில், தேசியப்பாடல்கள் பாட வைத்தார். ‘மனோகரா’ நாடகத்தில் இவர் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்ததாம். சென்னை மியூசிக் அகாடமி தோன்றவும் பெரிதும் உதவினார். உயர்ஜாதிப் பெண்கள் பரதநாட்டியம் ஆடுவது இழுக்கு என்ற நிலையை மாற்றிப் பலரையும் நாட்டியம் பயில வைத்தார்.

தான் கைபிடித்து அழைத்துக் கட்சியில் சேர்த்த காமராசரை தலைவராக்கி அழகுபார்த்தது மட்டுமல்ல, அவரது தலைமையின்கீழ் செயலாளராகப் பணியாற்றிய பெருந்தன்மை, இன்றைய அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல இளைஞர்களுக்கும் முன்னுதாரணமாகும்

தேவதாசிகள் தடை சட்டம் ஒருமனதாக நிறைவேறியதை மறைத்து, அது தவறு என்று சத்தியமூர்த்தி பேசினார் என்று உண்மைக்குப் புறம்பான செய்தியை மீண்டும் மீண்டும் பரப்பி வரலாற்றைத் திரித்து வைத்துள்ளது திராவிட இயக்கங்கள். மேலும் விவரங்கள் அறிய திரு விஜயராகவன் கிருஷ்ணன் அவர்களின் பதிவுகளைப் பார்க்கவும்.

https://www.facebook.com/vijayaraghavan.krishnan/posts/10220138703715253

தமிழும், ஆங்கிலத்திலும், வடமொழியிலும், இயல் இசை நாடகம் என்று முத்தமிழிலும் பெரும் புலமை பெற்றிருந்த தீரர் சத்தியமூர்த்தி சிறையில் ஏற்பட்ட முதுகுத் தண்டு காயத்தினால் 1943ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் நாள் காலமானார்.  

லெப்டினென்ட் ஜெனரல் அர்தேஷிர் தாராபூர் - ஆகஸ்ட் 18

பாரத நாட்டின் சேவைக்காக பாகிஸ்தானுக்கு எதிரான 1965ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் பலிதானியான லெப்டினென்ட் ஜெனரல் அர்தேஷிர் தாராபூர் அவர்களின் பிறந்ததினம் இன்று.

தாராபூரின் முன்னோரான ரத்தன்ஜிபா  சத்ரபதி சிவாஜி மஹாராஜின் படையில் தளபதியாகப் பணியாற்றியவர். இவரின் தந்தையும், பாட்டனாரும் ஹைதராபாத் நிஜாமின் அரசின் சுங்கத்துறையில் பணிபுரிந்தவர்கள். பள்ளிப்பருவத்திலேயே பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கிய தாராபூர் படிப்பை முடித்தபின் நிஜாமின் ராணுவத்தில் பணிபுரியத் தொடங்கினார். இரண்டாம் உலகப்போரின் சமயத்தில் இவரது படைப்பிரிவு மத்திய கிழக்கு நாடுகளில் பணியில் ஈடுபட்டு இருந்தது.
ஹைதராபாத் சமஸ்தானம் பாரதத்தோடு இணைந்த பிறகு 1951ஆம் ஆண்டு தாராபூர் இந்திய ராணுவத்தின் பூனா குதிரைப்படை பிரிவின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். படிப்படியாக ராணுவத்தில் முன்னேறிய அவர் 1965ஆம் ஆண்டு லெப்டினென்ட் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

1965ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் காஷ்மீர் மக்களைப் போன்று உடைகளை அணிந்துகொண்டு பாகிஸ்தான் ராணுவம் பாரத எல்லைக்குள் ஊடுருவியது. உள்ளூர் மக்கள் அளித்த தகவல்களைத் தொடர்ந்து பல்வேறு பாகிஸ்தான் ராணுவத்தினர் பாரத ராணுவவீரர்களால் கைது செய்யப்பட்டனர். கேந்ர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பிடிப்பதன் மூலமும், சாலைப் போக்குவரத்தை தடை செய்வதன் மூலமும் பாரத ராணுவத்தை நிலைகுலைய வைத்துவிட திட்டமிட்ட பாகிஸ்தான் முழுமையான போரில் இறங்கியது. செப்டம்பர் ஆறாம் நாள் பாரத ராணுவம் சர்வதேச எல்லைக்கோட்டை கடந்து பாகிஸ்தானுக்குள் புகுந்தது.

பாகிஸ்தான் பகுதியில் உள்ள சிலாகோட் நகரை கைப்பற்றி லாகூரில் இருந்து ராணுவ தளவாடங்கள் போர்முனைக்கு செல்லாமல் தடுக்கும் முன்னெடுப்பை பாரத ராணுவம் தொடங்கியது. இந்தத் தாக்குதலை இந்தியாவின் முதலாவது கவசப்படை நடத்துமாறு உத்திரவு பிறப்பிக்கப்பட்டது. தாராப்பூர் நடத்திய பூனா குதிரைப்படையும் முதல் கவசப்படையின் ஒரு பகுதியாக இருந்தது. அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அளித்திருந்த கவச வண்டிகளில் ( Military Tanks ) அறுபதை பாரத ராணுவம் அழித்தது. சிலாகோட் பகுதி பாரத ராணுவத்தின் பிடிக்குள் வந்தது. போரில் படுகாயம் அடைந்த போதிலும் தாராப்பூர் களத்தை விட்டு அகலாது தனது படைகளை நடத்தினார். பாரத ராணுவத்திற்கு மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுத் தந்த அந்த வீரர் போர்க்களத்தில் தனது உயிரைத் தியாகம் செய்தார்.

அவரது விருப்பப்படி போர்க்களத்திலேயே அவரின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இறுதிச் சடங்குகள் நடைபெறும் நேரத்தில் பாகிஸ்தான் ராணுவமும் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தனது தாக்குதலை நிறுத்தி வைத்தது.

போற்றுதலுக்குரிய நெஞ்சுரத்தை காட்டி, பலிதானியான வீரர் லெப்டினென்ட் ஜெனரல் அர்தேஷிர் தாராபூர் அவர்களுக்கு ராணுவத்தின் மிக உயரிய விருதான பரமவீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.

இந்திய நாட்டைக் காக்க தங்கள் உயிரையும் பணயம் வைக்கும் ராணுவ வீரர்களின் தியாகத்தை நாம் என்றும் போற்றுவோம்.