ஞாயிறு, 14 ஜூலை, 2013

3. புரட்சி ஓங்குக !

நைனிடால் சிறையில் இருந்து ஜவஹர்லால் நேரு தனது மகள் இந்திரா காந்திக்கு எழுதிய Glimpses of World History என்கிற கடிதங்களின் மொழிபெயர்ப்பு. 
                               --------------------------------------------------------------

ஜனவரி 3, 1931.

பிரியதர்ஷினி,

காண்பதற்கு இனியவள் நீ, காணாதபோது இன்னும் இனியவளாக இருக்கிறாய்.

இன்று உனக்கு நான் கடிதம் எழுதத் தொடங்கும்போது, வெகு தொலைவில் இடியோசை போன்ற ஒரு முழக்கத்தைக் கேட்டேன். சிறிது சிறிதாக அந்த முழக்கம் வலுப்பெற்று எங்களை நோக்கி வந்தது, நம் எல்லோருக்கும் பரிச்சியமான முழக்கம், நமது கேள்விகளுக்கு விடை தரும் முழக்கம் அது.

 இன்குலாப் ஜிந்தாபாத்                                                                 புரட்சி ஓங்குக

இந்தப் பெருமுழக்கம் எங்கள்  காதுகளுக்கு வெகு இனிமையாக இருந்தது. இதனை எழுப்புவார்கள் யார் ? ஆண்களா, பெண்களா, நகர மக்களா அல்லது கிராமத்து மனிதர்களா எதுவும் எங்களுக்குத் தெரியாது. இன்று இந்த முழக்கம் எழுப்பப்படும் காரணத்தையும் நாங்கள் அறியவில்லை. ஆனாலும், இந்தப் புரட்சிப் முழக்கத்திற்கு எங்கள் நல்வாழ்த்துகளை நாங்கள் இந்தச் சிறையில் இருந்து அனுப்பி வைத்தோம்.

நாம் ஏன் "புரட்சி ஓங்குக" என்ற முழக்கத்தை எழுப்பவேண்டும் ? மாற்றத்தையும், புரட்சியையும் நாம் ஏன் விரும்பவேண்டும் ? இந்தியா இன்று ஒரு மிகப் பெரும் மாற்றத்தை  எதிர்நோக்கி உள்ளது. அந்த மாறுதல் நடந்தபிறகும், இந்தியா சுதந்திரத்தை அடைந்த பின்னரும், நாம் ஓய்வெடுக்க முடியாது. இந்த உலகில் உயிரோடு உள்ள எல்லாமும் மாறிக்கொண்டே இருக்கின்றன. இயற்கை நொடிக்கு நொடி, நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கிறது. இறந்தவைகள் மட்டுமே மாறாமல் இருக்கும். ஓடாத தண்ணீர் குட்டையாகத் தேங்கி விடுகிறது.

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நாம் மாறிக்கொண்டே இருக்கிறோம். குழந்தைகள் சிறுமிகளாக, சிறுமிகள் இளம் பெண்களாக, இளம் பெண்கள் பருவ மங்கையர்களாக, மங்கையர்கள் பேரிளம் பெண்கள் என்று மாறுவது தான் இயற்கை. நாம் இந்த மாறுதல்களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். ஆனால் பலர் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் மனதையும், அறிவையும் மூடிக்கொண்டு எந்த புது விசயமும் அவர்களை வந்துஅடைவதை மறுத்துக் கொண்டு வாழ்கிறார்கள். யோசிப்பது என்பதே அவர்களைப் பயமுறுத்துவதாக உள்ளது.

இப்படிப் பட்ட மனிதர்களை புறம்தள்ளி உலகம் முன்னேறிச் செல்கிறது, மாறவிரும்பாத மனிதர்கள் வரலாற்றின் பக்கங்களில் இருந்து காணாமல் போய் விடுகிறார்கள். பிரெஞ்சு புரட்சி, ரஷியப் புரட்சி போன்ற நிகழ்சிகள் வரலாற்றின் திசையை முழுவதுமாக மாற்றிவிடுகிறது.

நாம் இன்று ஒரு புரட்சிக் காலத்தின் நடுவில் இருக்கிறோம். நாம் சுதந்திரத்தை விரும்பிப் போராடுகிறோம், ஆனால் வெறும் சுதந்திரம் மட்டும் அல்ல, அதனைத் தாண்டியும் பல விசயங்கள் நமக்கு தேவை. புதிய காற்று நமது நாடு எங்கும் வீச வேண்டும். பழைய கசடுகளையும், வறுமையையும், துன்பத்தையும் நாம் முழுவதுமாக அகற்ற வேண்டும். இந்தப் புனிதமான பணிக்கு பங்களிப்பதைத் தடுக்கும் வேறு வேறு எண்ணங்களை நமது மக்கள் மனதில் இருந்தும் நாம் அகற்றவேண்டும். இது ஒரு சவாலான காரியம்தான், ஆனால் நாம் முயற்சி செய்யத்தான் வேண்டும். அதற்க்கான உந்துசக்தியை இந்த முழக்கம் நமக்கு அளிக்கும்

" இன்குலாப் ஜிந்தாபாத்"                                                   " புரட்சி ஓங்குக" 

எதிர்காலம் நமக்கு எதனைத் தரும் என்பது யாரும் அறியாத ஓன்று. ஆனால் நிகழ்காலம் நமது வேலைக்கான பரிசை நிச்சயமாகத் தந்து தான் உள்ளது. அன்பான, அதே நேரத்தில் கம்பீரமான, யாராலும் தடுக்க முடியாத நமது நாட்டின் பெண்கள் இந்தப் புனிதமான வேள்வியில் தங்கள் இடத்தைத் தாங்களே எடுத்துக் கொண்டுவிட்டார்கள். நமது அழகான பெண்களைத் தடுத்து இருந்த பர்தா இன்று கண்காட்சி சாலையில் முடங்கி விட்டது.

இந்த நாட்டின் குழந்தைகள், அவர்கள் பெற்றோரைப் போல் இல்லாமல் பயம் என்பதே இல்லாமல் அடிமை விலங்கை உடைக்கத் தயார் ஆகி விட்டார்கள்.

மேலென்றும் கீழென்றும் சக்கரம் சுழல்கின்றது, அதில் தான் சரித்திரம் நிகழ்கின்றது. ஆனால் அந்தச் சக்கரத்தை மேல் நோக்கி தள்ளும் நமது கடமை நமக்கு உள்ளது

இன்குலாப் ஜிந்தாபாத்                                                             புரட்சி ஓங்குக