சனி, 21 மார்ச், 2015

ஆயுள் காப்பீடு - எது சரியான அளவு ?

ஒரு சமுதாயத்தில் அல்லது  ஒரு குழுவில் உள்ள மிகச் சிலருக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை அந்தக் குழுவில், சமுதாயத்தில் உள்ள அனைவரும் பகிர்ந்து கொள்ளும் முறைதான் காப்பீட்டின் உட்கருத்து.

உதாரணமாக ஒரு கிராமத்தில்  நூறு  வீடுகள் இருக்கின்றன என்று எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு வீடும் ஆயிரம் ரூபாய் மதிப்பு உடையவை. எதோ ஒரு காரணத்தால் ஒவ்வொரு  வருடமும் இரண்டு வீடுகள் வசிக்க இயலாமல் போய் விடுகிறது. அந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பு என்பது ரூபாய் இரண்டாயிரம். இதனை அந்த நூறு வீட்டின் உரிமையாளர்களும் பகிர்ந்து கொள்வது என்றால் அவர்கள் அனைவரும் இருபது ரூபாய் பங்களிப்பு செய்தால் போதும் அல்லவா. இப்படிதான் காப்பீடு நிறுவனங்கள் செயல்படுகின்றன. பல மக்களின் பங்களிப்பைக் கொண்டு சிலருக்கு ஏற்படும் நட்டத்தை ஈடுகட்டும் பணியே காப்பீடு நிறுவனங்களின் பணி.

மனித வாழ்வில் இரண்டு பிரச்சனைகள் வரலாம்.
                       1. மிகச் சிறிய வயதில் ஒருவர் இறக்கநேரிடலாம்
                       2. மிக அதிகமான ஆயுளோடு ஒருவர் உயிர்வாழலாம்.

முதல் நிலையில் அவரது குடும்பத்தினருக்கு பொருளாதார ரீதியில் உதவி தேவைப்படலாம். இரண்டாவது நிலையில் அவருக்கே வாழ்க்கையைக் கொண்டு செல்லப் பணம் தேவைப்படலாம். இதற்கு ஆயுள் காப்பீடு எவ்வாறு உதவும் என்பதைப் பார்ப்போம்.

அநேகமாக நம் அனைவருக்கும்  ஒரு இரண்டு சக்கர வண்டியோ இல்லை நான்கு சக்கர வண்டியோ வாங்கிய அனுபவம் இருக்கும். அப்போது அந்த வண்டிக்கு காப்பீடு செய்து இருப்போம். அந்தக் காப்பீடு என்பது அந்த வண்டியின் விற்பனை விலைக்கே செய்வோம்.எந்தப் பொருளுக்கும் அதிகபட்சமான காப்பீடு என்பது அதன் விற்பனை விலைதான்.

அப்படி என்றால் மனித உயிருக்கு விலை என்ன ? அதனை எப்படி நிர்ணயம் செய்வது. இந்தக் கேள்விக்கான பதிலை காப்பீடு செய்யப்படும் மனிதரின் வருமானத்தை வைத்து நிறுவனங்கள் முடிவு செய்கின்றன.

நாம் உரிய முறையில் காப்பீடு செய்து கொண்டு இருக்கிறோமா என்பதனை எப்படிக் கண்டுகொள்வது. இதற்க்கு ஒரு எளிய வழி இருக்கிறது.

உதாரணமாக நான் மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். இதில் உத்தேசமாக எழுவது சதவிகிதம்தான் என் குடும்பத்திற்கு வந்து சேரும். மீதி உள்ள முப்பது சதவிகிதம் பணம் பொருளீட்ட செலவாகிவிடும். வருமான வரியாகவோ, நான் பணிசெய்யும் நிறுவனத்திற்கு போய் வரும் போக்குவரத்து செலவாகவோ, என் வேலைக்காக நான் அணியும் உடைகள் என்று இந்தப் பணத்தை நான் செலவு செய்து விடுகிறேன்.

ஒரு வேலை நாளை நான் இல்லை என்றால், இந்த எழுவது சதவிகித அளவிலான பணம் என் குடும்பத்திற்கு மாதாமாதம் வரும் என்றால், அவர்கள் பொருளாதாரச் சிக்கல் இல்லாமல் இருப்பார்கள் அல்லவா ?

எவ்வளவு ஒரு தொகையை முழுவதும் பாதுகாக்கப் பட்ட முதலீட்டில் இட்டு, அதன் வட்டி வருமானம் இந்த எழுவது சதவிகித வருமானத்தை அளிக்குமோ அந்தத் தொகையே என் உயிரின் மதிப்பாக இருக்க முடியும், அந்த அளவிற்கு நான் ஆயுள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக

மாத வருமானம்                                     1,00,000
என் செலவுகள்                                           30,000
குடும்பத்திற்கு கிடைப்பது                70,000

இன்றைய நிலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கிடைக்கும் வட்டி விகிதம் 8%.

என் குடும்பத்தின் தேவை ஒரு ஆண்டிற்கு       8,40,000
ஏறத்தாழ ஒரு கோடி ரூபாய் என் குடும்பத்திற்கு என்று வங்கியில் முதலீடாக இருந்தால் இந்த அளவு பணம் அவர்களுக்குக் கிடைக்கும்.

ஆக, ஏறத்தாழ சரியான அளவிலான ஆயுள் காப்பீடு என்பது  குறைந்தபட்சமாக வருடவருமானத்திற்கு பத்து மடங்கு. ஆனால் உலக அளவில் நோக்கும்போது 8% வருட வட்டி என்பது மிக அதிகம். இது நிச்சயமாகக் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. மேலும் பணவீக்க விகிதத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், குறைந்த பட்சமாக உங்கள் வருட வருமானத்திற்கு இருபது மடங்கு காப்பீடு தேவை என்று வல்லுனர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

உங்கள் வருட வருமானம் என்ன ?
உங்களின் மொத்த ஆயுள் காப்பீடு எவ்வளவு ?