பங்குச்சந்தையில் ரத்தக் களரி. அநேகமாக எல்லா நிறுவனங்களின் பங்குகளும் விலை குறைந்து கொண்டே போகிறது. பிரதமர் மோதியின் செல்லப் பிள்ளைகள் என்று இதுவரை போராளிகளால் தூற்றப்பட்ட அம்பானி மற்றும் அதானியின் நிறுவனங்களின் பங்குகளும் விலை குறைந்துள்ளன. அவர்கள் திவாலாகப் போகிறார்கள், அவர்களையே இந்த அரசு காப்பாற்ற முடியவில்லை என்று வழக்கம் போல நமது போராளிகள் கூக்குரல் போடத் தொடங்கி இருக்கிறார்கள்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்தப் பங்குகள் ஏறத்தாழ 634 கோடி. அதில் 49% பங்குகள் அம்பானியின் வசம் உள்ளது. அதாவது 300 கோடிக்கும் சற்று அதிகமான பங்குகள் அவர் வசம் உள்ளது. அம்பானியின் சொத்து மதிப்பு என்பது அன்றய தினம் ஒரு பங்கின் மதிப்பை 300 கோடியால் பெருகினால் வரும் தொகைதான்.
கடந்த 52 வார காலத்தில் 1,600 ரூபாய் அளவில் விற்பனையான பங்கு இன்று 1,060 ரூபாய்க்கு கிடைக்கிறது. எனவே அம்பானியின் சொத்து மதிப்பு மூன்றில் ஒரு பங்கு குறைந்து விட்டது என்று போராளிகள் சொல்கிறார்கள்.
நேற்றுவரை பாரத நாட்டுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருந்த அம்பானி ( அதானியும் ) ஓட்டாண்டியானால் இவர்களுக்கு என்ன பிரச்னை ? எதற்கு இப்படியான பெரும் பணக்காரர்களுக்கு இவர்கள் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள் ?
வேறு ஒன்றும் இல்லை, மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் விதவையானால் போதும் என்ற பரந்த மனப்பான்மையின் விளைவுதான் இது.
திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா என்று காகிதத்தில் எழுதி நக்கிப் பார்த்தால் அது இனிக்காது. அதை அங்கே நெல்லையப்பர் கோவில் எதிரில் மாலை ஆறு மணிக்கு மேலே வரிசையில் இன்று வாங்கி சாப்பிட்டுப் பார்த்தால்தான் அதன் சுவை தெரியும்.
அதுபோல பங்கு மதிப்பை கைவசம் உள்ள பங்குகளின் எண்ணிக்கை கொண்டு பெருக்கி சொத்து மதிப்பை கணக்கிடுவது சிறிய முதலீட்டாளர்களுக்கு வேண்டுமானால் சரியாக வரும், பெரும்தொழிலதிபர்களின் சொத்தை அப்படி கணக்கிடுவது சரிவராது.
ஏன்னென்றால் ஒருவேளை பங்கு ஓன்று 1,600 ரூபாய்க்கு விற்பனையான சமயத்தில் தனது 300 கோடி பங்குகளை விற்பனை செய்ய அம்பானி முடிவு செய்தால், உடனடியாக பங்கின் விலை அதள பாதாளத்தில் விழுந்து விடும்.
நாம் வைத்திருக்கும் நூறு அல்லது இருநூறு பங்குகளை விற்பதால் எந்த நிறுவன பங்கின் விலையும் பெரிய அளவில் மாறாது, ஆனால் பெரிய அளவில் பங்குகள் விற்பனைக்கு வந்தால் விலை வீழ்ச்சி அடையும் என்பது பொருளாதாரத்தின் பால பாடம்.
தொழில்செய்பவருக்கு லாபம் மிக அவசியம், ஆனால் தொழில் நடத்துவதில் உள்ள சவால்தான் பணத்தைக் காட்டிலும் அவர்களை தூண்டுவது.
ஆகவே போராளிகளே ! அம்பானியும், அதானியும் அவர்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள். உங்கள் வேலையை மட்டும் நீங்கள் செய்தால் போதும்.
https://www.ril.com/ar2018-19/ril-annual-report-2019.pdf
2018 - 19ஆம் ஆண்டுக்கான ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையை இதோடு இணைத்து இருக்கிறேன். படித்துப் புரிந்து கொள்ள முயற்சி செய்யவும்.