இத்தனை பேர் கருத்து சொல்லும் போது, நான் மட்டும் சும்மா இருந்தால் எப்படி ? தமிழ் கூறும் நல் உலகம் வருத்தம் அடையாதா ?
இப்படி பதிவு போடும் எத்தனை பேர், தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளில் அல்லது அரசு உதவி பெறும் கல்வி நிறுவனத்தில் சேர்த்து உள்ளனர் ? நாம் செய்யாத ஒன்றை அல்லது செய்ய விரும்பாத ஒன்றை ஏன்
மற்றவர்கள் மீது திணிக்க வேண்டும் ?
பிரச்சனை என்ன என்பது நமக்கு எல்லாருக்கும் தெரியும். பொதுவாக அரசு பள்ளிகள் தரம் நன்றாக இல்லை. அதற்காக தனியார் மெட்ரிக் பள்ளிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று சொல்ல வரவில்லை.
ஒரு அரசாங்கத்தின் கடமை என்பது சாராயம் விற்பது அல்ல. ஒரு அரசாங்கத்தின் கடமை நல்ல கல்வி, நல்ல மருத்துவ வசதி, நல்ல சாலைவசதி மற்றும் சட்டம் ஒழுங்கை காப்பது தான். இங்கு நமது நாட்டில் இது தலை கீழாக உள்ளது.
அரசு பள்ளிகளின் பிரச்னை என்ன என்று பார்ப்போம்
போதிய ஆசிரியர்கள் இல்லாதது
இருக்கும் ஆசிரியர்களை மற்ற பணிகளை செய்ய அரசு நிர்பந்திப்பது
அளவுக்கு அதிகமான மாணவர்கள் எண்ணிக்கை
பொதுவாக குறைந்து வரும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மனப்பான்மை
இது போக பொருளாதரத்தில் பின்தங்கியுள்ள குடும்பத்தில் உள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் படிப்பை பற்றி கவலை படுவதே இல்லை.
முப்பது மாணவர்களை தான் ஒரு ஆசிரியர் நல்லபடியாக கவனிக்க முடியும். பல அரசு உதவி பெறும் நிறுவனங்களில் ஒரு வகுப்புக்கு எழுவது பிள்ளைகள் இருக்கிறார்கள். இது பெரும்பாலும் பெண்கள் பள்ளிகளின் நிலைமை. போதிய ஆண் மாணவர்கள் இல்லாததால் பல பள்ளிகள் இன்று இரு பாலர் பள்ளிகளாக மாறி உள்ளது.
இலவச பேருந்து வசதி என்பது நல்ல எண்ணம்தான். ஆனால் அதன் பலன் என்ன என்றால், பல கிராமத்தில் இருக்கும் பிள்ளைகள் அருகில் உள்ள நகர பள்ளிகளுக்கு வருகிறார்கள். கிராமங்களில் மாணவர் வருகை குறைவாக இருப்பதால் ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படவில்லை. இது கோழியா அல்லது முட்டையா என்பது போன்ற சிக்கல்.
ஆனாலும் இதனை எல்லாம் சரி செய்து விட முடியும். தேர்தலில் வென்ற எல்லா மக்கள் பிரதிநிகளும் கட்டாயமாக தங்களின் பிள்ளைகளை அரசு நாம் தான் சேர்க்கவேண்டும் என்பதை சட்டப்படி கட்டாயம் என்று செய்தால் போதும். ஒரு சட்டமன்ற உறுப்பினரின் மகனோ அல்லது பாராளுமன்ற உறுப்பினரின் பேத்தியோ படிக்கும் பள்ளி, உடனடியாக தரம் உயர்ந்து விடும்.
அரசியல் வாதிகள் இதை செய்யாமல், அரசு உழியர்கள் நிச்சயம் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள்
இதனை செய்யாமல், மீதி எல்லாம் புண்ணுக்கு புனுகு தடவும் வேலையை போன்று தான் இருக்கும்.
அரசாங்கத்தின் வருமானம் எழுவது சதம், அரசு உழியர்களுக்கு சம்பளமாகவும், பென்ஷன் என்றும் செலவானால், வளர்ச்சி என்பது கானல் நீர்தான்.
இன்னும் எனக்கு ஆசிரியர்கள் மீது நம்பிக்கை குறைந்து விட வில்லை. சரியான கண்காணிப்பும், தொடர்ந்த பயிற்சியும் ஆசிரியர்களை மிக நல்ல ஆசிரியர்களாக மாற்றும்.
நாம் விரும்பும் மாற்றம் என்பது நம்மிடம் இருந்தே தொடங்கட்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக