திங்கள், 11 ஆகஸ்ட், 2025

குதிராம் போஸ் பலிதான தினம் - ஆகஸ்ட் 11

ஆக்கிரமிப்பாளர்களுக்கு அவர்களுக்குப் புரியும் மொழியில்தான் பேசவேண்டும், வெடிகுண்டுகளும், துப்பாக்கி உமிழும் தோட்டாக்களும்தான் அவர்களுக்குப் புரியும் என்றால் அதனை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை என்று முடிவெடுத்து ஆங்கில ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய வீரர்கள் பாரதநாட்டில் ஏராளம். அதில் மிகமுக்கியமானவர் குதிராம் போஸ். பதினெட்டு ஆண்டுகளே  வாழ்ந்து தூக்குக்கயிற்றை முத்தமிட்ட பாரதத்தாயின் மிக இளைய வீரன் இவர்.  




வங்காள மாநில மித்னாபூர் மாவட்டத்தில் உள்ள ஹாப்பிபூர் கிராமத்தில் த்ரிலோகநாத் போஸ் - லக்ஷ்மிப்ரியா தம்பதியினரின் நான்காவது மகனாக 1889ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் நாள் பிறந்தவர் குதிராம். இவருக்கு முன்னர் பிறந்த இரண்டு ஆண் பிள்ளைகளும் இளைய வயதில் இறந்து போனதால், இவரை தானியத்திற்கு ஈடாக கொடுத்துவிட்டால் காப்பாற்றிவிடலாம் என்று நம்பிய இவர் தாயார் இவரது சகோதரிக்கு மூன்று கைப்பிடி தானியத்திற்கு தத்து கொடுத்துவிட்டார். குதி என்ற வங்கமொழி சொல்லுக்கு தானியம் என்று பொருள். அதனால் இவர் பெயர் குதிராம் என்று ஆனது.

மிகச் சிறுவயதில் பெற்றோர் இருவரையும் இழந்த குதிராமை அவர் சகோதரியும் சகோதரி கணவரும் ஆதரித்து படிக்க வைத்தனர். பள்ளிப்பருவத்திலேயே அரவிந்தர், சகோதரி நிவேதிதா ஆகியோரின் சொற்பொழிவுகளை கேட்டு குதிராம் நாட்டுப்பற்றாளராக உருவானார்.

1905ஆம் ஆண்டு வைஸ்ராய் கர்சன் வங்காளத்தை இரண்டாகப் பிளந்தார். பின்னர் நாடு பிரிவினையாக இதுவே தொடக்கமாக அமைந்தது. வங்காளப் பிரிவினையை எதிர்த்து நாடெங்கும் போராட்டங்கள் தொடங்கின. வங்காளத்திலும் பஞ்சாபிலும் ஆயுதப் போராட்டம்தான் சரி என்று எண்ணிய இளைஞர்கள் பலர் பல்வேறு குழுக்களாக இணைந்தார்கள். புரட்சியாளர்கள் பலர் இருந்த அனுசீலன் சமிதி  என்ற குழுவில் குதிராம் தன்னை இணைத்துக் கொண்டார். இதனைத் தலைமையேற்று நடத்தியவர் மகரிஷி அரவிந்தரின் சகோதரர் பரிந்த்ரகுமார் கோஷ்

மித்னாபூர் மைதானத்தில் சத்யன் போஸ் எழுதிய தங்க வங்கம் என்ற துண்டுப்பிரசுரத்தை விநியோகம் செய்யும் போது காவலர் ஒருவர் இவரை பிடிக்க முயன்றார். ஆனால் காவலரைத் தாக்கிவிட்டு குதிராம் தப்பியோடி விட்டார். ஆனால் மீண்டும் ஆங்கில காவலர்களால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். மிக இளவயது என்பதால் நீதிபதி இவரை விடுதலை செய்தார்.

அந்தக்காலத்தில் கொல்கத்தா நீதிமன்றத்தில் கிங்ஸ்போர்ட என்ற நீதிபதி பணியாற்றிவந்தார். சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மிக கொடூரமான தண்டனைகளை வழங்குவதில் அவர் பெயர் போனவர். ஒரு வழக்குக்காக பிபின் சந்திரபால் நீதிமன்றம் வந்தபோது சுஷில் சென் என்ற பதினான்கு வயது சிறுவன் ஒருவன் வந்தேமாதரம் என்று கோஷமிட்டான். அதற்காக அவனை பதினைந்து கசையடி அளிக்குமாறு நீதிபதி கிங்ஸ்போர்ட உத்தரவிட்டார். ஒவ்வொரு அடிக்கும் சுஷில் சென் வந்தேமாதரம் என்று முழங்கியவாறு இருந்தார்.

விடுதலைப் போராட்ட வீரர்களைக் கடுமையாகத் தண்டிக்கும் நீதிபதியை கொலை செய்வது என்று அனுசீலன் சமிதி என்ற அமைப்பு முடிவு செய்தது. அதன் முதல் முயற்சியாக புத்தகத்துக்குள் வெடிகுண்டை வைத்து நீதிபதியின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் சந்தேகமடைந்த நீதிபதி அதனை காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டார். காவலர்கள் அந்த குண்டை செயலிழக்க வைக்க நீதிபதி கிங்ஸ்போர்ட் உயிர் தப்பினார்தொடர்ந்த கொலை மிரட்டல்களால் ஆங்கில அரசு நீதிபதி கிங்ஸ்போர்டை பிஹார் மாநிலத்தின் முசாபர்பூர் நகரத்திற்கு இடமாற்றம் செய்தது. இடம் மாறினாலும் குறி மாறவில்லை. முசாபர்பூர் நகரத்திற்குச் சென்று நீதிபதியை கொலை செய்வது என்று அனுசீலன் சமிதி முடிவு செய்ததுஅதனை செய்து முடிக்க குதிராம் போஸ் முன்வந்தார். பிரபுல்ல சாகி என்ற இளைஞர் குதிராமின் துணைக்கு வந்தார்.  குதிராம் போஸும் பிரபுல்ல சாகியும் பிஹார் சென்றனர்.

அங்கே ஒரு சத்திரத்தில் தங்கி இருந்து அவர்கள் தொடர்ந்து நீதிபதியை கண்காணித்து அவரை எப்படி கொலை செய்வது என்ற திட்டத்தை முடிவு செய்தனர். பொதுவாக நீதிபதிகள் மக்களோடு கலந்து பழக்கமாட்டார்கள். அதிலும் கொலைமிரட்டலுக்கு உள்ளான நீதிபதி கிங்ஸ்போர்ட் வெளியில் எங்குமே செல்வதில்லை. நீதிமன்றத்திற்குச் சென்று தனது பணிகளை முடித்துவிட்டு பின்னர் நாள்தோறும் இரவு ஆங்கிலேயர்கள் கூடும் கிளப் ஒன்றுக்குச் சென்று சிறிது நேரம் அங்கே தங்கிவிட்டு வீடு திரும்புவது கிங்ஸ்போர்டின் பழக்கம். வீட்டுக்குத் திரும்பும் வழியில் அவரது வண்டியின் மீது வெடிகுண்டு வீசுவது என்று முடிவானது. ஒருவேளை அதில் நீதிபதி தப்பிவிட்டால் அவரை சுட்டுக் கொல்ல துப்பாக்கிகளும் கைவசம் இருந்தது.

1908ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் நாள் நீதிபதியைக் கொலைசெய்வது என்று குதிராம்போஸும் பிரபுல்ல சாக்கியும் நாள் குறித்தார்கள். அன்று அந்த கிளப்பிற்கு  நீதிபதிக்குத் தெரிந்த கென்னடி என்பவரின் மனைவியும் மகளும் வந்திருந்தார்கள். நீதிபதி கிங்ஸ்போர்ட் அவர்கள் இருவரையும் இரவு உணவுக்கு தனது வீட்டிற்கு அழைத்தார். தனித்தனியான ஒரே மாதிரியான சாரட் வண்டிகளில் அவர்கள் கிளம்பினார்கள். வெளியில் காத்துகொண்டு இருந்த குதிராம்போஸ் முதலில் வந்த வண்டி மீது கையெறி குண்டுகளை வீசினார். சாரட் வண்டி சுக்குநூறாக உடைந்து சிதறியதுபெருத்த சத்தத்தோடு பெரும் புகை மண்டலமாக அந்த இடம் காட்சி அளித்தது. ஆனால் அந்த வண்டியில் வந்தது நீதிபதி கிங்ஸ்போர்ட அல்ல, துரதிஷ்டவசமாக திருமதி கென்னடியும் அவர் மக்களும்தான் அந்த வண்டியில் இருந்தார்கள். குண்டு வீச்சில் அவர்கள் இருவரும் பலியானார்கள்இறந்தது நீதிபதி அல்ல என்பதை அறியாமல் சம்பவ இடத்தை விட்டு போராட்ட வீரர்கள்அகன்று  விட்டனர். தனித்தனியாக பயணம் செய்து வங்காளத்தை அடைவது என்பது அவர்களின் முடிவு.

 மே 1ஆம் நாள் பிரபுல்ல சாகியை சந்தேகத்தின் பேரில் காவல்துறை கைது செய்ய முயற்சி செய்தபோது, அவர் தன்னை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரபுல்ல சாக்கியை கைது செய்ய முயன்றவர் இன்ஸ்பெக்டர் நந்தலால் பானர்ஜீ. இந்த சேவைக்காக ஆங்கில அரசு பானர்ஜீக்கு ரூபாய் ஆயிரத்தை ஊக்கத்தொகையாக வழங்கியது. ஆனால் மற்றொரு ஊக்கப்பரிசை அவருக்கு அளிக்க போராளிகள் முடிவு செய்தார்கள். அதே ஆண்டு  நவம்பர் 9ஆம் நாள் மாலை வீட்டில் இருந்து வெளியே வந்த பானர்ஜீமீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. தடுமாறி கீழே விழுந்த பானர்ஜீ அருகில் வந்த இரண்டு போராளிகள் நிதானமாக அவர் மீது இன்னும் சில துப்பாக்கி குண்டுகளைப் பாய்ச்சி விட்டு அவர் இறந்து விட்டார் என்பதை உறுதி செய்து கொண்டு அங்கே இருந்து விலகிச் சென்றார்கள். கடைசி வரை இந்தக் கொலையைச் செய்தது யார் என்பதை ஆங்கில அரசால் கண்டு பிடிக்க முடியவில்லை

இரவு முழுவதும் நடந்தும் ஓடியும் களைப்பாக இருந்த குதிராம் வைனி நகரை அடைந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த காவலர்கள் அவரை கைது செய்ய முயற்சித்தனர். அவர்களைத் துப்பாக்கியால் சுட குதிராம் முயற்சி செய்தார். ஆனால் அதில் வெற்றிபெறாமல் அவர் கைது செய்யப்பட்டார்கைவிலங்கு இடப்பட்டு குதிராம் மே மாதம் ஒன்றாம் நாள் முசாபர்பூர் நகரத்திற்கு அழைத்து வரப்பட்டார். வழக்கு விசாரணை தொடங்கியது. குதிராம் கொலைக்கான முழு பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டார். குறி வைக்கப்பட்டது நீதிபதிக்குத்தான், தவறுதலாக இரண்டு பெண்கள் இறந்து விட்டார்கள், அதற்காக வருந்துகிறேன், அதற்கான முழுப் பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

குதிராமுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. எந்த விதமான சலனமும் இல்லாமல் சிரித்த முகத்தோடு குதிராம் அதனை எதிர்கொண்டார். ஏதாவது சொல்லவேண்டுமா என்ற நீதிபதியின் கேள்விக்கு " நேரமும், உங்களுக்கு ஆர்வமும் இருந்தால் உங்களுக்கு வெடிகுண்டு தயாரிக்க கற்றுக் கொடுக்கிறேன் என்று குதிராம் பதில் சொன்னார்.

தனது வழக்கறிஞர்களின் வற்புறுத்தலால் குதிராம் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அங்கேயும் மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. தண்டனைக்கான நாளாக ஆகஸ்ட் மாதம் 11ஆம் நாள் நிர்ணயிக்கப்பட்டது.

12 - 8 - 1908 அமிர்த பஜார் பத்திரிகை குதிராமின் முடிவுஎன்ற தலைப்பிட்டு, பெரிய எழுத்துக்களில் தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தது. “மகிழ்ச்சி யோடும் புன்னகையோடும் அவன் மரணமடைந்தான்இறுதிச் சடங்கு அமைதியாய் நடந்ததுகாலை 6 மணிக்கு அவனைத் தூக்கிலேற்றினார்கள். அவன் கையில் பகவத்கீதையை ஏந்திக்கொண்டு தூக்கு மேடையை நோக்கி கம்பீரமாக நடந்து சென்றான்தலையில் கறுப்புத்துணியை மூடும் வரை அவன் மரணத்தை அலட்சியப்படுத்தும் புன்னகையோடு நின்றான்என்று அப்பத்திரிகை, செய்தி வெளியிட்டது

 இந்தக் கொலை சம்பந்தமாக அனுசீலன் சமிதியின் பல உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள். இந்த விசாரணை அலிப்பூர் சதி வழக்கு என்று அறியப்படுகிறது. கைதானவர்களில் முக்கியமானவர்கள் அரவிந்த கோஷும் அவர் சகோதரர் பைரேன் கோஷும். அரவிந்தருக்காக வழக்காட வந்தவர் சித்தரஞ்சன்தாஸ். ஏற்கனவே ஐ சி எஸ் தேர்வை வேண்டுமென்றே அரவிந்தர் புறக்கணித்ததும், பரோடாவில் இருந்தும் கொல்கத்தாவில் இருந்து அவர் எழுதிய கட்டுரைகள் மூலமாகவும் அரவிந்தருக்கும் இந்தக் கொலைக்கும் தொடர்பு உண்டு என்று அரசு நம்பியது. ஆனால் அதனை ஆதாரபூர்வமாக நிரூபிக்க அவர்களுக்கு போதுமான சாட்சியங்கள் இல்லை. அனுசீலன் கட்டமைப்பின்படி அமைப்பின் மேல்மட்டத் தலைவர்களோடு உறுப்பினர்களுக்கு எந்த தொடர்பும் இருக்காது

 எனவே தொடர்ச்சியான மிரட்டல்கள்மூலமும் பின்னர் அரவிந்தருக்கு எதிராக சாட்சி சொன்னால் மன்னித்துவிட்டுவிடுவதாகவும் சொல்லி நரேன் கோஸ்வாமி என்பவரை அரசின் சாட்சியாக காவல்துறை மாற்றியது. இதற்கிடையில் சிறையில் இருந்து தப்பிக்க போராளிகள் திட்டம் தீட்டினர். ஆனால் நரேன் கோஸ்வாமியின் வாக்குமூலம் அரவிந்தருக்கு எதிராக ஆகிவிடும் என்பதால் தப்பிக்கும் முயற்சிக்கு பதிலாக கணிலால் தத்தா, சத்யேந்திரநாத் பாசு ஆகிய இருவரும் ஏற்கனவே சிறைக்குள் கடத்தி வரப்பட்ட கைதுப்பாக்கிகள் மூலம் நரேன் கோஸ்வாமியை சுட்டுக் கொன்றனர். பழி வாங்கும் நடவடிக்கையாக குதிராம் போஸை கைது செய்த காவல் அதிகாரியை அனுசீலன் சமிதி உறுப்பினர்கள் சுட்டுக் கொன்றனர்

அலிப்பூர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றியவர் ஆஷு பிஸ்வாஸ் என்பவர். போராளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதற்காக அவர் தன்னாலான எல்லா வேலைகளையும் செய்து வந்தார். இப்படிப்பட்ட துரோகியை களையெடுப்பது என்று போராளிகள் முடிவு செய்தார்கள். இதைச் செய்ய முன்வந்தவர் சாருசந்திரபாஸு என்ற இளைஞர். பிறவியிலேயே இவருக்கு வலதுகை மணிகட்டுக்கு கீழே கிடையாது. பிப்ரவரி 10ஆம் நாள் தனது ஊனமான வலதுகையில் துப்பாக்கி ஒன்றை கட்டி வைத்துக்கொண்டு நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஆஷு பிஸ்வாஸை அவர் சுட்டுக் கொன்றார். நீதிமன்ற விசாரணையில் கலந்து கொள்ளாமல், வேறு எந்தப் போராளிகளையும் காட்டிக்கொடுக்காமல் "வழக்கறிஞர் ஆஷு பிஸ்வாஸ் பாரதநாட்டின் எதிரி, எந்த குற்றமும் செய்யாத நிரபராதிகளை தண்டனை அடைய வைத்ததற்காக நான் அவரைக் கொன்றேன்" என்று மட்டும் சாருசந்திரபாஸு கூறினார். 1909ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் நாள் சாருசந்திரபாஸு தூக்கிலிடப்பட்டார். புன்முறுவலோடு அந்த இளைஞன் பாரதத்தாயின் பாதத்தில் அர்ப்பணமானார்

அலிப்பூர் சதிவழக்கின் தீர்ப்பு வெளியானது. அரவிந்தரின் சகோதரர் பைரேன் கோஷுக்கும் உல்லாஸ்கர் தத்துக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் மேல்முறையீட்டில் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. அவர்கள் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார்கள்உபேந்திரநாத் பானர்ஜீ, இந்துபூஷன்ராய் உள்ளிட்ட பதின்மூன்று பேரை நாடு கடத்தவும், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், மூன்று பேருக்கு பத்தாண்டு கடுங்காவல் தண்டனை என்றும் அடுத்த மூன்று பேருக்கு ஏழாண்டு சிறை தண்டனை என்றும் தீர்ப்பானதுஅரவிந்தர் உள்ளிட்ட பதினேழு பேர் மீதான குற்றம் சரிவர நிரூபிக்கப்படாத காரணத்தால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்