பாரத ரத்னா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரத ரத்னா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 1 - ராஜரிஷி புருஷோத்தமதாஸ் டான்டன் பிறந்ததினம்

உத்திரப்பிரதேசத்தின் முக்கியமான சுதந்திரப் போராட்ட வீரர், உத்திரப்பிரதேச மாகாணத்தின் சட்டசபையின் நீண்டகால சபாநாயகர், காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர், அரசியலமைப்பு நிர்மாண சபையின் உறுப்பினர், வழக்கறிஞர், பாரதரத்னா விருது பெற்றவர் என்ற பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர் திரு புருஷோத்தமதாஸ் டான்டன் அவர்களின் பிறந்த தினம் இன்று 

1982ஆம் ஆண்டில் ப்ரயாக்ராஜ் நகரில் திரு சாலிக்ராம் டான்டன் அவர்களின் மகனாகப் பிறந்தவர் திரு புருஷோத்தமதாஸ் டான்டன். வரலாற்றுத் துறையில் முதுகலைப் பட்டமும் அதனோடு சட்டப் படிப்பையும் முடித்து விட்டு ப்ரயாக்ராஜ் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத்  தொடங்கினார்.முன்னணி வழக்கறிஞரும் விடுதலைப் போராட்ட வீரருமான தேஜ் பகதூர் சப்ருவின் வழிகாட்டுதலில் புருஷோத்தமதாஸ் டான்டன் தனது வழக்கறிஞர் சேவையை நடத்தினார். 1906ஆம் ஆண்டில் தனது வழக்கறிஞர் சேவையைத் தொடங்கிய டான்டன் 1921ஆம் ஆண்டு அந்தத் தொழிலில் இருந்து விலகி முழுநேர மக்கள் பணிக்குத் தன்னை அர்பணித்துக் கொண்டார். 



மிக இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில்  தன்னை இணைத்துக் கொண்ட டான்டன் ஜாலியன்வாலாபாக் படுகொலையை விசாரிக்க காங்கிரஸ் கட்சி நியமித்த குழுவில் பணியாற்றினார். ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரஹம் போன்ற பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைத்தண்டனை அனுபவித்தார். 1937ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பதின்மூன்று ஆண்டுகள் உத்திரப்பிரதேச சட்டசபையின் சபாநாயகர் பொறுப்பில் பணியாற்றனார்.

1948ஆம் ஆண்டு நடந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தலில் - ஆமாம் அப்போதெல்லாம் ஆண்டுதோறும் தேர்தல் வைத்து தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் காங்கிரஸ் கட்சிக்கு இருந்தது - பட்டாபி சீதாராமையாவை எதிர்த்துப் போட்டி இட்டார். ஆனால் அந்த ஆண்டு அவர் வெற்றி பெற முடியவில்லை. பின்னர் 1950ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆச்சாரிய கிருபளானியை எதிர்த்துப் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். ஆனால் நேரு அவர்களின் கருத்துக்களோடு ஒத்துப்போகாததால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

நாடு பிளவுபடுவதை கடுமையாக எதிர்த்தார். பிரிவினை என்பது உறுதியான பிறகு இந்தியாவில் உள்ள எல்லா முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானில் உள்ள எல்லா ஹிந்துக்களை இந்தியாவிற்கும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினராக தேர்வானார்.  1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராகவும் பின்னர் 1956ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.

இந்தியாவின் தேசிய மொழியாக காந்தி பரிந்துரைத்த ஹிந்தியும் உருதுவும் கலந்த ஹிந்துஸ்தானி மொழிக்கு பதிலாக தேவநாகரி எழுத்தில் உள்ள ஹிந்தியைத்தான் நாட்டின் தேசியமொழியாக அறிவிக்க வேண்டும் என்று வாதாடினார்.

மதமாற்ற தடுப்பு சட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்று அரசியல் அமைப்பு நிர்ணய சபையில் புருஷோத்தமதாஸ் டான்டனும், குலபதி முன்ஷியும் பரிந்துரைத்தனர்.

இவரது சேவைகளைப் பாராட்டும் விதமாக பாரத அரசு நாட்டின் மிக உயரிய விருதான பாரதரத்னா விருதை இவருக்கு வழங்கி மரியாதை செலுத்தியது.

தனது எழுபத்தி ஒன்பதாவது வயதில் 1962ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் நாள் டான்டன்  காலமானார்.  

செவ்வாய், 29 ஜூலை, 2025

ஜூலை 29 - ஜெ ஆர் டி டாடா பிறந்ததினம்


இஸ்லாமிய படையெடுப்பில் இருந்து தப்பி ஜொராஸ்டர்கள் என்னும் பார்சி இன மக்கள் பாரத நாட்டில் தஞ்சம் அடைந்தனர். அன்று குஜராத்  பகுதியை ஆண்ட மன்னன் ஒரு கொள்கலம் நிறைய பாலை அவர்களுக்கு அனுப்பி வைத்தானாம். பார்சி மத பூசகர் கையளவு சர்க்கரையை அதில் போட்டு திருப்பி அனுப்பினாராம். எங்கள் நாட்டில் ஏற்கனவே அதிகமான மக்கள் இருக்கிறார்கள் என்பது அந்த மன்னன் அனுப்பிய செய்தி, பாலில் கலக்கும் சர்க்கரை தனியாகத் தெரிவதில்லை ஆனால் அது சுவையைக் கூடும் அதுபோல நாங்கள் இந்த மண்ணில் வேறுபட்டுத் தெரியமாட்டோம், ஆனால் இந்த மண்ணின் வளத்தைக் கூட்ட எங்களால் முடிந்த பங்களிப்பைச் செய்வோம் இது அந்த பூசகரின் பதில். நடந்ததோ இல்லையோ தெரியாது, ஆனால் பாரத நாட்டில் மிகச் சிறுபான்மையாக இருந்துகொண்டு, நாட்டின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிய இனம் பார்சி இனம். அந்த இனத்தின் தன்னிகரில்லாத தாரகையாக ஒளிவீசியவர் ஜஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா - சுருக்கமாக ஜெ ஆர் டி டாடா.

புகழ்பெற்ற டாடா குடும்பத்தில் ரத்தன்ஜி தாதாபாய் டாடாவிற்கும்  பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த அவரது மனைவியான சூஸ்சானாவிற்கும் மகனாக 1904ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் நாள் பிறந்தவர் ஜஹாங்கிர் டாடா. தாயார் பிரெஞ்சு நாட்டவர் என்பதால் ஜஹாங்கீரின் இளமைப் பருவம் பிரெஞ்சு நாட்டிலேயே கழிந்தது. அவரது பள்ளிப்படிப்பும் அங்கேயே நடந்தது. டாடா நிறுவனங்களின் பணிக்காக அவரது தந்தை வேறுவேறு நாடுகளில் பணியாற்ற இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இந்தியா என்று குடும்பமும் அவரோடு செல்ல பல்வேறு இடங்களில் ஜஹாங்கிர் படிக்க நேர்ந்தது. தாயாரின் மரணத்தை அடுத்து ரத்தன்ஜி தனது குடும்பத்தை இந்தியாவுக்கே கொண்டு வந்தார். தனது மேல்நிலைக் கல்வியை இங்கிலாந்து நாட்டில் முடித்த ஜஹாங்கிர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்க முடிவு செய்தார். ஆனால் அப்போது பிரெஞ்சு நாடு இருபது வயதான இளைஞர்கள் அனைவரும் இரண்டாண்டு கட்டாய ராணுவ சேவை புரியவேண்டும் என்று சட்டமியற்றியது. ஆமாம், இந்தியாவின் புகழ்பெற்ற தொழிலதிபர் அப்போது பிரெஞ்சு குடிமகனாகத்தான் இருந்தார். அரசின் ஆணையை ஏற்று ஜஹாங்கிர் பிரெஞ்சு ராணுவத்தில் பணிபுரியத் தொடங்கினார். தரைப்படையில் இணைந்த அவ்ருக்கு பிரெஞ்சு மொழியோடு ஆங்கிலமும் பேசவும் எழுதவும் தெரியும் என்பதையும் அதோடு அவருக்கு தட்டச்சும் தெரியும் என்பதால் அவரை பிரெஞ்சு தளபதி ஒருவரின் உதவியாளராக ராணுவம் பணிமாற்றம் செய்தது. கட்டாய ராணுவ சேவையை முடித்துவிட்டு மீண்டும் கல்லூரிக்குச் செல்ல ஜஹாங்கிர் திட்டமிட்டுக் கொண்டு இருந்தபோது, அவர் தந்தை அவரை டாடா நிறுவனத்தில் பணியாற்ற அழைத்தார். தனது பிரெஞ்சு குடியுரிமையை 1929ஆம் ஆண்டு துறந்த ஜஹாங்கிர் முறைப்படி இந்திய குடிமகனாக மாறினார்.

இதனிடையே 1925ஆம் ஆண்டு டாடா நிறுவனத்தில் சம்பளம் இல்லாத பயிற்சி பெரும் தொழிலாளியாக இணைந்தார். மாபெரும் வணிக சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பும் வரலாறு அங்கேதான் தொடங்கியது. 1938ஆம் ஆண்டு தனது 34ஆவது வயதில் டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான TATA SONS நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஐம்பது  ஆண்டுகள் அவர் இந்தப் பதவியில் இருந்து செயல்பட்டார். பதினான்கு நிறுவனங்களாக இருந்த குழுமத்தை தொண்ணூற்று ஐந்து நிறுவனங்கள் கொண்ட மாபெரும் ஸ்தாபனமாக அவர் வார்த்தெடுத்தார். நிறுவங்களின் எண்ணிக்கை, கொள்முதல் வரவு செலவு, நிகர லாபம், மிகப் பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கியது என்பதெல்லாம் போக டாடா நிறுவனம் என்றால் ஒரு நெறிமுறை தவறாத நிறுவனம் என்றும் தரமான பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்ற பெயரை எடுத்ததுதான் அவரது ஆகப் பெரும் சாதனையாக இருக்கும்.

டாடா மோட்டார்ஸ், டைட்டான் கடிகாரத் தொழில்சாலை, டாடா கம்ப்யூட்டர்ஸ், டாடா கன்சுலேட்டன்சி சர்வீசஸ் என்று டாடா நிறுவனங்களின் பொருள்களை உபயோகிக்காத இந்திய மக்களே இருக்க முடியாது.



பாரத நாட்டில் முதல் முதலாக விமானம் ஓட்டும் தகுதிச் சான்றிதழைப் பெற்றவர் ஜஹாங்கிர் டாடாதான். அவர் தொடங்கிய டாடா விமான போக்குவரத்து நிறுவனம்தான் இன்று ஏர் இந்தியா நிறுவனமாக மாறி உள்ளது. ஆனாலும் அவரது விமான சேவையை தேசியமயமாக்கியத்தில் டாடாவிற்கு வருத்தம்தான். 1932ஆம் ஆண்டு கராச்சியில் இருந்து அஹமதாபாத் வழியாக மும்பை நகருக்கு தபால்களை தன்னந்தனியாக ஜஹாங்கிர் தனது விமானத்தில் கொண்டு வந்தார். இந்திய விமானப் போக்குவரத்துத்துறை அன்றுதான் தொடங்கியது. இந்த நிகழ்வின் முப்பதாவது ஆண்டு நிறைவிலும் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அதே போன்ற சிறிய விமானம் ஒன்றை அதே கராச்சி மும்பை நகருக்கு இடையே ஜஹாங்கிர் ஓட்டினார். இந்த நிகழ்வின் ஐம்பதாவது ஆண்டு என்பது 1982, அப்போது அவருக்கு வயது எழுபத்தி எட்டு.



வெறும் தொழிலதிபராக மட்டும் இருந்து பணம் சம்பாதிப்பதை மட்டுமே பொதுவாக பார்சி தொழிலதிபர்களும் குறிப்பாக டாடா குழுமமும் தங்கள் இலக்காக வைத்துக் கொள்வதில்லை. பொதுவாக அவர்களின் குழுமங்களின் பெரும்பான்மையான பங்குகள் அவர்கள் நடத்தும் தொண்டு நிறுவனங்களின் பெயரில்தான் இருக்கும். எனவே பெரும்பான்மையான லாபம் என்பது மக்களின் தேவைகளுக்கே செலவிடப் படும். அப்படி டாடா நிறுவனம் முன்னெடுத்த இயக்கம் குடும்ப கட்டுப்பாடு மற்றும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது.

அதுபோக மும்பை நகரில் தொடங்கப்பட்ட இந்தியாவின் முதல் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனை, Tata Institute of Social Science, Tata Institute of Fundamental Research ஆகியவை ஜஹாங்கிர் டாடாவால் நிறுவப்பட்டவை. அரசால் சட்டப்படி கட்டாயமாக்குவதற்கு முன்னமே தங்கள் தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேர விலை, இலவச மருத்துவ சிகிச்சை, தொழிலாளர் சேம நிதி ஆகியவற்றை தங்கள் நிறுவனங்களில் ஜஹாங்கிர் டாடா அறிமுகப்படுத்தினார்.

பல்வேறு விருதுகளையும் மரியாதைகளையும் பெற்ற ஜஹாங்கிர் டாடாவிற்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரதரத்னா விருதை அரசு 1992ஆம் ஆண்டு வழங்கியது. இந்த விருதை பெற்ற முதல் தொழிலதிபர் டாடாதான். இன்றுவரை வேறு எந்த தொழிலதிபரும் இந்த விருதைப் பெறவில்லை.

1993ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம்  நாள் ஸ்விட்சர்லாந்து நாட்டில் தனது 89ஆம் வயதில் ஜெ ஆர் டி டாடா காலமானார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாடாளுமன்றம் தனது நடவடிக்கைகளை ஒத்திவைத்தது. பொதுவாக நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்கள் மறைவுக்கு இப்படி செய்வது மிக அரிது.

பாரத பொருளாதார வரலாற்றையோ அல்லது தொழில் வரலாற்றையோ எழுதும் போது ஜஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாடாவிற்கு ஒரு தனி இடம் இருக்கும் என்பதில் ஐயமே இல்லை.

புதன், 16 ஜூலை, 2025

ஜூலை 16 - விடுதலைப் போராட்ட வீராங்கனை அருணா ஆசப் அலி பிறந்தநாள்

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் நாள், பம்பாய் நகரத்தில் கூடிய காங்கிரஸ் மாநாடு வெள்ளையனே வெளியேறு என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. எல்லா முன்னணித் தலைவர்களையும் உடனடியாக பிரிட்டிஷ் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அடுத்த நாள் கூட்டத்திற்கு 32 வயதே ஆன ஒரு இளம் பெண் தலைமை வகித்தார். மாநாட்டில் அன்று காங்கிரஸ் கொடியை அவர் ஏற்றினார். பாரத நாட்டின் மிகப் பெரும் போராட்டம் தொடங்கியது. கூட்டத்தில் புகுந்து வெள்ளையர்களின் காவல்துறை கண்முடித்தனமாக தாக்கியது, துப்பாக்கிச்சூடு நடத்தியது. தனது உயிரை துச்சமாக எண்ணி போராட்டத்தை முன்னெடுத்த அருணா ஆசப்அலியின் பிறந்தநாள் இன்று.


அன்றய பஞ்சாப் மாநிலத்தில் கல்கா நகரில் ஒரு உணவு விடுதியை நடத்திக்கொண்டு இருந்த வங்காளத்தை சேர்ந்த உபேந்திரநாத் கங்குலி - அம்பாலிகா தேவி தம்பதியினரின் மகளாக 1909 ஆம் ஆண்டு பிறந்தவர் அருணா கங்குலி. இவர் தாயார் வழி தாத்தா த்ரிலோக்நாத் சன்யால் பிரம்ம சமாஜத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவர்.

தனது பள்ளிக்கல்வியை லாகூர் நகரிலும் கல்லூரிப்படிப்பை நைனிடால் நகரிலும் முடித்த அருணா கங்குலி கொல்கத்தா நகரில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டு இருந்தார். அலஹாபாத் நகரில்  புகழ்பெற்ற வழக்கறிஞரான ஆசப் அலி பகத்சிங், படுகேஸ்வர் தத் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களுக்காக  வாதாடியவர். விடுதலைப் போராட்ட களத்தில் அருணா கங்குலி சகபோராளியாக நண்பராக ஆசப் அலியோடு அறிமுகமானார். ஒத்த அலைவரிசையில் இருந்த அவர்கள் காதல் வயப்பட்டார்கள் 

இருபத்தி ஒரு வயது வித்தியாசமும், வெவ்வேறு மதம் என்பது அருணாவின் காதலுக்கு குறுக்கே நிற்கவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்களின் எதிர்ப்பையும் மீறி அருணா ஆசப் அலியைத் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்திற்கு காந்தி, நேரு, ராஜாஜிசரோஜினி நாயுடு, அபுல் கலாம் ஆஜாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே ஆசப் அலி விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் இருந்ததால், அருணாவும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். உப்பு சத்தியாகிரகத்தில் பங்குபெற்று சிறைத்தண்டனை அனுபவித்தார். 1931ஆம் ஆண்டு ஏற்பட்ட காந்தி இர்வின் ஒப்பந்தத்தை அடுத்து நாட்டின் எல்லா அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட்ட போதும் அருணா விடுதலை செய்யப்படவில்லை. அவரோடு சிறையில் இருந்த எல்லா பெண் கைதிகளும் தாங்களும் சிறையில் இருந்து வெளியே போகப் போவதில்லை என்று போராடியபிறகே அருணா விடுதலை செய்யப்பட்டார்.

1932ஆம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட அருணா ஆசப் அலி, சிறையில் அரசியல் கைதிகள் மரியாதையாக நடத்தப்படவேண்டும் என்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். கைதிகளின் நிலையில் மாற்றம் வந்தது, அதோடு அருணா அம்பாலா சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கே அவருக்கு தனிமைச்சிறை தண்டனை வழங்கப்பட்டது.

சிறையில் இருந்து விடுதலையான அருணா ஆசப் அலி, சிறிது காலம் அரசியலில் தீவிரமாக ஈடுபடாமல் இருந்தார். ஆனால் நாட்டின் கொந்தளிப்பான நிலைமை அவரை அமைதியாக இருக்கவிடவேயில்லை. 1942ஆம் ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கொடியை ஏற்றி அதிகாரபூர்வமாக வெள்ளையனே வெளியேறு போராட்டத்தைத் தொடங்கி வைத்த அருணா தலைமறைவானார். ஆகஸ்ட் புரட்சியின் கதாநாயகி தலைமறைவு வாழ்க்கையில் இருந்தாலும் வட இந்தியா முழுவதும் புரட்சிக்கனலை கொழுந்து விட்டு எரியச் செய்துகொண்டுதான் இருந்தார். 

ராம் மனோகர் லோஹியாவுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியின் இன்குலாப் என்ற மாதாந்திர பத்திரிகையை வெளியிட்டுக்கொண்டும், வானொலி ஒலிபரப்பின் மூலமாக மக்களிடம் உரையாடிக்கொண்டும் இருந்தார். இன்குலாப் பத்திரிகையின் 1944ஆம் ஆண்டு இதழில் ஆயுதம் ஏந்தியா அல்லது அகிம்சை வழியிலா என்று விவாதித்துக் கொண்டு இருக்காதீர்கள், போராட்டத்தில் இறங்குங்கள், எந்த வழியானாலும் தவறில்லை என்று ஜெயப்ரகாஷ் நாராயணனோடு இணைந்து பாரத நாட்டு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். காந்தியின் அரசியல் வாரிசுகள் இப்போது மார்க்ஸின் மாணவர்களாக மாறிவிட்டார்கள் என்று அன்றய பத்திரிகைகள் எழுதின.

அருணாவைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரூபாய் ஐயாயிரம் பரிசு என்று ஆங்கில அரசு அறிவித்தது. 1946ஆம் ஆண்டு அவர் மீதான கைது ஆணை ரத்து செய்யப்பட்ட பின்னர்தான் அருணா வெளியுலகத்திற்கு தன்னைக் காட்டிக் கொண்டார். சூரியனே அஸ்தமிக்காத அரசு என்று பெருமை பேசிக்கொண்ட ஆங்கில அரசு ஒரு பாரதப் பெண்மணியிடம் தோற்று மண்டியிட்டது. பம்பாயில் தொடங்கிய இந்தியா கப்பல் படை கிளர்ச்சியை அருணா ஆதரித்தார். இது இந்த நாட்டின் ஹிந்துக்களுக்கு முஸ்லீம்களுக்குமான உறவை வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, அருணா ஆசப் அலி காங்கிரஸ் கட்சியின் சோசலிச பிரிவில் தீவிரமாக இயங்கினார். பின்னர் சிறிது காலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். பின்னர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். டெல்லியின் முதல் மேயர் பதவியை வகித்தார்.

நேரடி அரசியலில் இருந்து விலகிய அருணா பெண்கள் முன்னேற்றதிற்காக கமலாதேவி சட்டோபாத்யாய உடன் இணைந்து பணி செய்யத் தொடங்கினார்.

1964ஆம் ஆண்டு சோவியத் அரசு அருணாவிற்கு லெனின் அமைதிப் பரிசை வழங்கியது. 1992ஆம் ஆண்டு பாரத அரசு பத்ம விபூஷண் விருதையும் அவர் மரணத்திற்குப் பிறகு 1997ஆம் ஆண்டு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் வழங்கி அவரை கவுரவித்தது.

1996ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் நாள் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அருணா ஆசப் அலி காலமானார்.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் பக்கங்களில் அருணா ஆசப் அலிக்கு தனியான இடம் ஓன்று எப்போதும் இருக்கும்.