1947 - 1948 ஆண்டுகளில் நடைபெற்ற பாகிஸ்தானோடான போரில் மகத்தான வீரச் செயலுக்கான பரம்வீர் சக்ரா விருது பெற்றவர் நாயக் ஜாதுநாத்சிங்.
1916 நவம்பர் 21ல் உத்தரப் பிரதேசத்திலுள்ள ஷாஜஹான்பூர் அருகே கஜூரி என்ற கிராமத்தில் பிரபால்சிங் ரத்தோர் ஜமுனா கன்வார் தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் ஜாதுநாத். ஏழு ஆண்பிள்ளைகளும் ஒரு பெண்ணும் என்ற எட்டுப்பேர் கொண்ட பெரிய குடும்பத்தின் மூன்றாவது மகன் இவர். பொருளாதாரத்தில் கடினமான சூழ்நிலையில் இருந்த குடும்பத்தில் பிறந்ததால் இவர் நான்காம் வகுப்புவரைதான் படிக்க முடிந்தது. பிறகு விவசாயத்தில் தனது தந்தைக்கு ஜாதுநாத் உதவியாக இருந்தார். வட இந்தியாவின் பல பகுதிகளில் மற்போர் ஒரு முக்கியமான விளையாட்டும் பொழுதுபோக்கும் ஆகும். சிறு வயதில் இருந்தே மற்போரில் ஈடுபட்டு பல பரிசுகளையும் பதக்கங்களையும் ஜாதுநாத் வென்றார். ஹனுமான் போன்ற பலசாலி என்று மக்கள் அவரைப் புகழ்ந்தார்கள்.
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜாதுநாத் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் இணைந்துகொண்டார். முறையான ராணுவப் பயிற்சிகள் முடிந்த பிறகு ஜாதுநாத் ராஜ்புத் படைப்பிரிவுக்கு அனுப்பப்பட்டார். ராஜ்புத் படைப்பிரிவு ஏறத்தாழ இருநூற்று இருபத்தி ஐந்து ஆண்டு கால வரலாறு கொண்ட பாரத ராணுவத்தின் பழமையான படைப்பிரிவாகும். 1798ஆம் ஆண்டு முதல் உலகின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய அனுபவம் இந்தப் படைக்கு உண்டு. இந்தப் படையின் குறிக்கோள் "ஸர்வத்ர விஜய்" அதாவது எல்லா இடங்களிலும் வெற்றி அல்லது எல்லாப் போர்களிலும் வெற்றி என்பதாகும். இவர்களின் போர் முழக்கம் " போல் பஜ்ரங்கபலி கி ஜெய்" என்பது. ஒரு பரம்வீர் சக்ரா, மூன்று அசோக சக்ரா, ஐந்து பரம் விஷிஸ்ட சேவா பதக்கங்கள், ஏழு மஹாவீர் சக்ரா, பனிரெண்டு கீர்த்தி சக்ரா, ஐந்து அதி விஷிஸ்ட சேவா பதக்கங்கள், அறுபத்தி ஆறு வீர் சக்ரா, இருபது சூரிய சக்ரா, எட்டு யுத்த சேவா பதக்கங்கள், முன்னூற்றி பதின்மூன்று சேவா பதக்கங்கள், பத்தொன்பது விஷிட்ட சேவா பதக்கங்கள் என்று பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்த பெருமை இந்தப் படைப்பிரிவுக்கு உண்டு. பாரத ராணுவத்தின் தலைமைத் தளபதியாகப் பணியாற்றிய ஜெனரல் கரியப்பா மற்றும் ஜெனரல் வி கே சிங் ஆகியோர் ராஜ்புத் படைப்பிரிவைச் சார்ந்தவர்கள்.
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இந்தப் படை பர்மா நாட்டின் அர்கான் பகுதியில் நடைபெற்ற போரில் கலந்து கொண்டது. இவரது ராஜ்புத் படைப்பிரிவு அங்கே கிராமம் கிராமாக முன்னேறி ஜப்பானியப் படைகளை வென்றது. ஒரு கட்டத்தில் இவரது படைப்பிரிவு ஜப்பானிய தாக்குதலில் தனிமைப்படுத்தப்பட்டது. கடும் போருக்குப் பிறகு உயிருடன் இருந்தவர்களை மீட்டு இந்தியா கொண்டுவந்தனர்.
1945ல் இவரது படைப்பிரிவு அந்தமான் தீவுகளைக் காக்க அங்கிருக்கும் படையுடன் சேர்ந்துகொள்ள ஆணைவந்தது. அங்கே இருந்த ஜப்பானியப் படை சரணடைந்ததும் அக்டோபர் 1945ல் இவரது படைப்பிரிவு தில்லி வந்தது. சிப்பாய் ஜாதுநாத் நாயக்காக பதவி உயர்வு பெற்றார். தேச விடுதலைக்குப் பிறகு புதிய படைப்பிரிவுக்குப் போன ஜாதுநாத் அங்கே பயிற்சிகளில் ஈடுபட்டு வீரர்களை பலசாலிகளாக மல்யுத்ததிலும் பயிற்றுவித்தார்.
அதே காலகட்டத்தில் காஷ்மீரைக் கைப்பற்ற பட்டாணியர்களை பாகிஸ்தான் அனுப்பியது. காஷ்மீரைக் கைப்பற்ற பாரத ராணுவம் களம் இறங்கியது. ஒரே சமயத்தில் ஸ்ரீநகரையும் ஜம்மு பகுதியிலும் பாகிஸ்தான் ஊடுருவியது. வடக்கே பூஞ்ச் பகுதி முதல் தென்கிழக்கே கதுவா வரை கைப்பற்றுவது அவர்களின் இலக்கு. பூஞ்ச், கோட்லி, மிர்பூர், ஜங்கர், நௌஷாரா, ரஜோரி ஆகிய நகரங்களை அவர்கள் சுற்றி வளைத்தனர். பாரத ராணுவம் வரும்வரை ஜம்மு காஷ்மீர் மகாராஜாவின் படை ஊடுருவல்காரர்களைத் தடுத்து நிறுத்திக் கொண்டு இருந்தது.
ஊடுருவல்காரர்கள் அனைவரையும் விரட்டி காஷ்மீரைக் காப்பாற்ற ராணுவத்திற்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டது. மேஜர் ஜெனரல் கல்வந்சிங் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். குர்தாஸ்புர் நகரில் இருந்து ஒரு படைப்பிரிவு ஜம்முவிற்கு விரைந்தது. ஜங்கர் மற்றும் நௌஷாரா பகுதிகளைக் காப்பாற்றுவது முக்கியமான சவாலாக இருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக ஜங்கர் பகுதியை பாரத ராணுவத்தால் காப்பாற்ற முடியவில்லை. 1947ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் பாகிஸ்தானியர்கள் இந்த நகரத்தைக் கைப்பற்றினார்கள். மேலும் பாகிஸ்தானியர்கள் ஊடுருவாமல் தடுக்க நௌஷாரா நகரின் வடமேற்குத் திசையில் இருந்து தொடர்ச்சியான தாக்குதல்களை பாரத ராணுவம் மேற்கொண்டது. புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிரிகேடியர் முகமது உஸ்மான் தனது படையை சிறிய அணிகளாகப் பிரித்து பல்வேறு இடங்களில் நிறுத்தினார், நௌஷாரா நகரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது டைன்தர் என்ற இடம். இதனைக் காவல் காக்கும் பொறுப்பு ஜாதுநாத்சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. ஒரு சிறிய படைப்பிரிவு அவருக்கு அளிக்கப்பட்டது. அந்தப் படைக்கு அவர் தலைமை தாங்கினார்.
1948ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் நாள். அதிகாலை நேரம், சூரியன் அப்போதுதான் உதித்துக்கொண்டு இருந்தது. தொலைவில் ஆள் நடமாட்டம் இருப்பதாய் ஜாதுநாத் சிங் பார்த்தார். மலைமுகத்தில் இருந்து அலையலையாக பாகிஸ்தானிய ராணுவம் கீழே இறங்கிக்கொண்டு இருந்தது. நூற்றுக்கணக்கான வீரர்கள் எதிரே வந்துகொண்டு இருந்தார்கள். ஜாதுநாத்சிங்கிற்கும் அவரது மிகச் சிறிய படைக்கும் ஓன்று போரிட்டு வீரமரணம் அடைவது அல்லது எதிரியிடம் சரணடைவது என்ற இரண்டு வாய்ப்புகளில் ஒன்றுதான் இருந்தது. உயிரோடு திரும்பிச் செல்வது என்பது இயலாத ஓன்று என்பது நிச்சயமாகத் தெரிந்தது.
வீரர்கள் பிறக்கிறார்களா அல்லது உருவாக்கப்படுகிறார்களா ? இது இன்றும் விடை தெரியாத கேள்வி. சவாலான நேரத்தில் எடுக்கப்படும் முடிவுதான் ஒருவரை வீரர் என்று பிரகடனப் படுத்துகிறது. ஸர்வத்ர விஜய் - அதாவது எதிர்கொள்ளும் போரில் எல்லாம் வெற்றி, இதுதான் ராஜ்புத் படைப்பிரிவின் குறிக்கோள். உயிரைக் கொடுத்து முடிந்தவரை எதிரிப் படையை அழித்து, அவர்கள் முன்னேற்றத்தைத் தடுப்பது என்று ஜாதுநாத்சிங் முடிவு செய்தார்.
இருபுறமும் துப்பாக்கிக் குண்டுகள் வெடிக்கத் தொடங்கியது. இயந்திரத் துப்பாக்கிகள் தோட்டாக்களை உமிழும் சப்தமும், கையெறி குண்டுகளால் ஏற்படும் புகையும் அந்த மலைப்பிரதேசத்தில் எதிரொலிக்கத் தொடங்கியது. பணமும், பொருளும், கைபற்றிச் செல்ல இருக்கும் பெண்களும் பட்டாணியர்களை வெறியேற்ற, நாட்டின் மானத்தையும் படைப்பிரிவின் கௌரவத்தையும் காப்பாற்றும் தேவைக்காக ஜாதுநாத்சிங்கின் சிறிய படை அவர்களைத் தடுத்து நிற்க அந்த நிலம் ரத்தத்தால் சிகப்பு நிறமாக மாறத் தொடங்கியது. இறந்து விழும் ஒவ்வொரு பட்டாணியருக்கும் குறைந்தது இரண்டு பேர் அதே இடத்தில இருந்து தாக்கத் தொடங்கினார்கள். முதல் தாக்குதலை ஜாதுநாத்சிங்கின் படை வெற்றிகரமாக முறியடித்தது. ஆனால் பாரதப் படையில் பல வீரர்கள் படுகாயம் அடைந்தார்கள்.
பட்டாணியர்கள் இரண்டாவது முறையாகத் தங்கள் தாக்குதலைத் தொடர்ந்தார்கள். மீண்டும் கடுமையான சண்டை, இதில் ஜாதுநாத்சிங்கின் படைவீரர்கள் அனைவரும் வீரமரணம் அடைந்தார்கள். எதிரிகள் பக்கமும் கடுமையான உயிர்சேதம். மீண்டும் பின்வாங்கிய பட்டாணியர்கள் மீதமுள்ள தங்கள் ஆட்களையும் சேர்த்துக்கொண்டு அடுத்த தாக்குதலைத் தொடங்கினார்கள். தனி ஒருவனாக அவர்களை ஜாதுநாத்சிங் எதிர்கொண்டார்.
ரத்தம் சொட்டும் கையோடு பதுங்குகுழியில் இருந்து வெளியே வந்து எதிரிகளை நோக்கி ஜாதுநாத்சிங் சுடத் தொடங்கினார். தனது பாதுகாப்பைப் பற்றி கொஞ்சமும் கவலை கொள்ளாமல் ஜாதுநாத்சிங் தாக்கத் தொடங்கியது எதிரிகளை குழப்பியது. ஏற்கனவே பலரை இழந்திருந்த பட்டாணியர்கள் நிலைகுலைந்து பின்வாங்கினார்கள். எட்டு குண்டுகளை உடல்முழுவதும் தாங்கி ஜாதுநாத்சிங் வீரமரணம் அடைந்தார். .
எல்லையைக் காத்து நிற்கும் வீரர்களுக்கு துணையாக நமது படையின் பெரும் பிரிவு ஓன்று வந்து சேர்ந்தது. தோற்று ஓடும் பட்டாணியர்களையும், அதனைப் பார்த்தவாறே கண்களைத் திறந்தபடி வீரமரணம் அடைந்த ஜாதுநாத்சிங் மற்றும் அவரது சகாக்களை உயிரற்ற உடலாகத்தான் பார்க்க நேர்ந்தது.
ஜாதுநாத்சிங்கின் மகத்தான வீரத்தைக் கெளரவம் செய்யும் வகையில் பாரத நாடு அவருக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக