வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

ராபின்சன் பூங்கா முதல் திருக்கழுக்குன்றம்  வரை

வாழ்க்கை என்பது பலர் நினைப்பது போல முழுவதும் வெண்மையாகவோ அல்லது கறுப்பாகவோ இருப்பதில்லை. இரண்டும் கலந்த சாம்பல் நிறத்தில்தான் அது உள்ளது. அதுபோல்தான் எந்த ஒரு செயலும் எல்லோருக்கும் நலம் தருவதாகவோ அல்லது அனைவருக்கும் பிரச்சனையை உண்டு செய்வதாகவோ இருப்பதில்லை. எந்த அளவிலான நல்லதைச் செய்யவேண்டும் என்று நினைத்துச் செய்யப்படும் செயலும் சிலருக்குத் துன்பம் விளைவிக்கவே செய்யும். தனிமனிதர்களின் வாழ்விலேயே இதுதான் இயற்கையின் நியதி என்றால் பல கோடி மக்களின் வாழ்க்கையை முடிவு செய்யும் இடத்தில் இருக்கும் அரசியல் தலைவர்களின் முடிவுகள் மட்டும் இந்த விதிக்குக் கட்டுப்படாமலா இருக்கும் ?

வரலாறு என்பது இரக்கமற்றது. ஆட்டத்தில் பங்குகொள்ளாமல் நேர்முக வர்ணனை மட்டும் செய்பவர் போல அது உண்மைகளைப் பதிவு செய்து கொண்டு சென்று கொண்டே இருக்கிறது. வாழுகின்ற காலத்தில் மிகப்பெரும் ஆளுமைகளாக அறியப்பட்ட பலர் அவர்கள் இறப்பிற்குப் பின்னர் சிறிது சிறிதாகத் தேய்ந்து மக்கள் மனதிலிருந்து மறைந்து போய் விடுகின்றனர். அவர்களின் அடுத்த தலைமுறை அல்லது பின்தொடர்பவர்களின் தவறுகளுக்கான சிலுவையைச் சிலர் பல ஆண்டுகாலம் சுமக்கும் நிலைமையும் பலருக்கு ஏற்படுகின்றது.

பொதுவாகவே பாரதத்தின் புதல்வர்கள் உணர்ச்சிவசப்பட்டவர்கள். எந்தவிதமான அலங்காரங்களும் இல்லாமல் உண்மையைப் பதிவு செய்வதும், காய்தல் உவத்தல் இன்று மக்களை எடைபோடுவதும் நமது வழக்கமல்ல. நமது தலைவர்கள் அவர்கள் தொண்டர்களுக்குத் தவறே செய்யாத தெய்வப்பிறவிகள், எதிர்முகாமில் இருப்பவர்களுக்கோ அவர்கள் தீமையின் மொத்த உருவமாக மட்டுமே காட்சி அளிப்பவர்கள். இதற்கு நடுவில் உண்மையான உண்மையைத் தேடுவது என்பது கடினமான செயலாகத்தான் இருக்கிறது. ஊடும் பாவுமாக எதிரெதிர் தகவல்களைத் தரும் வெவ்வேறு பார்வையைத் தரும் புத்தகங்களைத் தேடிப்படிப்பது என்பது நம்மில் பலரும் செய்யாத, செய்ய விரும்பாத ஒன்று.

                                            

இந்தப் பின்புலத்தில் ஜோதிஜியின் "ராபின்சன் பூங்கா முதல் திருக்கழுக்குன்றம்   வரை" என்ற புத்தகம் மிக முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. 1857ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சுதந்திரப் போரைத் தொடர்ந்து நாடு முழுவதும் அந்நியர் ஆட்சிக்கு எதிரான சிந்தனைகளும், போராட்டங்களும் கூர் வடிவம் கொண்டன. ஆட்சி அதிகாரத்தை எவ்வளவு வருடங்கள் முடியுமோ அவ்வளவு காலம் கையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிய ஆங்கிலேயர்கள் பல்வேறு விதமாக அந்தப் போராட்டங்களை எதிர்கொள்ளத் தொடங்கினர். வற்றாமல் ஓடும் கங்கை நதியைப்போல பல்வேறு மூலப் பொருள்களைத் தந்து, உற்பத்தியான பொருள்களுக்கான பெரும் சந்தையாக விளங்கும் நாட்டை விட்டுவிட்டுப் போக அவர்கள் என்ன மனநலம் குன்றியவர்களா என்ன ?

இந்தப் பின்புலத்தில் உள்ள ஏறத்தாழ நூற்றாண்டு காலத் தமிழக அரசியல் வரலாற்றைத் தொட்டுச் செல்கிறது இந்த நூல். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலத்தில் நீதிக்கட்சியில் தொடங்கி, காங்கிரஸ் வழியே திராவிட ஆட்சிகளின் வரலாற்றை அநேகமாக எந்தச் சார்பு நிலையும் இல்லாது தமிழக அரசியல் வரலாற்றைத் தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு ஓர் ஆரம்ப நிலை கையேடாக உள்ளது. சென்ற நூற்றாண்டின் முதல் ஐம்பது ஆண்டுகளை மிகச் சுருக்கமாகப் பேசும் இந்த நூல், காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, எம் ஜி ராமச்சந்திரன், ஜெயலலிதா என்ற ஐந்து முதல்வர்களின் ஆட்சிக் காலம் பற்றி எழுதி இருக்கிறார். அதோடு மிகச் சுருக்கமாக பக்தவச்சலம் அவர்களின் ஆட்சி பற்றியும் பேசினாலும் பெருவாரியாக இந்த ஐந்து முதல்வர்களின் வரலாற்றின் தொகுப்புதான் இந்த நூல்.

பெரியாரின் பொருந்தாத திருமணத்தை ஏற்றுக்கொள்ளாமல் ராபின்சன் பூங்காவில் திமுக என்ற அரசியல் கட்சியை அண்ணாதுரை தொடங்கினார். அதே திமுகவிலிருந்து விலக்கப்பட்டு எம் ஜி ஆர் தனிக்கட்சி தொடங்கினார். தாங்கள் ஏற்காத செயல்களுக்கான விளைவுகள்தான் இந்தக் கட்சிகளோ அல்லது ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒரு முடிவை நியாயப்படுத்த இந்தச் செயல்களை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்களா? என்ற ஒரு விவாதமும் ஒருபுறம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

கடந்த எழுபதாண்டுக்காலத் தமிழக வரலாற்றின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தை அளிப்பதில் ஜோதிஜி வெற்றியடைந்துள்ளார் என்றுதான் கூறவேண்டும். தொடர்ந்து தமிழக அரசியலைப் பின்தொடர்பவர்களுக்கு இந்த நூல் எந்த புதிய தகவலையும் அளிக்காது ஆனால் முப்பது வயதிற்கு உள்பட்ட முதல்முறையாகவோ அல்லது இரண்டாவது முறையாகவோ வாக்களிக்க இருக்கும் இளைய தலைமுறைக்கு ஓர் அறிமுக நூலாக இது விளங்கும். அப்படியான எண்ணத்தில்தான் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளேன் என்று ஜோதிஜி கூறியுள்ளார்.

அரசியலில் தொடக்கநிலை வாசகர்களுக்காக நூல் என்பதால் சங்கடமான, பிரச்சனையான விஷயங்களுக்குள் ஜோதிஜி செல்லவே இல்லை. ஆனால் அவைகளுக்கான சில முடிச்சுகள் அங்கங்கே உள்ளன. அதனை இனம் கண்டுகொண்டு அவைகளைத் தேடிப் படிப்பவர்கள் யாராவது உருவானால் சரிதான்.

கொரோனா பெருந்தொற்றின் ஊரடங்கு காலத்தை உருப்படியாகச் செலவிட்டு ஒரு நல்ல புத்தகத்தை உருவாக்கிய ஜோதிஜிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக