வெள்ளி, 3 ஜூலை, 2020

சர்வாதிகாரத்தை எதிர்த்த தனி ஒருவன் - நீதிபதி ஹன்ஸ்ராஜ் கன்னா ஜூலை 3


பாரத வரலாற்றில் ஆட்சியாளர்களால் மறைக்கப்பட்ட பக்கங்கள் என்று பல உண்டு. அதில் மிக முக்கியமானது 1975ஆம் ஆண்டு இந்த நாட்டின் சட்டதிட்டங்கள் அனைவற்றையும் கிழித்து எறிந்துவிட்டு, இந்த நாட்டை சர்வாதிகாரப் போக்கில் கொண்டு சென்ற அன்றய பிரதமர் இந்திரா அறிவித்த நெருக்கடிநிலை பிரகடனம். நீதிமன்றம் மூலமாக மக்களவை வெற்றி செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இந்திராவின் நெருக்கடி இந்தியாவின் நெருக்கடியானது. அவசரச் சட்டத்தின் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டன. எல்லா எதிர்க்கட்சி தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிகைகள் கடுமையான தணிக்கைக்கு உள்ளானது. எந்தவிதமான எதிர்ப்பு எழுந்தாலும் அது கடுமையான முறையில் அடக்கப்பட்டது.

ஆனால் உச்சநீதிமன்றத்தில் ஒரே ஒரு குரல் நெருக்கடி நிலையை எதிர்த்து ஒலித்தது. அரசியலமைப்பு சட்டத்தின்படி எது சரி எது தவறு என்பதை அந்தக் குரல் தெளிவுபடுத்தியது. உண்மையின் பக்கத்தில் இருந்ததால் அந்தக் குரலுக்கு சொந்தக்காரருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி மறுக்கப்பட்டது. ஆனாலும் வரலாற்றைப் படிக்கும் மாணவர்களின் மனதில் அவருக்கு தனி இடம் கிடைத்தது. அந்தக் குரலின் சொந்தக்காரர் ஒரு நீதிபதி. அம்ரித்ஸர் நகரில் பிறந்த அவரின் பெயர் நீதிபதி ஹன்ஸ்ராஜ் கன்னா. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வரையறை செய்த பல்வேறு வழக்குகளில் நீதிபதி கன்னாவின்  தீர்ப்புகள் இன்றும் முக்கியமான ஒன்றாக உள்ளன.

1912ஆம் ஆண்டு அம்ரித்ஸர் நகரில் திரு ஷரப்தயாள் கன்னாவின் மகனாகப் பிறந்தவர் இவர். திரு ஷரப்தயாள் வழக்கறிஞரும், விடுதலைப் போராட்ட வீரருமாவார். அவர் அம்ரிஸ்தர் நகரின் மேயராகவும் பணியாற்றினார். தனது கல்வியை DAV பள்ளியிலும், பின்னர் கல்சா கல்லூரியிலும் முடித்தார். லாகூர் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து அம்ரித்ஸர் நகரில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார்.
தனது நாற்பதாவது வயதில் ஹன்ஸ்ராஜ்கன்னா மாவட்ட குற்றவியல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பெரும் தொழிலதிபரான ராமகிருஷ்ன டால்மியாவை பண மோசடி வழக்கில் சிறைத்தண்டனை வழங்கினார். பஞ்சாப் உயர்நீதிமன்றத்திலும் பின்னர் புதிதாக உருவாக்கப்பட்ட டெல்லி உயர்நீதிமன்றத்திலும் திரு கன்னா பணியாற்றினார். 1971ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக திரு ஹன்ஸ்ராஜ் கன்னா புகழ்பெற்ற பல தீர்ப்புகளை எழுதினார்.

கேசவானந்த பாரதி எதிர் கேரள அரசாங்கம் : 
எடநீர்  மடத்தின் சொத்துக்களை நிர்வகிக்க கேரள அரசு கொண்டுவந்த சட்டங்களை எதிர்த்து அந்த மடத்தின் மடாதிபதி தொடுத்த வழக்கு இது. 13 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. தனது பதவியை பலப்படுத்திக் கொள்ள இந்திரா கொண்டுவந்த பல்வேறு சட்டங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து இருந்தது. வங்கிகள் தேசியமயமாக்கம், மன்னர் மானிய ஒழிப்பு போன்றவைகளை நீதிமன்றம் செல்லாது என்று அறிவித்தது. அரசியலமைப்பு சட்டத்தை திருத்துவதன் மூலம் நீதிமன்ற உத்தரவை இந்திரா ரத்து செய்தார். ஜனநாயகத்தின் இரண்டு தூண்களும் ஒன்றோடு ஓன்று முட்டிக்கொண்ட சமயம் இது.
இந்த வழக்கோடு, பல்வேறு அரசியலமைப்பு சட்ட திருத்தங்கள் பற்றிய விவாதங்களும் தொடுக்கப்பட்டன. அரசியலமைப்பு சட்டத்தை திருத்த அரசுக்கு அதிகாரம் உண்டா என்ற கேள்வி எழுந்தது. ஆறு நீதிபதிகள் அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் ஆறு நீதிபதிகள் அதிகாரம் இல்லை என்று தீர்ப்பு எழுதினார்கள்.

நீதிபதி ஹன்ஸ்ராஜ்கன்னா அரசியலமைப்பு சட்டத்தை திருத்த அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் ஆனால் அதே சமயம் அரசுக்கு கட்டுப்பாடற்ற அதிகாரம் கிடையாது என்றும் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைகளை அரசு மாற்ற முடியாது என்றும் தீர்ப்பு சொன்னார்.

ஆள் கொணர்வு மனு வழக்கு : 
நெருக்கடிநிலை சமயத்தில் சட்டத்திற்கு புறம்பாக பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள சிறையானவர்களின் உறவினர்களால் பல ஆள்கொணர்வு மனுகள் தாக்கல் செய்யப்பட்டன. சட்டத்தின் மாட்சிமை பற்றிய கேள்வி எழுந்தது. இதனை விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு உருவாக்கப் பட்டது.
எந்த காரணமும் இல்லாமல் சிறைபிடிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் ஆள்கொணர்வு மனுவை எடுத்துக்கொள்ள தேவை இல்லை என்றும் மற்ற நான்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்க, நீதிபதி ஹன்ஸ்ராஜ் கன்னா அதனை மறுத்து தீர்ப்பு சொன்னார். "உயிர் வாழும் உரிமையை அரசின் பிடியில் அரசியலமைப்பு சட்டம் கொடுக்கவில்லை. இங்கே கேள்விக்குள்ளாகி இருப்பது சட்டத்தின் மாட்சிமை. விசாரணை இல்லாது சிறையில் அடைப்பது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது" என்று அவர் தீர்ப்பளித்தார்.

சர்வாதிகாரத்திற்கு எதிராக எழுந்த குரலை இந்திரா விரும்பவில்லை. நீதிபதி கன்னாவிற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி மறுக்கப்பட்டது. அவருக்கு இளையவரான நீதிபதி பைக் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நீதிபதி கன்னா உடனடியாகப் பதவி விலகினார். அவருக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்தனர். ஆனால் அவரது ராஜினாமாவைத் தொடர்ந்து நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை அரசிடம் இருந்து நீதிமன்றங்கள் பறித்துக் கொண்டன.

நெருக்கடி நிலை விலக்கிக் கொண்ட பிறகு 1978ஆம் ஆண்டு அவர் பணியாற்றிய உச்ச நீதிமன்றத்தின் இரண்டாம் எண் நீதிமன்றத்தில் நீதிபதி கன்னாவின் முழு உருவ ஓவியம் நிறுவப்பட்டது. உயிரோடு இருக்கும் போதே இந்தப் பெருமையை இதுவரை யாரும் அடையவில்லை.
1999ஆம் ஆண்டு பாரத அரசு நீதிபதி கன்னாவிற்கு பத்மவிபூஷண் விருது அளித்து கவுரவித்தது. பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டங்களை அளித்தன.

மனசாட்சிக்கும் நீதிக்கும் உண்மையாக இருந்த நீதிபதி ஹன்ஸ்ராஜ் கன்னா 2008ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் நாள் தனது 95ஆவது வயதில் காலமானார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக