ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2025

மாவீரன் மதன்லால் திங்க்ரா பலிதான தினம் - ஆகஸ்ட் 17

பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த மருத்துவர் டிட்டாமால் திங்ரா. ஆங்கில ஆட்சிதான் பாரதநாட்டுக்கு நன்மையை செய்யும் என்ற எண்ணத்தில் இருந்த அவர் பல்வேறு ஆங்கிலேயர்களோடு நட்புறவில் இருந்தார். அவரது மகன்தான் மதன்லால் திங்ரா. தந்தையின் கருத்தோடு ஒத்துப்போகாமல் ஆங்கில ஆட்சிதான் நாட்டின் வறுமைக்கு காரணம், எனவே அது அகற்றப்படவேண்டும் என்பது மதன்லாலின் எண்ணமாக இருந்தது. அன்னியப்பொருள்களை புறக்கணித்து ஸ்வதேசிப் பொருள்களைத்தான் பயன்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த மதன்லாலின் பேச்சுக்கள் அவரது கல்லூரி முதல்வரை எரிச்சலூட்ட, மதன்லால் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மகனின் நடவடிக்கைகளை ஏற்காத அவர் தந்தை அவர்களுக்கிடையே இனி எந்த ஓட்டோ உறவோ கிடையாது என்று அன்றய செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தார்.  



வீட்டை விட்டு வெளியேறிய மதன்லால் பல்வேறு தொழில்களிலும், பல்வேறு வேலைகளிலும் பணியாற்றிக்கொண்டு இருந்தார். சகோதரன் படும் பொருளாதார சிக்களைக் காணச் சகிக்காத அவரது மூத்த சகோதரர் மதன்லாலை பொறியியல் பட்டம் படிக்க இங்கிலாந்து செல்லும்படி கூறினார். அதனை ஏற்றுக்கொண்டு 1906ஆம் ஆண்டு மதன்லால் திங்ரா லண்டன் வந்து சேர்ந்தார். அவர் வந்து இறங்கிய இடம் இந்தியா  ஹவுஸ். ஏற்கனவே வீர சாவர்க்கர், வ வே சு ஐயர் போன்ற போராளிகள் அங்கே இருந்தார்கள். அவர்களோடு திங்ராவும் ஐக்கியம் ஆனார். 

1905ஆம் ஆண்டுதான் பாரதத்தின் வைஸ்ராய் கர்ஸான் வங்காளத்தை இரண்டாகப் பிரித்து ஆணையிட்டு இருந்தார். நிர்வாக வசதிக்காக என்று சொல்லப்பட்டாலும், இது ஹிந்துக்களையும் இஸ்லாமியர்களையும் மதரீதியாகப் பிரித்து இரண்டு சமூகங்களையும் ஓன்று சேர விடாமல் செய்யும் செயல் என்பதால் நாடு முழுவதும் வங்காளப் பிரிவினையை எதிர்த்து போராட்டங்கள் தொடங்கின. இங்கிலாந்து நாட்டிற்கு வந்த மதன்லால் திங்ராவிற்கு படிப்பைத்தவிர வேறு முக்கியமான குறிக்கோள் இருந்தது என்பது பலருக்குத் தெரியாது. 

நாட்டின் பலபகுதிகளில் தேசபக்தியை தூண்டிவிட்ட தேசத்தலைவர்களை ஆங்கில அரசு கடுமையாகத் தண்டித்துக்கொண்டு இருந்த காலம் அது. திலகர், லாலாலஜபதிராய், சர்தார் அஜித்சிங் ( பகத்சிங்கின் பெரியப்பா) ஆகியோர் பர்மாவில் உள்ள மண்டலே சிறையில் அடைக்கப்பட்டார்கள். வீர சாவர்க்கரின் சகோதரர் கணேஷ் தாமோதர சாவர்க்கர் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். வ உ சிக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டு அவரை அந்தமான் சிறையில் அடைக்க ஆங்கில அரசு உத்திரவு இட்டது.

தலைவர்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியான தண்டனை இளைஞர்களை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றது. வ உ சிக்கு தண்டனை பெற்றுத் தந்ததில் முக்கியப் பங்கு வகித்த சப் கலெக்டர் ஆஷை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றார். ஆனந்த் லக்ஷ்மன் கன்காரே என்ற இளைஞன் கணேஷ் சாவர்க்கருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பதிலடியாக கலெக்டர் ஜாக்சன் என்பவரை நாசிக் நகரில் உள்ள ஒரு நாடக அரங்கில் சுட்டுக் கொன்றார். 
வாரம்தோறும் பாரதநாட்டின் விடுதலைப்பற்றி இந்தியா ஹவுசில் தங்கி இருந்த மாணவர்களிடம் வீர சாவர்க்கர் உரையாடுவது வழக்கம். அந்த வாராந்திர கூட்டத்தில் கணேஷ் இழைக்கப்பட்ட அநீதிக்கு பழி வாங்கும் பொறுப்பை தனக்கு அளிக்குமாறு மதன்லால் திங்ரா வேண்டுகோள் வைத்தார். கடுமையான சோதனைகளுக்குப் பிறகு மதன்லாலிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. வ வே சு ஐயர் திங்ராவிற்கு துப்பாக்கி சுடும் பயிற்சியை அளித்தார். 

ஆங்கில அரசில் பாரதநாட்டு விவகாரங்களைக் கவனிக்கும் அமைச்சராக இருந்தவர் ஜார்ஜ் ஹாமில்டன் என்பவர். அவரது நேரடி ஆலோசகராக இருந்தவர் கர்ஸான்  வில்லி என்பவர். ராணுவ அதிகாரியான அவர் பாரதநாட்டில் முப்பதாண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். இந்திய இம்பீரியல் சென்டரில் நடக்கும் ஆங்கில அரசுக்கு விசுவாசமான பாரத பிரஜைகளின் கூட்டத்தில் கலந்துகொள்ள கர்ஸான்  வில்லியும் அவர் மனைவியும் வருகை தந்தார்கள். கூட்டத்தில் முதல் வரிசையில் மதன்லால் திங்ரா அமர்ந்திருந்தார். ஏற்கனவே திங்ரா குடும்பத்தோடு நல்ல உறவில் இருந்த கர்ஸான் வில்லி மகிழ்ச்சியோடு மதன்லாலை நோக்கி "ஹலோ திங்ரா, எப்படி இருக்கிறாய் ?" என்று கேட்டு அருகில் வந்தார். தனது கோட் பையில் இருந்து கைத்துப்பாக்கியை உருவிய மதன்லால் திங்ரா  கர்ஸான் வில்லியை நேருக்கு நேராக சுட்டார். கர்ஸான் வில்லி அங்கேயே மரணமடைந்தார். வில்லியைக் காப்பாற்ற வந்த கவாஸ்லால் காகா என்பவர் மீதும் குண்டு பாய்ந்து அவரும் இரண்டொரு நாட்களில் மருத்துவமனையில் காலமானார். 

கூட்டம் பதறிச் சிதறி ஓடியது; திங்க்ரா போலிஸ் வரும்வரை நின்றார். பின்னர் செய்தியாளர்கள் எழுதினார்கள்: “அந்தக் கூட்டத்திலேயே அமைதியுடன் காணப்பட்டது திங்க்ரா மட்டும்தான்” திங்க்ரா நினைத்திருந்தால் அங்கிருந்த மக்கள் மீது குண்டுகளைப் பொழிந்துவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம். ஐரிஷ் புரட்சியாளர்கள் உதவியுடன் தப்பிச்சென்று பிரான்ஸில் அரசியல் அகதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் திங்க்ரா அதனைச் செய்யவில்லை. மாறாக நீதிமன்ற விசாரணையை தனது கருத்தைக் கூறும் களமாக அவர் மாற்றிக் கொண்டார். ஆங்கில அரசில் அதுவும் அவர்களின் தலைநகரில் ஆங்கில ஆட்சியின் முக்கியமான அதிகாரிகளையே சுட்டுக் கொல்ல முடியும் என்ற உண்மை அரசின் நிம்மதியைக் குலைத்தது. 

இறந்துபோன கர்சன் வில்லிக்கு அஞ்சலி தெரிவிக்கும் விதமாகவும், மதன்லால் திங்ராவின் செயலைக் கண்டிக்கும் விதமாகவும் லண்டன் நகரில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு ஆகாகான் தலைமை வகித்தார். மதன்லால் செய்தது காட்டுமிராண்டித்தனம், அதை இங்கே கூடியுள்ள பாரதமக்கள் அனைவரும் கண்டிக்கிறோம் என்ற தீர்மானம் முன்மொழியப்பட்டது. இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக ஆகாகான் அறிவித்தார். "இல்லை, மதன்லால் செய்தது தவறில்லை" என்று ஒரு குரல் முழங்கியது. அது சாவர்க்கரின் குரல். கூட்டத்தில் பெரும் குழப்பம் உருவானது. அந்தக் கூட்டத்தில் இருந்த வெள்ளையன் ஒருவன் தாக்கினான். உடனே சாவர்க்கரின் உடன் சென்றிருந்த மண்டயம் பிரதிவாதி திருமலை ஆச்சாரியா என்ற போராளி அந்த ஆங்கிலேயனைத் திருப்பி தாக்கினார். எந்த முடிவும் எட்டப்படாமல் அந்தக் கூட்டம் முடிவுக்கு வந்தது. 

பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. தனக்காக வாதாட திங்ரா எந்த வழக்கறிஞரையும் நியமிக்கவில்லை. ஆங்கில நீதிமன்றத்திக்கு தன்னை விசாரிக்கும் அதிகாரம் கிடையாது என்று அவர் வாதாடினார். எப்படி ஒருவேளை ஜெர்மனி இங்கிலாந்து மீது படையெடுத்தால், ஆங்கிலேயர்கள் ஜெர்மனியர்களை எதிர்பார்களோ அதுபோலத்தான் தான் ஆங்கிலேயர்களை எதிர்க்கிறேன். எட்டு கோடி பாரதமக்கள் இறப்பிற்கும், வருடம் ஒன்றுக்கு பத்து கோடி பவுண்டுக்கும் மேலாக எங்கள் நாட்டின் வளத்தை கொள்ளையடிக்கும் குற்றத்தை நான் உங்கள்மீது சுமத்துகிறேன். எங்கள் தியாகிகளை தூக்கிலிட்ட குற்றத்திற்காகவும், அவர்களை நாடுகடத்தி சித்தரவதை செய்யும் குற்றத்திற்காக பழி வாங்கவேண்டிய தேவை ஒரு பாரதீயனாக எனக்கு இருக்கிறது. உங்களின் கருணையையோ அல்லது மன்னிப்பையோ நான் யாசிக்கவில்லை. என் செயலின் நியாயம் என்ன என்பது பற்றித்தான் நான் கூறுகிறேன் என்று அவர் கூறினார். 

ஆங்கில நீதிமன்றம் மதன்லால் திங்ராவிற்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பு எழுதியது.  தண்டனை விதிக்கப்பட்டது குறித்து டைம்ஸ் பத்திரிகை எழுதியது: “தண்டனை அறிவிக்கப்பட்ட போது கொலைகாரன் எவ்வித சலனமும் இன்றி இருந்தது அவனது மாட்சிமைக்குச் சாட்சியாக அமைந்தது. இங்கிலாந்து நாட்டு விசாரணைகளில் காணப்பட முடியாத அம்சம் இது. விசாரணைக் கூண்டிலிருந்து திங்க்ரா புன்னகையுடன் வெளியேறியதைக் காணமுடிந்தது.”
ஆகஸ்ட் 17, 1909 காலை 9:00 மணி இலண்டனின் பெண்டோன்வில்லி சிறையில் மதன்லால் திங்க்ரா அவரது இறுதிப் பயணத்தை மேற்கொண்டார். ஹட்ஸன் எனும் ஒரு கிறிஸ்தவ பாதிரி வழக்கம்போல அவருக்காக பிரார்த்தனை செய்ய முன்வந்தார். “நான் ஒரு ஹிந்து; உங்கள் பிரார்த்தனை எனக்குத் தேவையில்லை” எனப் புன்னகையுடன் மறுத்துவிட்டார் திங்க்ரா.

இறுதி ஆசைகள் குறித்த கேள்விகளை நிராகரித்து நடந்தவர் முகத்தை மூடும் துணியையும் நிராகரித்தார். பிரிட்டிஷ் தலையாரி பியர்பாயிண்ட்டுக்கு எந்த வேலையும் வைக்காமல் அவரே தூக்குக் கயிறை முத்தமிட்டு கழுத்தில் சூடிக்கொண்டார். கால்களின் கீழிருந்த பலகை இழுக்கப்பட்டது. பிரிட்டிஷ் விதிகளின் படி அரைமணிநேரம் சடலம் தொங்கிய பிறகு எடுத்து வரப்பட்டது. மரண சான்றிதழ் வழங்கும் இடத்தில் சாவர்க்கரும் இருந்தார். மதன்லால் திங்க்ராவின் பூத உடலில் புன்னகை உறைந்திருந்தது. ஹிந்து முறைப்படி தகனம் செய்ய திங்க்ராவின் தோழர்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் பிரிட்டிஷ் அரசுக்கான இராஜ விசுவாசத்துடன் அவரது உடலை வாங்க மறுத்துவிட்ட நிலையில் அவரது உடல் சிறையில் புதைக்கப்பட்டது.

பாரிஸில் இருந்த சர்தார் சிங் ராணாவுக்கு மதன்லால் திங்க்ராவின் இறுதி அறிக்கை சென்றது. மதன்லால் திங்க்ரா தூக்கிலிடப்பட்ட அன்று (17 ஆகஸ்ட், 1909) அவருடைய படத்துடன் வந்தே மாதரம் எழுதித் திகழ அதன் கீழ் இந்த அறிக்கை வெளியானது. இலண்டனிலும் அவை வெளிப்பட்டன. விரைவில் இந்தியாவுக்கும் அனுப்பப்பட்டன. அரசாங்கம் கருமசிரத்தையாக அதனைத் தடை செய்தது. “சவால்” எனும் தலைப்பில் வெளியான அந்த அறிக்கை கூறியது:

அன்னியத் துப்பாக்கிகளால் அடக்கப்பட்டிருக்கும் ஒரு தேசமானது நிரந்தரப் போரில் ஈடுபட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன். நிராயுதபாணிகளாக ஆக்கப்பட்ட ஒரு தேசத்திற்கு வெளிப்படையான யுத்தம் சாத்தியம் இல்லை. எனவே நான் எதிர்பாராத நேரத்தில் தாக்கினேன். பீரங்கிகள் மறுக்கப்பட்டதால் நான் என் கைத்துப்பாக்கியை உபயோகித்தேன். புத்திபலத்திலும் உடல்பலத்திலும் சக்தி இல்லாத என்னைப் போன்ற ஒரு மைந்தன் என் அன்னைக்கு உதிரத்தைத் தவிர வேறு எதைத் தந்துவிட முடியும். எனவே என் ரத்தத்தை அவள் சன்னதியில் நான் சமர்பித்தேன். 

இறைவனிடம் என் ஒரே பிரார்த்தனை இதுதான் ...... நான் என் தேசத்திற்காக மீண்டும் இதே தேசத்தாய்க்குப் பிறப்பேனாக. மீண்டும் இதே புண்ணிய கைங்கரியத்தில் மரணத்தைத் தழுவுவேனாக. உலக மானுடம் அனைத்திற்கும் அவள் நன்மையை அருளவும், ஈஸ்வரனின் மகோன்னதத்தைப் பிரகடனம் செய்யவும் அவள் விடுதலை அடையும்வரை நான் மீண்டும் மீண்டும் பிறந்து இதே கைங்கரியத்திற்காக மரணத்தைத் தழுவுவேனாக. 

இன்று என் பாரத தேசம் படித்துக்கொள்ள வேண்டிய ஒரே பாடம் எப்படி தேசத்துக்காக மரணத்தை ஏற்றுக்கொள்வது என்பதுதான். அதனை கற்பிக்க ஒரே வழி, நாமே அந்தப் பாதையை ஏற்று வழிகாட்டுவதுதான். எனவே நான் மரணத்தை ஏற்றுக்கொள்கிறேன் அந்தப் பிராண தியாகத்தில் பிரகாசிக்கிறேன்.
வந்தே மாதரம்

மதன்லால் திங்ராவின் உடல் ஹிந்து முறைப்படி எரியூட்டப்படாமல் சிறை வளாகத்திலேயே புதைக்கப்பட்டது. 1976ஆம் ஆண்டு தோண்டியெடுக்கப்பட்டு அந்த தியாகியின் உடல் பாரத நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு சகல மரியாதையோடு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக