புதன், 17 ஆகஸ்ட், 2016

தேசியக் கல்விக் கொள்கை - ஆசிரியர்கள், மாணவர்கள்

ஆசிரியர்கள் : 

ஆசிரியர்களுக்கான தகுதி, அந்தப் பணிக்கான தேர்வு முறை பற்றி வரைவு அறிக்கையின் பரிந்துரைகள்

* கல்விநிலையங்களின் மேலாண்மையிலும், ஆசிரியர் பணிக்கான தேர்வு மற்றும் பணி உயர்விலும் தெளிவான, வெளிப்படையான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். அவை முற்றிலுமாகப் பின்பற்றப்பட வேண்டும்.

* தன்னதிகாரம் பெற்ற சுயேட்சையான ஆசிரியர் தேர்வுப் பணி ஆணையம் எல்லா மாநிலங்களிலும் அமைக்கப்பட வேண்டும். அதன்மூலமாகவே ஆசிரியர் பணிக்கான தேர்வு நடத்தப்படவேண்டும்.

* பத்தாம் வகுப்பிற்குப் பிறகு ஐந்து வருட ஆசிரியர் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். ஆரம்ப / தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை இந்த வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடம் இருந்தே தேர்வு செய்ய வேண்டும்.

* இதுபோல பன்னிரெண்டாம் வகுப்பிற்குப் பிறகு ஐந்து வருட ஆசிரியர் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களை இந்த பயிற்சி முடித்தவர்களிடம் இருந்தே தேர்வு செய்ய வேண்டும்.

* இந்தத் தேர்வில் வெற்றிகரமாக முடித்து உள்ள மாணவர்களுக்கு ஒரு வருட உயர்நிலைப் பட்டய வகுப்புகள் நடத்தி, அதில் உள்ள மாணவர்களை உயர்நிலை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.

*  பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பின்னர் ஆசிரியர் பணி புரிய ஆசையும் தகுதியும் உள்ள மாணவர்களுக்கு நான்கு வருட பட்டப்படிப்பு வழங்கப்படவேண்டும். ஆசிரியர் பணிக்கு இந்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

*  மலைவாழ் பகுதிகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க, அந்தப் பகுதியைச் சார்ந்த பெண்களுக்கு அரசின் செலவில் ஐந்து வருட ஆசிரியர் பயிற்சி அளிக்கப்பட்டு, அப்படிப் பயிற்சி பெற்ற பெண்களையே பணியில் அமர்த்தவேண்டும். இந்தப் பயிற்சி எட்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஐந்து ஆண்டுகளாகவோ அல்லது பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு மூன்று ஆண்டுகளாகவோ இருக்கலாம்.

 *  ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு இரண்டு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பவேண்டும்.

*  பத்து வருட இடைவெளியில் ஆசிரியர்களின் திறன் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அவர்களின் தரன் தன்னாட்சியான நிறுவனத்தால் அளவிடப்பட்டு ஆசிரியர்களுக்கு சான்றளிக்கப்பட வேண்டும்.

*  கல்லூரி விரிவுரையாளர் தகுதியில் உள்ள நபர்களைக் கொண்டு ஆசிரியர்களுக்கான பயிற்சி நடத்தப்பட வேண்டும். இதற்காக தனியான தகுதியான பயிற்சியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டவேண்டும்.

* மலைவாழ்பகுதிகள், தொலைதூர இடங்கள், வாழக் கடினமான இடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை தரப்படவேண்டும்.

*  இந்திய குடிமைப் பணிகளுக்கு ( Civil Service ) இணையான இந்திய கல்வி பணி ( Indian Educational Service ) ஓன்று உருவாக்கப்பட வேண்டும். இதில் பணிபுரிபவர்கள் அவரவர் மாநிலத்தின் கல்வி முன்னேற்றத்திற்க்காக பணியாற்றவேண்டும்.

*  தங்கள் பணியில்  ஆசிரியர்களும், பல்வேறு முறையீடுகளுக்காக கல்வி நிலையங்களும் அரசின் மீது பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்து உள்ளனர். இவைகளை விரைவாகத் தீர்க்கும் வண்ணம் மாநில அரசுகளும், மத்திய அரசும் தீர்ப்பாயம் ஒன்றை நிறுவவேண்டும். இந்த வழக்குகள் விரைவாக முடிக்கப்படவேண்டும்.

மாணவர்கள் :

 * மாணவர்கள் கல்விகற்கும் நிலையில் மூன்று இடங்களில் இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர். அவை தொடக்கக்கல்வி நிலையில், பதினொன்றாம் வகுப்பில் மற்றும் தாய்மொழியில் கற்கும் மாணவர்கள் தொழிற்கல்வி கற்கும் ஆரம்பநிலையில் என்பனவாகும். இந்தக் காலகட்டத்தில் மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகளும், தனி கவனிப்பும் அளிக்கப்படவேண்டும்.

*  சிறுபான்மைக் கல்வி நிலையங்களும் தங்கள் சேர்க்கையில் 25% பொருளாதார ரீதியாக உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்தல்வேண்டும்.

*  எட்டாம் வகுப்பு வரை எல்லா மாணவர்களுக்கும் தேர்ச்சி என்பது, பல மாணவர்களுக்கு கற்கும் தேவையை எதிர்மறையாகப் பாதித்து உள்ளது. எனவே இது ஐந்தாம் வகுப்பு வரை தேர்ச்சி என்று மாற்றப்படவேண்டும். அதன் பிறகு தேர்ச்சி என்பது மாணவர்களின் மதிப்பெண்படியே அமைய வேண்டும்.

ஆனால் இது மாணவர்களை பாதிக்காமல் இருக்க, கற்றல் குறைபாடு உடைய மாணவர்களுக்கு மீண்டும் இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும். இதற்கான சிறப்பு வகுப்புகள் தேவைப்படும் மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டும்.

*  கல்வி உரிமைச் சட்டம் ஐந்தாம் வயதான குழந்தைகளுக்கு கல்வி கற்பது உரிமை என்று இருக்கிறது. அது நான்கு வயதான குழந்தைகளுக்கும் இனி நீட்டிக்கப் பட வேண்டும். நான்கு வயதான குழந்தைகளுக்கான மழலையர் வகுப்புகள் தொடங்கப்படவேண்டும்.

* கற்றல் குறைபாடு உள்ள சிறப்புக் குழந்தைகளுக்கான தனி வாரியம் அமைக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட குழைந்தைகளுக்கான கல்விக்கான தனி சட்டம் நிறைவேற்றப்படவேண்டும், அவை முறையாகப் பின்பற்றப்படவேண்டும்.

* மலைவாழ் பிரதேசங்களில் உள்ள குழந்தைகள் பள்ளிகளில் சேரும் சதவிகிதம் குறைவாகவும், பாதியில் படிப்பை நிறுத்துவார்கள் சதவிகிதம் அதிகமாகவும் இருக்கிறது. இது மாற்றப்பட வேண்டும்.

* மலைவாழ் பகுதி குழந்தைகளுக்கான கல்வி என்பது மலைவாழ் மக்கள் நலத்துறையில்  பிரிக்கப்பட்டு அந்தந்த மாநில கல்வித்துறையில் தனி அலகாக மாற்றப்படவேண்டும்.

* பல இடங்களில் உள்ள மலைவாழ் குழைந்தைகள் அந்த மாநில மொழிகளைக் கற்பதில் ( அவர்களின் பேச்சு மொழி வேறாக இருப்பதால் ) உள்ள தடைகளைக் களைய, ஆரம்ப நிலைப் பாடங்களை அவர்கள் மொழியில் கற்பிக்கும் வகையில் புத்தகங்கள் தாயாரிக்கப்படவேண்டும். 

2 கருத்துகள்:

  1. மகிழ்ச்சி. ஆர்வத்திற்கு உழைப்பிற்கு நன்றி. ஒவ்வொரு ஏதோவொரு மலையோர கிராமங்கள் உள்ளே சென்று வரும் போது அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தினை அவர்கள் குழந்தைகள் இழக்கும் அடிப்படை உரிமைகளைப் பற்றி அதிகம் யோசித்துள்ளேன்.

    70 ஆண்டுகள் கழித்தும் அவர்கள் இன்னமும் முழு மனித சுதந்திரம் உள்ளவர்களாக வாழவில்லையே என்ற எண்ணம் மேலே கொடுத்த விசயங்களில் மூலம் இனி மாறும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  2. சிற்ப்பான பகிர்வு...
    மகிழ்ச்சி...
    மாற்றம் வரும்..

    பதிலளிநீக்கு