வியாழன், 10 மார்ச், 2016

கண்முன்னே நிகழும் அற்புதம்

இந்த நாட்டில் திரு நரேந்திர மோடியைப் போல பல ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் பழிக்கப்பட்டவர்கள் யாரும் இருந்து இருக்க முடியாது.அவர்மீதான வன்மம் என்பது எல்லா வரைமுறைகளையும் தாண்டி தங்களைத் தாங்களே அறிவுஜீவிகள் என்று நினைத்துக்கொண்டு  இருப்பவர்களால் மீண்டும் மீண்டும் கட்டமைக்கப்படுகிறது. அதனால் நியாயமாக அவருக்கும், அவர் தலைமையில் அமைத்த அரசுக்கும் கொடுக்கவேண்டிய பாராட்டுக்களைத் தெரிவிக்கவே இவர்கள் தயாராக இல்லை. ஆனால் இன்றைய உலகம் என்பது இப்படிப்பட்ட அறிவுஜீவிகளைத் தாண்டி இணையத்தின் வழியாக தனக்கான செய்திகளைத் தெரிந்து கொள்கிறது.

குஜராத் மாநிலம் என்பது மோதிக்கு முன்னாலே எல்லா வளமும் பொருந்திய மாநிலம், பொதுவாகவே குஜராத்திகள் வியாபாரம் செய்யத் தெரிந்தவர்கள். அப்படிப்பட்ட வளமான மாநிலத்தில் எதுவுமே செய்யாமல் அந்தப் பெருமைகளை எல்லாம் தான் செய்ததாக மோடி தம்பட்டம் அடித்துக்கொண்டார் என்பது இவர்கள் கட்டமைக்கும் பிம்பம். உண்மை என்ன என்று பார்ப்போம்.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கான மிக முக்கியமான குறியீடு என்பது சாதாரணப் பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் மின்சார வசதி செய்துகொடுப்பதே ஆகும். அதுவே வளர்ச்சிக்கான அடிப்படை. இதில் மோதிக்கு முன்னரும் மோடி ஆட்சி செய்தபோதும் குஜராத் எப்படி இருந்தது என்பதைப் பார்ப்போம்.

2008ஆம் ஆண்டு குஜராத் மிக மோசமான மின்சாரத் தட்டுப்பாட்டைச் சந்தித்தது.தொழில்சாலைகள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும்படி அறிவுறுத்தப் பட்டன. விலை குறைவான திரவமாக்கப் பட்ட இயற்கை எரிவாயுவுக்குப் ( LNG ) பதிலாக விலை அதிகமான நாப்தாவை அங்கே உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் பயன்படுத்தவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன.

மற்றைய மாநில முதல்வர்கள் போல மோடி மத்திய அரசு உதவி செய்யவில்லை, தங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்துகிறது என்று குறைகூறிக்கொண்டு இருக்கவில்லை. உடனடியாக குஜராத் அரசு மின்சார உற்பத்தியைப் பெருக்க என்ன செய்யலாம் என்று விவாதித்து, முடிவெடுத்தது. அதன் பிறகு சூரிய வெப்பத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களை  ஊக்குவித்து, மின்சார தயாரிப்பில் தன்னிறைவு அடைந்தது.

இது சம்பந்தமான செய்திகள் இங்கே

ஆக, மின்சாரம் தயாரிப்பதில் குஜராத் ஏற்க்கனவே தன்னிறைவு அடைந்து இருந்தது என்கிற இவர்கள் வாதம் உண்மை இல்லை என்பது உறுதியாகிறது.


2002ஆம் ஆண்டில் குஜராத் மாநிலம் வறட்சியில் சிக்கியது. இரண்டாயிரத்துக்கும் அதிகமான கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு இருக்கிறது, எனவே மோடியால் அந்த ஆண்டு தேர்தலில் வெல்ல முடியாது என்று பத்திரிகைகள் கட்டியம் கூறின. அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற மோடி தனது முக்கியமான பணிகளாக குடிநீர், மின்சாரம் மற்றும் கல்வித் துறைகளே இருக்கும் என்று உறுதி கூறினார்.

2004ஆம் ஆண்டு சுபலாம் சுஜலாம் யோஜனா என்ற பெயரில் 6000 கோடி ரூபாய் மதிப்பில் ஐந்து லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதியும் 3700 கிராமங்களுக்கு சுத்தமான குடிநீரும் வழங்கும் திட்டம் செயல்படுத்தத் தொடங்கியது.

இதன் விளைவாக குஜராத் உணவு உற்பத்தியில் 9% வளர்ச்சியை அடைந்தது, அப்போது தேசிய அளவில் விவசாய வளர்ச்சி என்பது 3% மட்டுமே இருந்தது. குஜராத் மாநிலத்தின் இந்த வளர்ச்சியை திரு அப்துல் கலாம் அவர்கள் பாராட்டிய செய்தி இங்கே

ஆக மின்சாரத்திலும் குடிநீர் விநியோகத்திலும் நிச்சயமாகவே திரு மோடி அவர்கள் குஜராத்தில் மகத்தான ஒரு சாதனையைப் புரிந்து இருக்கிறார். இதற்கான பாராட்டுகளைத் தெரிவிக்க மனம் இல்லாவிட்டாலும், ஏற்கனவே குஜராத்தில் எல்லாமும் இருந்தன என்றாவது கூறாமல் இருக்கலாம் அல்லவா ?

மோடியின் மீது சுமற்றப்படும் அடுத்த குற்றச்சாட்டு அவர் பெரும் தொழில் நிறுவனங்களின் கைப்பாவையாக இருக்கிறார். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவதற்காக ஏழைகளின், சிறு விவசாயிகளின் நிலங்களை எல்லாம் அடித்துப் பிடுங்கி தொழில் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கிறார் என்பது.

ஆனால் நிலம் கையக்கப்படுத்த அதே குஜராத் மாநில அரசின் பாணியை தாங்களும் பின்பற்றலாமோ என்று பஞ்சாப் அரசும், மகாராஷ்டிரா அரசும் ஆலோசனை செய்கின்றன என்று இந்தச் செய்தித்தாள் கூறுகிறது.

நிலம் கையக்கப்படுத்துவதை குஜராத் அரசாங்கத்திடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

முந்தய காங்கிரஸ் அரசின் ஊரக வளர்ச்சித் துறை குஜராத் அரசுக்குக் கொடுத்த பாராட்டுப் பத்திரம் இங்கே

திட்டக்குழுவால் நியமிக்கப் பட்ட  டெலாயிட் நிறுவனம் Business Regulatory Environment for Manufacturing - A State Level Assessment என்ற ஆய்வை மேற்கொண்டது.  ஏறத்தாழ ஐந்து மாதங்கள் நடந்த இந்த ஆய்வும் குஜராத் மாநிலத்தின் நிலம் கையக்கப்படுதும் முறையைப் பாராட்டவே செய்கிறது. பாஜக ஆட்சி செய்த சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேச அரசுகளும் இந்த ஆய்வில் முன்னிலையில் இருக்கின்றன என்பது ஒரு கூடுதல் தகவல்.

இது போலவே வர்த்தகத் துறை அமைச்சகமும் தொழில்துறை அமைச்சகமும் இணைந்து நடத்திய ஆய்வில் நிறுவனங்கள் குஜராத் மாநிலத்தில் தங்கள் தொழிலுக்காக நிலம் வாங்கும் போது மிகக் குறைவான அரசு தலையீடே இருக்கிறது என்று பாராட்டுப் பத்திரம் வழங்கி இருக்கிறது.

 ஆக, எல்லா மாநிலங்கள் போலவே குஜராத்தில் மின்சாரப் பற்றாக்குறையும், குடிநீர் பஞ்சமும் இருந்து இருக்கிறது. தெளிவான சிந்தனையும், நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீது அக்கறையும் கொண்ட ஒரு தனி மனிதர் ஏறத்தாழ பதினைந்து ஆண்டு காலத்தில் அதை எப்படி மாற்றி அமைத்தார் என்பது நமது கண் முன்னே இருக்கும் வரலாறு.

நான் வளர்ந்த இயக்கத்தில் தனிமனிதத் துதிகள் நடப்பதில்லை, தனிமனிதர்கள் தவறே இழைக்கமாட்டார்கள் என்று சொல்லப்படுவதும் இல்லை. ஆனால் நாட்டுக்காக உழைப்பவர்களின் கரங்களை வலுப்படுத்தவும், ஒருவேளை அவர்கள் தவறு செய்தால் அதனைத் தட்டிக் கேட்கவும், அந்தத் தவற்றை சரிசெய்வதும் நம் எல்லோருடைய கடமையும் என்றே போதிக்கப்பட்டு இருக்கிறது.

குறுகிய கண்ணோட்டங்களையும் காழ்ப்புணர்ச்சியையும் விட்டு விட்டு நாட்டுக்கு உழைக்க வாருங்கள். ஏன் என்றால் தனி மனிதர்கள் வருவார்கள், போவார்கள். நமக்கு பல நூற்றாண்டுகள் முன்னாலும் இந்த நாடு இருந்தது, இன்னும் பல நூறாண்டுகள் பின்னாலும் இருக்கும்.

நல்லது செய்வது ஆற்றீராயின் அல்லது செய்வது ஓம்புமின், இது தமிழ் நமக்குச் சொல்லிக்கொடுத்த பாடம். அதைப் பின்பற்றலாமே

4 கருத்துகள்: