ஞாயிறு, 29 மார்ச், 2015

பணவீக்கவிகிதம் - ஒரு எளிய அறிமுகம்

இதுவரை நாம் சரியான அளவில் ஆயுள் காப்பீடு செய்து கொள்வதைப் பற்றியும், மருத்துவக் காப்பீடு பற்றியும், அவசரத் தேவைக்கு தேவைப்படும் அளவிற்கு பணத்தைத் தனியாக வைத்துக் கொள்வது பற்றிப் பார்த்தோம்.

இதை எல்லாம் சரியாக முடித்த பின்னரே நாம் முதலீடு பற்றி யோசிக்க வேண்டும். நம்மில் பலர் முதலீட்டையும் சேமிப்பையும் ஓன்று என்றே நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இவை இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. சேமிப்பு என்பது பணத்தைச் சேகரித்து அதனைப் பாதுகாப்பாக வைத்து இருப்பது. ஆனால் முதலீடு என்பது அப்படிச் சேமித்த தொகையில் இருந்து வருமானம் வரும் வகையில் சரியாகப் பயன்படுத்தும் வழியாகும். பொதுவாக சேமிப்பு என்று வரும் போது அதில் பணத்தை இழக்கும் சந்தர்ப்பம் இருக்காது. ஆனால் முதலீடு என்று வரும்போது, பணத்தை இழக்கும் வாய்ப்பு உண்டு. பணத்தை முதலீடு செய்யும் போது அதிக வருமானம் என்றால் இழக்கும் வாய்ப்பு அதிகமாகவும், வருமானம் குறையும் போது இழக்கும் வாய்ப்பு குறைவாகவும் இருக்கும்.

இதுபோக, சேமிப்போ அல்லது முதலீடோ பணவீக்க விகிதத்தைப் பற்றி நாம் அறிந்து இருக்க வேண்டும். பணவீக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை வைத்துக் கொண்டு நாம் வாங்கும் பொருளின் அளவு. உதாரணமாக 1985ல் ஒரு லிட்டர் பெட்ரோல் எட்டு ரூபாய்க்குக் கிடைத்துக் கொண்டு இருந்தது. ஆனால் 2015ல் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு நாம் அறுபத்தி இரண்டு ரூபாய் கொடுக்கிறோம். அதாவது ஒரே பொருளுக்கு ஏறத்தாழ எட்டு மடங்குக்கு மேலே நாம் இன்று செலவு செய்ய வேண்டியுள்ளது. அதாவது அந்த அளவிற்கு இந்திய ரூபாய் தனது வாங்கும் சக்தியை இழந்து உள்ளது என்று பொருள்.

வல்லுனர்கள் கணிப்பின்படி இந்தியாவில் பணவீக்க விகிதம் என்பது எட்டு சதவிகித அளவில் இருக்கிறது. அப்படி என்றால் சென்ற வருடம் நீங்கள் நூறு ரூபாய் செலவில் வாங்கிய பொருளுக்கு இன்று நூற்றி எட்டு ரூபாய் செலவு செய்யவேண்டி இருக்கும். விலைவாசி அதிகரித்துவிட்டது என்று நாம் பேசுவது இந்தப் பணவீக்க விகிதத்தைப் பற்றிதான்.

பணவீக்கவிகிதம் எட்டு சதவிகிதம் என்றால் எல்லாப் பொருள்களும் ஒரே போன்று விலை ஏறியிருக்க வேண்டியது இல்லை. காய்கறிகள் ஐந்து சதவிகிதமும், உணவுப் பொருள்கள் பத்து சதவிகிதமும், வாடகை பதினைந்து சகவிகிதமும் கூடி, இது போன்று சராசரியாக எட்டு சதவிகிதம் என்று ஆகி இருக்கலாம்.

மத்திய நிதி அமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் இணைத்து இந்தப் பணவீக்க விகிதம் மிகப் பெரிய அளவில் கூடாமலும் குறையாமலும் இருக்கும் வழிகளைக் கையாண்டு வருகின்றன. வங்கிகளில் வட்டி விகிதத்தை மாற்றி அமைப்பதின் மூலமும், சந்தையில் புழங்கும் பணத்தின் அளவை கட்டுப்படுத்துவதன் மூலமும் பணவீக்க விகிதத்தை அவை சமன் செய்கின்றன.

சேமிப்போ அல்லது முதலீடோ, உங்கள் பணம் வளர்ச்சி அடையும்  அளவு என்பது இந்தப் பணவீக்க விகிதத்தைக் காட்டிலும் கூடுதலாக இருக்கவேண்டும். அப்படி இல்லை என்றால் உண்மையில் உங்கள் கைவசம் இருக்கும் பணம் அதன் மதிப்பை இழந்துகொண்டு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். குறைந்தபட்சமாக  ஆரம்பநிலைப் பொருளாதார தகவல்களைப் பற்றிய புரிதல்களை கற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் சேமிப்பு பணவீக்க விகிதத்தைத் தாண்டி வளர்ச்சி காண்கிறதா என்பதை அறிந்துகொள்ளுங்கள்.


தொடர்புடைய பதிவுகள் 

அவசரக்காலத் தேவைகளுக்கு 
நினைவில் வைக்க 

4 கருத்துகள்:

  1. எளிமையான அருமையான guidelines. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. எளிய மக்களுக்கு சேமிப்பு என்பது தங்கம் மட்டுமே. நடுத்தர மக்களுக்குக்கூட மியூசுவன் பண்ட் பற்றி தெரியாது. படித்தவர்கள் மத்தியில் கூட ஷேர் என்றால் இன்னமும் பயம் இருக்கத்தான் செய்கின்றது. மீதி என்ன வழி என்பதையும் சொல்லிடுங்க.

    பதிலளிநீக்கு
  3. சேமிப்போ அல்லது முதலீடோ, உங்கள் பணம் வளர்ச்சி அடையும் அளவு என்பது இந்தப் பணவீக்க விகிதத்தைக் காட்டிலும் கூடுதலாக இருக்கவேண்டும். if an example which give the quantifiable will help layman to understand and how to plan.

    பதிலளிநீக்கு