திங்கள், 10 பிப்ரவரி, 2020

மும்பை நகரின் பிதாமகன் ஜெகநாத் ஷங்கர்சேத் - பிப்ரவரி 10

இன்று மும்பை நகரம் பாரத நாட்டின் பொருளாதாரத் தலைநகர். ஆனால் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் பூனாவும், சூரத்தும், ராய்கட் பகுதியும்தான் மராட்டிய மாநிலத்தின் முக்கிய நகரங்களாக இருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் மும்பை மேற்கு கடற்கரையின் முக்கியமான நகரமாக உருவெடுத்தது. மும்பை நகரை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவரான திரு ஜெகநாத் ஷங்கர்சேத் அவர்களின் பிறந்ததினம் இன்று.


அரபிக்கடற்கரையின் ஓரத்தில் அமைந்த கொங்கன பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட தைவைத்நிய ப்ராமண சமூகத்தைச் சார்ந்தவர் ஜெகநாத்சேத். இறைத்தொண்டும், நகை தயாரிப்பும் இந்த சமுதாயத்தினரின் தொழிலாக இருந்தவை. 1803ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் நாள் பிறந்த ஜெகநாத்சேத் இவை இரண்டையும் விட்டு விட்டு வியாபாரத்தில் நுழைந்தார். தொழிலில் நாணயமானவர் என்று பெயர் எடுத்ததால், மிகச் சில காலத்திலேயே அன்றய மும்பை நகரின் முக்கியமான வணிகராக மாறினார். தொழில் சிறப்பாக நடைபெற்றதால், லாபமும் கணிசமாக வந்தது, நாளடைவில் பெரும்பணக்காரராக மாறினார்.

தனக்கு கிடைத்த செல்வதை மக்களின் சேவைக்கு ஜெகன்நாத்சேத் செலவிடத் தொடங்கினார். கல்வியின் முக்கியத்தை அறிந்த அவர் மும்பையில் கல்விச் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். அதன் மூலம் ஆண்களுக்கான பள்ளி, பெண்களுக்கான பள்ளி, சமிஸ்க்ரித பள்ளி, நூலகம் ஆகியவற்றைத் தொடங்கினார். இந்த அமைப்பின் மூலம் உருவானதுதான் இன்று மும்பை நகரின் புகழ்பெற்ற எல்பின்ஸ்டோன் கல்லூரி. தாதாபாய் நௌரோஜி, மஹாதேவ் கோவிந்த ரானடே, கோகுலே, திலகர் போன்ற பாரத நாட்டின் பெரும் தலைவர்களை உருவாக்கியது இந்தக் கல்லூரிதான்.

மாணவர்களுக்கு தாய்மொழியில்தான் கல்வி கற்பிக்கவேண்டும் என்பது ஜெகநாத்சேத்தின் கருத்து. ஆங்கிலத்தில்தான் கல்வி இருக்கவேண்டும் என்பது அரசின் எண்ணம். தொடர்ச்சியான கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின்னர் ஆரம்பக் கல்வி தாய்மொழியில் உயர்நிலைக் கல்வி ஆங்கிலத்திலும் இருக்கலாம் என்று முடிவு எட்டப்பட்டது.

ரயில் போக்குவரத்தின் முக்கியத்துவத்தை அறிந்த ஜெகநாத்சேத் ஜாம்ஷெட்ஜி ஜீஜீபாயுடன் இணைந்து இந்தியன் ரயில்வே அஸோசியேஷன் என்ற அமைப்பை உருவாக்கினார். இதன்மூலம் பாரத நாட்டுக்கு ரயில் போக்குவரத்தை அறிமுகம் செய்யவேண்டும் என்று ஆங்கில அரசை வலியுறுத்தினார். இந்த அமைப்புதான் பின்னர் கிரேட் இந்தியன் பெனின்சுலர் ரயில்வே என்று உருமாறி நாட்டின் ரயில் போக்குவரத்தை உருவாக்கியது. முதல் ரயில் மும்பை நகருக்கும் தானாவிற்கும் இடையே தொடங்கியது.

ஜெகநாத்சேத்தின் முக்கியத்துவத்தை அறிந்த ஆங்கில அரசு அவரை மும்பை சட்டசபைக்கு நியமித்தது. அந்த சபையின் முதல் பாரதிய அங்கத்தினர் ஜெகநாத்சேத்தான். தனது தொடர்புகளைப் பயன்படுத்தி சதியை தடைசெய்ய வைத்தார், விசாலமான சாலைகள், சாலையின் இருபுறமும் மரங்கள் என்று மும்பை நகரின் விரிவாக்கத்திற்கு சேத் பெரும்பணியாற்றினார். பம்பாய் அஸோஸியேஷன் என்ற பெயரில் மும்பையின் முதல் அரசியலமைப்பையும் இவர் தொடங்கினார். 1857ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போரில் இவரது பங்கு இருக்கும் என்று ஆங்கில அரசு எண்ணியது. ஆனால் போதிய சாட்சியங்கள் இல்லாததால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது.

பல்வேறு நிறுவனங்களை உருவாக்க பணம் அளித்ததோடு மட்டுமல்லாமல், அதற்காக தனது சொந்த இடங்களையும் ஜெகநாத்சேத் வழங்கினார். இன்றய மும்பை நகரின் பிதாமகர் என்று அவரைச் சொன்னால் அது மிகையாகாது.

அறுபத்தி இரண்டு ஆண்டுகளே வாழ்ந்த ஜெகநாத் ஷங்கர்சேத் 1865ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் நாள் காலமானர்.