புதன், 29 ஜனவரி, 2020

கிண்டில் மொழியா கிண்டிலின் மொழியா ?

கடந்த பத்தாண்டுகளாக இணையத்தில் உலாத்திக்கொண்டு இருப்பவர்களுக்கு பரிச்சியமானவர்தான் ஜோதிஜி. ஒரு புறம் பெரியாரைப் பிடிக்கும், ஒரு புறம் விடுதலைப்புலிகளும் பிரபாகரனும் ஆதர்சம். ஒரு புறம் மோதியையும் பிடிக்கும் என்று கலந்து கட்டிய சராசரி தமிழனுக்காக சரியான உதாரணம். என்ன ஈ வே ராவைப் முகப்புப் படமாக வைத்ததால் ஒரு சாராராலும், மோதியைப் பிடிக்கும் என்று சொல்வதால் முகமூடி சங்கி ஓன்று மற்றவர்களாலும் தள்ளி வைக்கப்பட்டு தனியாக இயங்குபவர்.


பல்வேறு புத்தகங்களைப் படித்து அதன் தாக்கத்தால் எழுதுபவர்கள் ஒருபுறம், தான் கண்ட, அனுபவித்த வாழ்க்கையை முன்வைத்து அதனை எழுதுபவர்கள் ஒருபுறம். ஜோதிஜி இதில் .இரண்டாம் வகை.

செட்டிநாட்டுப் பகுதியைச் சார்ந்த இவர், வேலை நிமித்தமாக திருப்பூருக்கு குடிவந்து ஏறத்தாழ முப்பத்தாண்டுகாலம் திருப்பூர்வாசியாகவே மாறிவிட்டனர். பின்னலாடைத் தொழிலின் பல்வேறு பிரிவுகளில், பல்வேறு நிலைகளில் வேலை செய்து இன்று தொழில்முனைவோராக வளர்ந்து இருப்பவர்.

மின்புத்தகங்களுக்கான சந்தையை விரிவாக்க, அமேசான் நிறுவனம் சில ஆண்டுகளாக புதிய புத்தகங்களை அறிமுகம் செய்யும் போட்டி ஒன்றை நடத்தி வருகிறது. எழுத்தாளர்கள் என்று தங்களைத் தாங்களே அங்கீகாரம் செய்யும் யார்வேண்டுமானலும் புத்தகங்களை எழுதி, அதனை மின்புத்தகங்களாக உருவாக்கி, இணையத்தில் வெளியிட்டு இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

அதன் பின், நம் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கும். பெரியோர்களே ! தாய்மார்களே ! நான் எழுதிய புத்தகத்தை தரவிறக்கம் செய்து, பக்கங்களைப் புரட்டி, புத்தகத்திற்கு உங்கள் விமர்சனங்களை எழுதி, கூடவே தரமதிப்பீட்டில் நட்சத்திர குறியீடு செய்து என்னை வெற்றிபெறச் செய்யுங்கள் என்று எழுத்தாளர்கள் இணையமெங்கும் மின்னல் வேக பிரச்சாரத்தை செய்தனர்.

ஏற்கனவே கவிஞர்களாலும் போராளிகளாலும், செயல்பாட்டாளர்களாலும் நிரம்பியுள்ள தமிழ் கூறும் நல்லுலகு இப்போது மிக அதிகமான எழுத்தாளர்களையும் இனம் கண்டுகொண்டுவிட்டது. வழக்கம் போல நம் திராவிட இனமான சிங்கங்கள் களத்தில் குதித்து, 150க்கும் மேலான புத்தகங்களை வெளியிட்டு, இணைய அணியின் பிரச்சாரத்தின் மூலம் எல்லாவற்றையும் தரவிறக்கம் செய்து, அனைவருக்கும் ஐந்து நட்சத்திர மதிப்பு அளித்து, வெற்றிக்கோட்டுக்குப் பக்கத்தில் இருக்கின்றனர்.

வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுவது. இதுதான் போட்டியின் வரைமுறை என்றால் அதனை கைவசம் செய்வதற்கு ஒரு திறமை வேண்டும். இலக்குதான் வழிமுறை முக்கியம் இல்லை என்ற நினைப்பு எனக்கு இருப்பதால் நான் இதனை குறைகூறவில்லை. என்ன செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்ற பாரதி பாட்டுக்கே மூன்றாம் இடம்தான் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று பரிசு பெற்ற முதலிரண்டு பாடல்களைக் காணவே இல்லை. எங்கள் படைப்பு காலத்தை வென்று நிற்கும், என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

இந்தப் போட்டிக்கு ஜோதிஜி ஐந்து முதலாளிகளின் கதை என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அவரது நீண்ட நெடிய தொழில் பயணத்தில் அவர் சந்தித்த அவர் பணிபுரிந்த தொழில் நிறுவங்களின் அதன் உரிமையாளர்களின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை இந்த நூல் அளிக்கிறது. வெற்றி பெற்றவர்கள், வெற்றியை நழுவ விட்டவர்கள், பெற்ற வெற்றியை தக்க வைத்தவர்கள், தக்க வைக்காமல் போனவர்கள் என்று நாம் தினம்தோறும் பார்த்த, பார்த்துக்கொண்டு இருக்கும், பார்க்கப் போகும் மனிதர்களின் வாழ்க்கையைத்தான் எழுதியுள்ளார்.

ஓன்று வாங்கினால் இன்னொன்றும் கூடவே கிடைக்கவேண்டும் என்ற தமிழனின் தணியாத தாகத்தை தீர்க்கும் பொருட்டு, ஐந்து முதலாளிகளின் கதையை எழுதியது பற்றியும், அமேசான் நிறுவனம் நடத்திய போட்டி பற்றியும், அதில் நடந்த அரசியல் பற்றியும், அந்தப் போட்டியை எதிர்கொள்ள எப்படி தயாராக வேண்டும் என்பது பற்றியும் கிண்டில் மொழி என்ற அடுத்த புத்தகத்தையும் சுடச் சுட வெளியுட்டுளார்.

தன்னளவில் எந்தப் படைப்பும் மிகச் சிறந்தது என்று கூறிவிட முடியாது. அது அந்தப் படைப்பு வாசகனை எப்படி பாதிக்கிறது என்பதைப் பொறுத்துதான் அது  முடிவாகும். வெவ்வேறு பின்னணியில் இருக்கும் வாசகர்கள் ஒரு படைப்பை வெவ்வேறு விதமாகத்தான் எடை போடுவார்கள். அதன் படி முதலில் விமர்சித்தவர் இந்தப் புத்தகத்திற்கு மூன்று நட்சத்திர தரவரிசையைத்தான் அளித்தார். பாவம், அவருக்கு இந்தப் போட்டியைப் பற்றியோ அல்லது தனக்கு நெருக்கமானவர்களின் படைப்புக்கு ஐந்து நட்சத்திர தரவரிசையை அளிக்க வேண்டும் என்றோ தெரியவில்லை.

தனிப்பட்ட பழக்கம் என்பது வேறு, கட்சி சார்ந்த நிலைப்பாடு என்பது வேறு என்பதில் தெளிவாக இருந்த அவரின் நண்பர்கள் அவரின் புத்தகத்தைப் பற்றி பேசுவதை தெளிவாக தவிர்த்தார்கள். சொக்கா, அமேசான் கொடுக்கிற ஐந்து லட்ச ரூபாய் பரிசும் என் கட்சிக்காரருக்கே கிடைக்கணும் என்ற தருமியின் நிலைதான்.

இதுபோன்ற அரசியல் பற்றி, நாளை யாராவது இந்தப் போட்டியில் கலந்து கொள்ள நினைத்தால் எப்படி கூட்டம் சேர்த்து, இந்தப் புத்தகம் போன்ற ஓன்று இதுவரை வெளிவரவே இல்லை, மனிதகுலத்தை உய்விக்க இதுவே இறுதி புத்தகம் என்று எப்படி சந்தைப்படுத்துவது என்பது பற்றி இதில் ஜோதிஜி தெளிவாக எழுதியுள்ளார்.

கூடவே ஏற்கனவே எழுதியதை மின்புத்தகமாக மாற்றத் தெரிந்தவர்களுக்கு பணம் சம்பாதிக்க ஒரு புது வாய்ப்பு தயாராக உள்ளது என்பதை சுட்டிக் காட்டியுள்ளார். தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதைவிட முக்கியம் ஜோதிஜி எழுதிய திருப்பூர் பற்றிய பல்வேறு நூல்களை திரட்டி, கறாராக பிழை திருத்தி, நேர்த்தியாக எடிட் செய்து வெளியிட்டால், அது கடந்த ஐம்பதாண்டு கால திருப்பூரின், பின்னலாடைத் தொழிலின் வளர்ச்சியை, அதனால் ஏற்பட்ட பொருளாதார, சமூக, சுற்றுப்புறசூழல் மாறுபாட்டை விவரிக்கும் கண்ணாடியாக இருக்கும். அப்படியான முயற்சியை ஜோதிஜி முன்னெடுக்கட்டும். 

செவ்வாய், 28 ஜனவரி, 2020

ஆட்டத்தின் விதிகள் ஐந்துதானா ?

வாழ்வின் முதிரா இளம்பருவத்தில் எதை செய்யவேண்டும் எதைச் செய்யக்கூடாது என்ற புரிதல் இல்லாத காலத்திலேயே விற்பனைத்துறையில்தான் இருக்க வேண்டும் என்ற முடிவை நான் எடுத்துவிட்டேன். ஒரே இடத்தில நீண்ட நேரம் இருக்க முடியாத தன்மையா அல்லது பலரோடு பழகி பேசுவதில் எனக்கு இருந்த ஆர்வமா எது அந்த முடிவை எடுக்க என்னைத் தூண்டியது என்பது இன்னும் எனக்கு சரியாகப் புலனாகவில்லை. விற்பனையால் கிடைக்கும் லாபமோ அல்லது அந்த விற்பனையை முடித்துக் கொடுப்பதால் கிடைக்கும் ஊக்கத்தொகையோ அல்ல, விற்பனையில் பொதிந்துள்ள சவால்தான் என்னை எப்போதும் இயக்குகிறது என்பதை இப்போது நான் தெளிவாக அறிந்து வைத்துளேன்.


நான் ஒரு விற்பனையாளன், பொருள்களையும் சேவைகளையும் விற்பது என்ற போர்வையில் கனவுகளை விற்பனை செய்வது என் தொழில். கடைசியாக நீங்கள் எதை வாங்கினீர்கள் நண்பர்களே ? அதை ஏன் வாங்கினீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். எதோ ஒரு தேவையை பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கையில்தான் நீங்கள் எதையுமே வாங்கி இருக்க முடியும். தேவையில்லாத பொருளை யாரும் அநேகமாக வாங்கமாட்டார்கள். மனிதனின் அடிப்படை தேவை என்பது உணவு மட்டும்தான். அதைத் தவிர்த்த எதுவும் மனிதனுக்குத் தேவையே இல்லை. ஆனாலும் மக்கள் எதையெல்லாமோ வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எதோ ஒரு தேவையை உருவாக்கி, அல்லது இருப்பதாக நம்பவைத்து அந்த தேவையை பூர்த்தி செய்யும் பொருள் என்னிடம் உள்ளது, அதனை வாங்கிக்கொள்ளுங்கள் என்று விற்பனை செய்வது என்பது அடிப்படையில் கனவுகளை விற்பனை செய்வதுதான்.

இப்படியான கனவுகளை விற்பனை செய்பவர்களைப் பயிற்றுவிற்கும் துறையில் இருப்பவர் இந்த நூலின் ஆசிரியரும் சகோதரருமான ராஜகோபால். காப்பீட்டுத் துறை முகவர்களை பயிற்றுவிக்கும் துறையில் பதினேழு ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். அந்த அனுபவத்தின் முதிர்ச்சியே  இந்த புத்தகம். மற்ற பொருள்களை விற்பனை செய்வதுபோல அல்ல காப்பீடு விற்பனை செய்வது. மற்றப் பொருட்கள் நீங்கள் அளிக்கும் பணத்திற்கு ஏற்ப கூடுதலான தரத்தோடும், வடிவமைப்போடும் இருக்கும். ஆனால் நீங்கள் என்ன பணம் கொடுத்தாலும் உங்களுக்குக் கிடைக்கபோவது வெறும் காகிதம்தான். அதிலும் பெரும்பாலான நேரங்களில் அந்த காகிதம் தனது உறுதிமொழியை செயலாக்கும் போது, அதை வாங்கியவர் அதனை காணவோ அல்லது அனுபவிக்கவோ முடியாது என்பதுதான் உண்மை. இந்தப் பொருளை நீங்கள் வாங்கினால் மனமகிழ்ச்சியோடு இருக்கலாம் என்று கூறுவதற்கும், ஒரு வேளை நீங்கள் இறந்து போனால் இந்தப் பொருள் உங்கள் குடும்பத்தின் பொருளாதாரநிலை ஆட்டம் காணாமல் இருக்க உதவும் என்று கூறி விற்பதற்கும் பெரும் வேறுபாடு உள்ளது, சரிதானே நண்பர்களே.

புதிதாக விற்பனைத்துறையில் இணைபவர்களுக்கு அவர்கள் விற்பனை செய்ய இருக்கும் பொருள்கள் அல்லது சேவைகள் பற்றி, அதன் பயன்கள் பற்றி, அவற்றின் சிறப்பியல்புகள் பற்றி முதலில் கற்றுக் கொடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து அந்த பொருளையோ அல்லது சேவையைவோ யாரிடம் விற்பனை செய்ய முடியும், அந்த வாடிக்கையாளர்களை எங்கே கண்டுபிடிக்கலாம், அவர்களை எப்படி அணுக வேண்டும், அவர்களோடு எப்படி உரையாட வேண்டும், அவர்களின் ஆவலை எப்படித் தூண்டி, அந்தப் பொருளை வாங்க வைக்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்கப்படும். இது வரை எல்லாம் சரியாகத்தான் இருக்கும். ஆனால் வாடிக்கையாளரை சந்தித்து, பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எதிர்கொண்டு பலநேரங்களில் நிராகரிக்கப்படுவது என்பது விற்பனையாளர்கள் மீண்டும் மீண்டும் எதிர்கொள்ளும் நிகழ்ச்சிதான்.

ஒவ்வொரு வாடிக்கையாளருக்கு ஒவ்வொரு விதம், அவர்களின் தேவைகள் ஒன்றுபோல் இருக்காது. எனவே அவர்களின் கேள்விகளும் சந்தேகங்களும் ஒன்றுபோல இருக்க முடியாது. சந்தர்ப்பத்துக்கு ஏற்ப, வாடிக்கையாளருக்கு ஏற்ப பதில் கூறி அவர்களை சம்மதிக்க வைக்க முழுமையாக நூறு சதவிகிதம் விற்பனையில் முடிவது போன்று எந்த பயிற்சியாளலாரும் விற்பனையாளரை தயாரித்து அனுப்ப முடியாது.

பயிற்சி வகுப்பில் கற்றுக்கொடுக்கப்படும் பாடங்கள் நிஜ வாழ்வில் பயன்படவில்லை என்ற உண்மை எந்தப் பயிற்சியாளரையும் நிலைகுலைய வைத்துவிடும். அப்படியான சவாலில் இருந்து எப்படி திரு ராஜகோபால் மீண்டுவந்தார் என்பதையும், விற்பனையாளரின் கண்கள் வழியாக பார்ப்பதை விட்டு விட்டு வாங்குபவர் கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கினால் தென்படும் காட்சிகள் எப்படி மாறி வரும் என்பதையும், மாறிய அந்த சூழலில் எப்படி வாடிக்கையாளர்களை எதிர்கொள்வது என்பது பற்றியும் அவரின் அனுபவமே இந்த நூலாக வெளியாகி உள்ளது.

விற்பனைப் பற்றியும், மேலாண்மை பற்றியும், சுய முன்னேற்றம் பற்றியும் உள்ள பல நூல்கள் மேற்கத்திய சிந்தனைப் போக்கை அடிப்படையாகக் கொண்டவை, அதனாலே அவை பாரதம் போன்ற கீழைநாட்டுச் சிந்தனைக்கு ஒத்துவராமலே உள்ளது. அவைகளைப் படித்து, அதனை நமது பாரம்பரிய மரபிற்கு, சிந்தனைப் போக்குக்கு மாற்றி செயல்படுத்த வேண்டி உள்ளது. இப்போதுதான் நமது வேர்களைப் பற்றி, நமது சிந்தனை மரபை ஒட்டி இதுபோன்ற நூல்கள் வெளியாகத் தொடங்கி உள்ளது. அந்த வகையில் ஆட்டத்தின் ஐந்து விதிகள் என்ற இந்த நூல் நல்லதொரு தொடக்கமாக இருக்கிறது. பல்வேறு நூல்களைப் படித்து அதனைத் தொகுத்து எழுதுவது என்று இல்லாமல், தனது அனுபவத்தின் மீது எழுதப்பட்ட நூல், விற்பனையாளர்களுக்கு மட்டுமல்லாமல் ஆளுமைத் திறனை வளர்த்துக்கொள்ள நினைக்கும் அனைவருக்குமே பயனுள்ளதாக இருக்கும்.

திரு ராஜகோபால் பார்வையில் ஆட்டத்திற்கு ஐந்து விதிகள் என்று இருந்தாலும், பழக்கத்தில் கொண்டு வருபவருக்கு ஐந்தாம் விதியை முதலாவதாகவும், அதோடு முதல் விதியை இணைத்து செயல்படுத்தத் தொடங்கினால் அதுவே போதும் என்று நினைக்கிறேன். 

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

புரட்சிவீரர் சூர்யா சென் - ஜனவரி 12

“மரணம் என் வாழ்க்கையின் வாசற் கதவைத் தட்டுவது என் காதில் கேட்கிறது. என் மனம் எல்லையற்ற பெருவெளியை நோக்கி மெல்லப் பறக்கத் தொடங்கிவிட்டது. விழி மூடும் இந்த மரணப் பொழுதில் என் நண்பர்களிடம் நான் ஒன்றை மட்டும் என் நினைவாக விட்டுச் செல்கிறேன்.

அதுதான் ‘சுதந்திர இந்தியா’ என்ற என் பொற்கனவு.

தோழர்களே! இந்தக் கனவை நனவாக்க நம் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள். எந்த நிலையிலும் ஓரடிகூடப் பின்வாங்க முயல வேண்டாம். நம் தேசத்தின் அடிமைப் பொழுது முடிந்துவிடும். சுதந்திரத்தின் ஒளிக்கதிர்கள் பொன்னொளி வீசுவதைக் காணுங்கள். எல்லோரும் எழுங்கள், அவநம்பிக்கை அடையாதீர்கள். வெற்றி விரைவில் வந்து சேரும்”


நாற்பதே வயதான அந்த ஆசிரியருக்கு தூக்குத் தண்டனை என்று தீர்ப்பு எழுதப்பட்டு இருந்தது. தூக்குக் கயிற்றை முத்தமிடும் வேளையில் அந்த இளைஞன் தன் நண்பர்களிடம் கூறிய வார்த்தைகள் இவை.

தாயநாட்டின் அடிமை விலங்கை அறுத்தெறிய ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நாடெங்கிலும் பல்வேறு இளைஞர்கள் முன்னெடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள். தாயின் காலடியில் தங்கள் உயிரை ஆகுதியாக அளிக்க அவர்கள் ஒருபோதும் தயங்கியதே இல்லை. அப்படியான தியாக இளைஞர்கள் படையைக் கட்டமைத்து அவர்களுக்குத் தலைமையேற்று வழிநடத்திய சூர்யா சென் அவர்களின் பலிதானதினம் இன்று.

இன்றய பங்களாதேஷில் உள்ள துறைமுக நகரம் சிட்டகாங். அந்த நகரில் ஆசிரியர் பணியில் ஈடுபட்டிருந்த ரமணிரஞ்சன் சென் அவர்களின் மகனாகப் பிறந்தவர் சூர்யா சென். பெர்ஹாம்பூர் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே தனது ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார் சூர்யா சென்.  கல்லூரிப் படிப்பு முடிந்ததும், ஆங்கில வழி கல்விக்கு மாற்றாக தேசிய சிந்தனைகளின் வழி பாடத் திட்டத்தை அமைத்து மாணவர்களுக்கு கல்வி புகட்டும் பணியில் ஈடுபடலானார். எனவே மக்கள் இவரை மாஸ்டர் தா என்று மரியாதையாக அழைக்கத் தொடங்கினர்.

காங்கிரஸ் கட்சியின் அகிம்சா வழி முறையை சூர்யாசென் ஏற்கவில்லை. காந்தியடிகளின் திட்டம் தோல்வியைத் தழுவியது என்று சூர்யாசென் அறிவித்தார். சிட்டகாங்கை தளமாகக் கொண்டு செயல்பட்ட சூர்யாசென்னின் புரட்சிப் படையில் கணேஷ் கோஷ், சுபோத் சௌத்ரி, லோக்நாத் பால், ஆனந்த் குப்தா, பணீந்திர நந்தி, ஆனந்த் சிங், சகாய்ராம் தாஸ், பக்கீர் சென், லால்மோகன் சென், சுகேந்து தஸ்தகீர், ரணதீர் தாஸ் குப்தா, அணில் பந்து தாஸ், நந்திசின்ஹா, சுபோத்ராய், தாரகேஸ்வர் தஸ்தகீர், பிரசன்ன தாலுக்தார், சுபேந்திர தாஸ் முதலிய படித்த இளைஞர்களும், பிரிதிலதா வடகேர், கல்பனா தத் முதலிய வீராங்கனைகளும் சேர்ந்தனர். அந்த இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சியும், துப்பாக்கிச் சுடும் பயிற்சியும், வெடிகுண்டு தயாரித்தல் மற்றும் உபயோகப்படுத்துவதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது. சூர்யாசென் அமைத்த புரட்சிப் படையில் பயிற்சி பெற்ற நூற்று ஐம்பது இளைஞர்கள் இணைந்து செயல்பட்டனர்.

அஸ்ஸாம்-பெங்கால் ரயில்வே’யின் கருவூலத்தை பட்டப்பகலால், சுட்டெரிக்கும் சூரிய வெளிச்சத்தில் 1923ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் நாள் தமது புரட்சிப்படை தோழர்களுடன் தாக்கிச் சூரையாடினார். சூர்யா சென் போலீசியிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்டார். ஆனால் சூர்யா சென் 1926ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, விசாரணையின்றி சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் 1928ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

சிட்டகாங் துறைமுகப் பட்டிணத்தில் பிரிட்டிஷ் அரசு ஆயுதக் கிடங்கு ஒன்றை அமைத்திருந்தது. வங்கப் புரட்சியாளர்களை ஒடுக்குவதற்கு அங்கிருந்துதான் பிரிட்டிஷ் போலீசாருக்கும், இராணுவத்தினருக்கும் ஆயுதங்கள் வழங்கப்பட்டு வந்தது.

அந்த ஆயுதக் கிடங்கை கைப்பற்றி சிட்டகாங் நகரை சுதந்திர நகராகப் பிரகடனப்படுத்த வேண்டுமென்று, ‘இந்துஸ்தான் குடியரசு இராணுவம்’என்ற புரட்சிப் படையின் தளபதியை சூர்யாசென்னும் அவரது தோழர்களும் திட்டமிட்டனர்.

சிட்டகாங்க ஆயுதக் கிடங்கை கைப்பற்றும் திட்டம் 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி செயல்படுத்தப்பட்டது. புரட்சித் தளபதி சூர்யா சென் தலைமையில் 125 புரட்சி வீரர்கள் ஆயுதக் கிடங்கை முற்றுகையிட்டனர்.

பிரிட்டிஷ் இராணுவ வீரர்கள் மீது வெடிகுண்டுகளை வீசினார்கள். எதிர்த்துப் போரிட்ட பிரிட்டிஷ் இராணுவ வீரர்களை துப்பாக்கியால் சுட்டுப் பொசுக்கினார்கள். வாள் வீச்சால் பலரை பலி கொண்டனர். புரட்சிப் படையின் ஒரு பிரிவு ஆயுதக் கிடங்கை சுற்றி வளைத்தது. மற்றொரு பிரிவு தொலைபேசி நிலையத்தை தகர்த்தெறிந்து தகவல் தொடர்பை துண்டித்தது. இன்னொரு பிரிவு இரயில் தண்டவாளங்களைத் தகர்த்து போக்குவரத்தைத் தடுத்தது. நான்காவது பிரிவு துறைமுகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. ஆயுதக் கிடங்கில் குவித்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும் மூட்டைகளாக் கட்டி எடுத்துக் கொண்டு, ஆயுதக் கிடங்கை தீ வைத்து கொளுத்தினர். ஆயுதக் கிடங்கின் பிரிட்டிஷ் தளபதி மேஜர் பெர்ரோல் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆயுதக் கிடங்கு சூரையாடப்படுவதை கேள்வியுற்ற பிரிட்டிஷ் அரசு, கூர்க்கா படைப் பிரிவின் தளபதி ஜான்சன் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவம் விரைந்த வந்தது. தாக்குதல் தீவிரமடைந்தது. பிரிட்டிஷ் இராணுவத்தினர் 75 பேர் கொல்லப்பட்டனர். புரட்சியாளர்கள் 42 பேர் வீரமரணமடைந்தனர். சூர்யசென் தலைமையிலான புரட்சிப்படை ஆயுத மூட்டைகளுடன் சிட்டகாங் நகரைக் கடந்து, ஜலாலாபாத் மலைப் பகுதிக்கு தப்பிச் சென்றது. 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 முதல் 22 ஆம் தேதிவரை நடைபெற்ற போரில் தேவி குப்தா, மனோரஞ்சன் தாஸ், ரஜத்சென், சுதேஷ்ராய், அமரேந்திர நந்தி முதலிய புரட்சிப் படையின் வீரர்களும் களப்பலியானார்கள். புரட்சிப் படையின் வீரர்கள் சிலரை பிரிட்டிஷ் படையினர் கைது செய்தனர்.

சூர்யா சென் தலைமையில் தப்பிச் சென்ற புரட்சிப் படையினர் ‘காலகட்டம்’ என்ற கிராமத்தில் சாவித்திரியம்மாள் என்ற விதவைத்தாயின் குடிசையில் தங்கி தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். சூர்யாசென் தலைமறைவு வாழ்க்கையில் விவசாயக் கூலியாகவும், பால்காரராகவும், புரோகிதராகவும், வீட்டு வேலைக்காரராகவும் வேடமிட்டு பல பணிகளைச் செய்தார்.

சூர்யா சென் தலைக்கு பிரிட்டிஷ் அரசு பத்தாயிரம் ரூபாய் விலை வைத்தது. ஆனால், பணத்துக்கு ஆசைப்பட்டு கிராம மக்கள் யாரும் காட்டி கொடுக்க முன்வரவில்லை. மாறாக பாதுகாப்பு அளித்தனர்.

பிரிட்டிஷ் அரசின் காவல்துறை எப்படியோ மோப்பம் பிடித்து, புரட்சித் தளபதி சூர்யா சென்னும் அவரது தோழர்களும் ‘காலகட்டம்’ கிராமத்தில் தலைமறைவாகத் தங்கியுள்ளனர் என்பதை தெரிந்து கொண்டனர்.

பிரிட்டிஷ் இராணுவ கேப்டன் கெம்சன் என்பவனின் தலைமையில் இராணுவம் புறப்பட்டு, மறைந்திருந்த புரட்சியாளர்களை சுற்றி வளைத்தது. சூர்யா சென்னும் அவரது புரட்சித் தோழர்களும் வீரமுடன் போரிட்டனர். புரட்சியாளர்கள் வீசிய வெடிகுண்டுக்கு கேப்டன் கெம்சன் பலியானான். சூர்யா சென்னும், அவரது புரட்சித் தோழர்களும் தப்பிச் சென்றனர்.

தலைமறைவான சூர்யா சென், கைராலா என்ற கிராமத்தில் தமது உறவினராக நேத்ரா சென் என்பவர் வீட்டில் தங்கியிருந்தார். பிரிட்டிஷ் அரசு அறிவித்த பத்தாயிரம் ரூபாய் பணத்துக்கு ஆசைப்பட்டு நேத்ரா சென் பிரிட்டிஷ் அரசின் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து விட்டான். துரோகி கேப்டன் கேமரான் தலைமையில் பிரிட்டிஷ் போலீஸ் படை கணப்பொழுதில் வீட்டைச் சுற்றி வளைத்து சூர்யா சென்னை கைது செய்தது. ஒரு துரோகி காட்டிக் கொடுத்ததால் பிரிட்டிஷ் அரசு சூர்யா சென்னை கைது செய்து சிறையிலடைத்தது,

நேத்ரா சென்னின் துரோகத்தை அவனுடைய மனைவி சாவித்திரி தேவியால் ஏற்க முடியவில்லை. ஒருநாள் மாலைப் பொழுதில் தனது கணவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். அப்போது சூர்யா சென்னின் புரட்சிப் படையின் வீரன் ஒருவன் வீட்டிற்கு வந்து காட்டிக் கொடுத்த துரோகி நேத்ரா சென்னின் தலையை வெட்டி வீசினான். சாவித்திரி தேவி அதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பிரிட்டிஷ் அரசின் போலீஸ் சாவித்திரி தேவியிடம், நேத்ரா சென்னை வெட்டிக் கொன்றது யார் என விசாரணை மேற்கொண்டது. அப்போது அவள், “கொலையாளியைத் தெரியும், ஆனால் கூற முடியாது”, என்றாள் துணிச்சலுடன். நேத்ரா சென் என்ற ஒரு தேசச் துரோகிக்கு மனைவியாக வாழ்க்கைப்பட்டதற்காக நான் வருந்துகிறேன். என் கணவன் இந்த சிட்டகாங் கண்டெடுத்த நாயகனைக் காட்டிக் கொடுத்த கயவன். அதன் மூலம் இந்தியத் தாயின் முகத்தில் மாறாத வடுவை உருவாக்கிவிட்டான். அதனால், அந்த நீசனைக் கொன்றவனின் பெயரை நான் கூற விரும்பவில்லை. எங்கள் ‘மாஸ்டர்தா’ சூர்ய சென்னை நீங்கள் தூக்கிலிடுவீர்கள் என்பதை நான் அறிவேன். நாங்கள் அவரை நேசிக்கிறோம். அன்பு ததும்ப எங்கள் நெஞ்சத்தில் வைத்து வணங்குகிறோம். “சூர்யா’ என்றால் சூரியன். ஆம், எங்கள் சூரியனின் புகழ் என்றும் மறையாது. இந்திய வரலாற்றில் சூர்யா சென் பெயர் என்றும் நீங்காது, சுடர் ஒளியாக பரவும்”- என்று அறிவித்தாள் சாவித்திரி தேவி.

சிட்டகாங் சதி வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் 1930 ஆம் ஆண்டு ஜீலை மாதம் தொடங்கியது. 29 மாதங்கள் தொடர்ச்சியாக வழக்கு விசாரணை நடைபெற்றது. புரட்சிக்காரர்கள் தமக்காக வாதாட வழக்கறிஞர்களை அமர்த்தவில்லை. குற்றத்தை மறுக்கவில்லை. முhறாக அதை நியாயப்படுத்தி வாதாடினார்கள்.

சூர்யா சென் கட்டளைப்படி, 1932 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று, பிரிதிலதா வடேகர் சில புரட்சித் தோழர்களை அழைத்துக் கொண்டு பஹார்தலி என்ற இடத்தில் உள்ள ‘அய்ரோப்பியர் கிளப்’பை தாக்கினார்.

ஆங்கிலேய உயர் அதிகாரிகள் கிளப்பில் மாலை நேரத்தில் மது அருந்தி, சீட்டாடி, நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். அங்கே ஒரே இடத்தில் கூடியுள்ள ஆங்கிலேய அதிகார வெறிபிடித்தவர்கள் அனைவரையும் வெடிகுண்டு வீசிக் கூண்டோடு கொன்றழிக்க வேண்டும் என்று பிரிதிலதாவிற்கு கட்டளையிட்டார் சூர்யாசென்.

திட்டமிட்டபடி, இரண்டு புரட்சித் தோழர்கள் கோச் வண்டியில் கிளப்புக்குள் முன்புற வழியாக நுழைந்தனர். மற்ற தோழர்கள் பின்புற வழியாக நுழைந்தனர். பிரிதிலதா கரம் உயர்த்தி ஆணையிட்டதும், கிளப்புக்குள் வெடிகுண்டுகளை சரமாறியாக வீசினார்கள். வெடிகுண்டு வீச்சில் பிரிட்டிஷ் அதிகாரிகள் மது மயக்கத்தில் தள்ளாடிக் கொண்டு, பயந்து பீதியில் மூலைக்கொருவராய் ஓடி ஒளிந்தனர். ‘ஒருவனைக் கூட உயிர் தப்பவிடாமல் சுட்டுத் தள்ளுங்கள்’ என்று பிரிதிலதா உத்தரவிட்டார். தானும் தம்மிடம் இருந்த துப்பாக்கியால் பிரிட்டிஷ் அதிகாரிகளை சுட்டுத் தள்ளினார். பிரிட்டிஷ் அதிகாரிகள் பலர் துப்பாக்கிச் சூட்டில் மாண்டனர்.

பிரிதிலதாவை பிரிட்டிஷ் காவலர்கள் சுற்றி வளைத்தனர். இனிமேல் தப்ப முடியாது என்ற நிலையில் தமது இடுப்பில் செருகியிருந்த ‘பொட்டாசியம் சயனைட்’ டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிரிதிலதா தற்கொலை செய்து கொள்ளும் முன்பு “இதோ என் துப்பாக்கி. இதை எடுத்துச் சென்று நம் தலைவரிடம் கொடுங்கள். போகும் வரை முடிந்த மட்டும் வெள்ளை நாய்களை சுட்டுப் பொசுக்குங்கள், இதுதான் என் கடைசி விருப்பம். அனைவரும் தப்பி விடுங்கள். தலைவருக்கு என் இறுதி வணக்கம்” என்று முழங்கினார்.

பிரிட்டிஷ் காவல்படையினர் பிரிதிலதாவின் பிணத்தைத்தான் கைப்பற்ற முடிந்தது. இறுதிவரை அந்த புரட்சி வீராங்கனையின் நிழலைக் கூடத் தொடமுடியவில்லை.

சிட்டகாங் ஆயுதக் கிடங்கு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமது தீர்ப்பை வெளியிட்டது. அத்தீர்ப்பில் அனந்த சிங் மற்றும் 12 புரட்சியாளர்கள் ஆயுள் முழுவதும் நாடு கடத்தப்பட வேண்டும் எனவும், மற்ற புரட்சியாளர்களுக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டது. சூர்யா சென் மற்றும் தாரகேஸ்வர் தஸ்தகீர் இருவருக்கும் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டது.

சிட்டகாங் மத்திய சிறையில் 1934 ஆம் ஆண்டு சனவரி மாதம் 12 ஆம் நாள் சூர்யா சென்னும், தாரகேஸ்வர் தஸ்தகீரும் தூக்கிலிடப்பட்டனர். தூக்குத் தண்டனை அளிக்கப்பட்ட சூர்யாசென், தாரகேஸ்வர் ஆகிய இருவரும் சிட்டகாங் சிறைச் சாலையில் சித்ரவதை செய்யப்பட்டு அடித்தே கொல்லப்பட்டனர் என்றும், அவர்கள் பிணத்தைத்தான் ஆங்கிலேய ஆட்சியினர் தூக்கிலிட்டனர் என்பது பின்னர் நிரூபிக்கப்பட்டது. பின்னர் அவர்களின் சடலங்களை பிரிட்டிஷ் போர்க்கப்பலில் எடுத்துச் சென்று நடுக்கடலில் வீசியெறிந்து தங்களது வெறியைத் தீர்த்துக் கொண்டனர்.

இந்திய விடுதலைக்காக புரட்சிப்படை அமைத்து பிரிட்டிஷ் அரசின் இராணுவத்துடன் நேருக்கு நேர் நின்று போரிட்ட வீர வரலாறு சூர்யா சென்னுக்கு மட்டுமே உண்டு. ஆண்களோடு, பெண்களும் புரட்சிப் படையில் இணைந்து போராடிய வரலாறு சூர்யா சென்னின் புரட்சிப் படைக்கே உண்டு.


வரலாற்றின் பக்கங்களில் இன்று புதையுண்டு இருக்கும் வீரர்களின் தியாகத்தை என்றும் மனதில் வைப்போம்.  பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்.