சனி, 27 செப்டம்பர், 2014

கொஞ்சம் அரசியல் பேசலாமா ?

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் அதிமுகவின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா இன்று குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப் பட்டார். நான்கு வருட சிறைத் தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

இனி என்ன நடக்கலாம் ?

அறுதிப் பெரும்பான்மை இருப்பதால் இப்போது உள்ள சட்டமன்றம் கலைக்கப் படாது என்று நான் நம்புகிறேன். வழக்கம் போல ஒரு புது முதல்வரை ஜெ கைகாட்டி, அவரை அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்வார்கள். கொள்கை அளவில் இதே ஆட்சி நீடிக்கும்.

ஆனால், நான்கு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அதன் பிறகு ஆறு ஆண்டு தேர்தலில் நிற்கத் தடை என்றால், நேரடி அரசியலில் ஜெ அடுத்த பத்து வருடத்தில் ஈடுபட முடியாது. அரசியலில் பத்து ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம். அத்தனை வருடம் கட்சியைத் தன் கட்டுப்பாடில் அவர் வைத்து இருக்க முடியும் என்று நான் நம்பவில்லை. இரண்டாம் கட்டத் தலைவர்கள் இல்லாத கட்சி காலப்போக்கில் காணமல் போகவே வாய்ப்பு இருக்கிறது.

நிச்சயமாக இந்தத் தீர்ப்பு திமுகவிற்கு ஒரு பெரும் வாய்ப்பை உருவாக்கி இருக்கிறது. தமிழகம் எங்கும் கிளை இயக்கங்கள், களத்திலும் இணையத்திலும் தீவிரமாக இயங்கக்கூடிய கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் சர்வ நிச்சயமான ஒரு வாக்கு வங்கி என இன்றைய நிலை திமுகவிற்கு சாதகமாகவே இருக்கிறது.

ஆனால், பல திமுக மாவட்டச் செயலாளர்கள், மற்றும் மந்திரிகள் மீது மக்களுக்கு உள்ள கோபம், தலைமையின் குடும்ப வாரிசு அரசியல், அதன் வழி பற்றி மாவட்டங்களில் உள்ள வாரிசு அரசியல் என்று நம்பிக்கை இழந்த ஒரு பெருங்கூட்டம் திமுகவிற்கு பாதகமாகவே இருக்கறது.

2G அலைக்கற்றை வழக்கும், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் மீது உள்ள வழக்குகளும் வேகம் பெற்று, ஒரு வேளை அந்தத் தீர்ப்புகள் திமுகவிற்கு பாதகமாக வந்தால், ஊழலைப் பற்றிய திமுகவின் பிரச்சாரம் மக்கள் மனதைக் கவருவது சங்கடமே.

2016 தேர்தலில் யார் முதல்வர் கலைங்கரா இல்லை ஸ்டாலினா என்ற விவாதம் தேர்தலில் எதிரொலிக்கும் என நான் நினைக்கிறேன்.

அதிமுகவின் வாக்கு வங்கி என்பது பெரும்பான்மையாக திமுகவின் எதிர்ப்பாளர்களால் கட்டமைக்கப் பட்டது. அதனை யார் கைப்பற்றுவார்கள் என்பது தான் இன்று பல கட்சிகளுக்கு முன் உள்ள கேள்வியாக இருக்கும். எம் ஜி யாரால் கட்டமைக்கப் பட்ட அந்த வாக்கு  எங்கே செல்லும், யார் அதனை அடைவார்கள் என்பதே இன்று பலர் முன் உள்ள வினா

காங்கிரஸ், பா ஜ க, கம்யூனிஸ்ட் என்ற தேசியக் கட்சிகள் இங்கே பயன் அடையப் போகிறார்களா இல்லை மதிமுக, பாமக, தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள என்று தமிழ்நாட்டில் சில இடங்களில் மட்டும் ஊடுருவி உள்ள கட்சிகள் வளர்ச்சி காணுமா என்பதை வருங்காலம் காட்டும்.

எது எப்படி இருந்தாலும், தமிழக அரசியல் களம் மிகப் பெரிய மாற்றத்தின் முன்னே இருக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை


வெள்ளி, 26 செப்டம்பர், 2014

ஆழி பெரிதா





ஹிந்துத்வ இயக்கத்தினரால் சற்றே பயம் கலந்த மரியாதையுடனும், இடதுசாரி மற்றும் திராவிட இயக்கவாதிகளால் எரிச்சலுடனும் சுட்டப்படும் அரவிந்தன் நீலகண்டன் அவர்களால் தமிழ் பேப்பர் இணையதளத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இந்தியாவின் பண்டைய காலத்தின் சிந்தனைப் போக்கையும், காலம் காலமாக அது எழுப்பி வந்த கேள்விகளைப் பற்றியும் ஆராய்கிறது இந்த நூல்.

வடக்கே சிந்து நதி முதல் தெற்க்கே கடல் கொண்ட ( அல்லது கொண்டதாகக் நம்பப்படும் ) லெமுரியா வரை பரவி இருந்தது தமிழர் நாகரீகம், அதனை கைபர்  கணவாய் வழியாக வந்த ஆரியர்கள் அழித்து விட்டார்கள் எனவும் பரந்த இந்த நிலப்பரப்பு  ஒரே நாடாக ஒருநாளும் இருந்தது இல்லை என்றும், பண்பாட்டு ரீதியாக, கலாசார ரீதியாக வெவ்வேறு தேசிய இனங்கள் ஆங்கிலேயர் காலத்தில் ஒன்றாகக் கட்டமைக்கப்பட்டது இந்தியா என்ற தோற்றம் என்றும் பேசுபவர்களுக்கு, பண்பாட்டு ரீதியாக எப்படி ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிலப்பரப்பில் ஒரே தத்துவம் உயிர்ப்போடு இருக்கிறது என்று பதில் அளிக்கிறது இந்த நூல்.

ஒரே இறைவன் ஒரே இறைநூல் ஒரே மார்க்கம் என்ற தத்துவம் எதனாலோ இந்த மண்ணில் ஒருபோதும் வேர்விடவில்லை. உண்மையை அறிய பல்வேறு வழிகள் இருக்கலாம் என்ற பன்மைத்தன்மையை இந்த நாடு மீண்டும் மீண்டும் உரக்கக் கூறிக்கொண்டே இருக்கிறது.

இறை நம்பிக்கை மட்டும் அல்ல இறைமறுப்பும் இணைந்தே இங்கே வேர்விட்டு உள்ளது. படைப்புக்கு ஒரு முதல்வன் தேவையா ? படைப்பும் படைத்தவனும் வேறுவேறா அல்லது  ஓன்றுதானா ? படைத்தவன் முதல்பொருளா அல்லது காரணப் பொருளா ? படைப்பு என்பது அவனிடம் இருந்தே படைக்கப் பட்டதா இல்லை வேறு எதையோ வைத்து அவன் படைத்தானா என்ற விரிவான விவாதங்கள் இங்கே நடந்து இருக்கிறது.

"வேத ரிஷிகள் கேள்விகளைக் கேட்கத் தூண்டினார்கள். தங்கள் அனுபவங்களைச் சொன்னார்கள். என்றாலும் இறுதிவிடை உங்களிடமிருந்துதான் வரவேண்டும். கையேடு பாதையாகிவிடாது. அனுபவமே சத்தியம். வேதங்கள் அனுபவத்துக்கு கீழேதான். எனவே கேள்விகளை அவர்களே கேட்டார்கள்."

இப்படிக் கேட்ட கேள்விகளும் அதற்க்கு கிடைத்த கிடைத்த பதில்களும் தான் உபநிடதங்கள் எனத் தொகுக்கப் பட்டன. அதுபோலவே அரவிந்தன் இந்த நூலில் பலப் பல கேள்விகளை எழுப்பி அதற்க்கு விடை காண முயற்சி செய்கிறார்.

வேதத்தில் குறிக்கப்  படும் வேள்விகள் எதனைச் சுட்டுகின்றன, வேள்வி மேடைகளுக்கும் இன்றும் நமது வீடுகளில் வரையப்படும் கோலங்களுக்கும்  ஏதாவது தொடர்ப்பு இருக்கிறதா ?

இன்று போதை அளிக்கும் பானமாக காட்டப்படும் சோமம் என்ற பானம் உண்மையில் என்னவாக இருக்க முடியும் ?

அநேகமாக எல்லா இறைக் கோட்பாடுகளிலும் காட்டப் படும் பிரளயம் என்பது என்னவாக இருந்து இருக்கக் கூடும் ?

இன்றும் பல்வேறு மக்களின் நினைவில் வாழும் சரஸ்வதி நதி பற்றிய விவாதங்கள்

இந்திய நாகரீகத்தில் பெண் தெய்வங்கள் இருந்தனவா ? இருந்தால் அவர்கள் எந்த இடத்தைப் பெற்று இருந்தார்கள் ?

காலத்தையும் மனதைப் பற்றியும் வேத நூல்கள் என்ன கூறுகின்றன ?

பண்டைய நாகரீகத்தைச் சேர்ந்த மனிதர்களுக்கு கடல் பற்றிய ஞானம் இருந்ததா, கடலோடிகள் அந்த சமுதாயத்தில் இருந்தார்களா ?

வேத நூல்கள் காட்டும்  அறம் என்பது எவையெல்லாம் ? விவசாயம் பற்றி, உணவைப் பகிர்ந்து அளிப்பது பற்றிய சிந்தனை எப்படி உருவாகி வளர்ந்து வந்து இருக்கிறது

வேத நாகரீகத்தில் எந்த எந்த மிருகங்கள் குறிக்கப் படுகின்றன ? குறிப்பாக அந்தக் காலக் கட்டத்தில் குதிரை பயன்படுத்தப் பட்டதா

அஸ்வமேத யாகம் என்பது என்ன ? அது வளமையைக் குறிக்கும் சடங்கா அல்லது திராவிடவாதிகள் சொல்வது போல வெறும் பாலியல் ஆபாசமா ?

( இங்கே நினைவு கொள்ள வேண்டிய ஒரு முக்கிய அம்சம், இந்தக் கலாசாரத்தில் ஆண் பெண் உறவு என்பது பாவம் என்று ஒருபோதும் கருதப்படவில்லை என்பது )

ஆரிய என்ற சொல் எதனைச் சுட்டுகிறது ? ஒரு தனி இனத்தையா ? அல்லது குணத்தைக் குறிக்கவே அந்தச் சொல் பயன்படுத்தப்பட்டதா ?

தமிழர்கள் தனி இனம், அவர்களுக்கும் இந்தியப் பண்பாடு என்று குறிக்கப் படுவதற்கும் தொடர்ப்பு இல்லை என்ற கருத்து உண்மையா ?

புறநானூறும் மற்றைய சங்க இலக்கியங்களும் வேத நெறிகளைப் பற்றி, வேள்வி முதலான சடங்குகளைப் பற்றி ஏதாவது சொல்லி இருக்கிறதா ?

சதியைத் தடை செய்த ஆங்கிலேய அரசு, குழந்தைத் திருமணங்களை ஏன் தடை செய்ய விரும்பவில்லை ?


கேள்விகள் கேள்விகள், முடிவுறாது மீண்டும் மீண்டும் எழும்பும் கேள்விகள். இவற்றிக்கு மிகச் சிறந்த வழக்கறிஞர் போல வேத நூல்களில் இருந்தும், பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் தரும் விவரங்கள் மூலமும் தனது வாதத்தை முன்வைக்கிறார்.

நல்ல விவாதச் சூழலில், அரவிந்தனின் இந்தப் புத்தகத்தை முன்வைத்து எதிர் வாதங்களும், அதற்க்கான ஆதாரங்களும் அளிக்கப் பட்டு இருக்க வேண்டும். ஆனால் துரதிஷ்ட வசமாக இணையத்தில் இந்தத் தொடர் வெளியாகும் போது  இதற்கான எதிர்மறை வெறும் கூச்சலும், பழிச் சொல்லுமாகவே முடிந்து போய் விட்டது.

ஹிந்துத்வர்களும், அவர்களை மறுப்பவர்களும் கட்டாயம் படித்து விவாதிக்க வேண்டிய நூல் இது.

ஆழி பெரிதா என்பதை நான் அறியேன், ஆனால் அரவிந்தனது படிப்பும் உழைப்பும் மிகப் பெரிது. 

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

பிடித்த பத்து

எழுத்துக் கூட்டி தமிழ் வாசிக்க ஆரம்பித்த வயது முதல் இன்று வரை எனக்குப் பிடித்த பத்து புத்தகங்கள் இவை.

இதிகாச புராணம்

1. வியாசர் விருந்து - மூதறிஞர் ராஜாஜி அவர்கள் தமிழில் எழுதிய மகாபாரதம். ஒரு கதைக்குள் பல கதை, பல கதைக்கும் ஒரு விதை என்று ஆழ்ந்து அகன்று விளங்கும் பாரதக் கதையைப் புரிந்து கொள்ள, எந்த ஆரம்ப நிலை வாசகனுக்கும் கட்டாயமாக மிக உதவியாக இருக்கும் நூல். அநேகமாக வியாசர் காட்டும் எல்லாப் பாத்திரங்களையும் விடாமல் ராஜாஜி இந்த நூலில் காட்டி இருப்பார்.

2. காவ்ய ராமாயணம் -  டெல்ஹியை சேர்ந்த K S ஸ்ரீநிவாசன் என்பவர் எழுதிய புத்தகம் இது. இந்தியாவின் புகழ் வாய்ந்த ராமாயணங்கள் மூன்று. வடமொழியில் ஆதிகவி வால்மீகி எழுதியது, தமிழில் கம்பன் படைத்தது, ஹிந்தி மொழியில் துளசிதாசர் யாத்தது. இதில் வால்மீகி காட்டும் ராமன் உயர்குணங்கள் கொண்ட அரசகுமாரன், ஆனால் கம்பனும் துளசியும் காட்டும் ராமன் அவதார புருஷன். இந்த மூன்று நூல்களும் எங்கே எல்லாம் ஒத்துப் போகிறது, எங்கே எல்லாம் மாறுபடுகிறது என்பதை ஆசிரியர் மிக விவரமாகக் கூறி இருப்பார். பொதுவாக பல புத்தகங்களில் இல்லாத உத்தரகாண்டதையும் எழுதி இருப்பது இந்த நூலின் சிறப்பு.


தொழில், சுய முன்னேற்ற நூல்கள் 

3. Lee Iaccoca - An Autobiography - போர்ட் மோட்டார் கம்பனியின் முதல்மைச் செயல் நிர்வாகியாக இருந்தவரின் வாழ்க்கை வரலாறு. இத்தாலியைச் சேர்ந்த இவரை அந்த நிறுவனத்தின் உரிமையாளர் இரண்டாம் போர்ட் வேலையை விட்டு நீக்கி விடுகிறார். பின்னர் லீ அயகோகா நட்டத்தில் இயங்கிக் கொண்டு இருக்கும் க்ரைசெலர் மோட்டார் நிறுவனைத்தை லாபத்தில் மாற்றிய வரலாறு.

4. Seven Habits of Highly Effective People -  ஸ்டீபன் கோவே என்பவர் எழுதிய புத்தகம். மற்ற பல சுய முன்னேற்ற நூல்கள் எல்லாம் மேற்கத்திய சிந்தனை மரபில் இருக்கும் போது, அதற்க்கு மாறாக கீழ்த்திசைச் சிந்தனையை முன்னெடுக்கும் நூல் இது. பிறரை மாற்ற முயற்சி செய்வதற்கு முன்னர் நம்மை மாற்றும் வழிகளை விவரிக்கும் நூல் இது.

5. Tough Time doesn't last long, tough people do - ராபர்ட் ஷுல்லர் என்ற கிருஸ்துவப் பாதிரியார் எழுதிய நூல் இது. தோல்விகளையும் ஏமாற்றங்களையும் சந்திக்கும் போது துவண்டு விடாமல் அதனை எதிர்கொள்வது பற்றியும், தோல்வியில் இருந்து வெற்றிக்கு முன்னேறும் வழியையும் கூறும் நூல் இது.

வரலாறு 

6. Glimpses of World History -  பதின்ம வயதில் இருக்கும் தன் மகள் இந்திரா பிரியதரிசினிக்கு சிறையில் இருந்து ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதங்களின் தொகுப்பு. அநேகமாக உலக வரலாற்றையும், கொந்தளிப்பான ஒரு காலகட்டத்தில் இருந்த இந்தியாவையும் அறிந்து கொள்ள ஒரு சிறந்த நூல்.

7. சத்திய சோதனை - காந்திஜி அவர்களின் சுய சரிதை. அநேகமாக தான் உண்மை என்று நினைத்ததை, மறைக்காமல் சொன்ன மிகச் சில நூல்களில் இதுவும் ஓன்று.

8. May it please your honor - இதனை நூலாகக் கருத முடியுமா என்ற கேள்விக்கு என்னிடம் விடை இல்லை. காந்தி கொலை வழக்கில் நாதுராம் கோட்சே நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம். மகாத்மா என்று கொண்டாடிய ஒரு மனிதனின் முன்னின்று கைத்துப்பாக்கியால் சுட வேண்டிய அவசியம் எது என்று கோட்சேயின் கூற்று.

தமிழ் மொழிப் படைப்புகள் 

9. சுஜாதாவின் படைப்புகள் - சுஜாதா படிப்பாளியா, இலக்கியவாதியா என்ற கேள்விக்குள் போகாமல், ஒரு காலகட்டத்தில் பல மக்களைப் படிக்க தூண்டியவர் என்ற நிலையிலும், பல்வேறு விசயங்கள் பற்றி ஒரு கோடு காட்டிப் படிக்கத் தூண்டியவர் என்ற முறையிலும் இந்தப் பரிந்துரை.

10. பாரதியார் கவிதைகள் - இவனுக்கு முன்னால் உள்ள தமிழ் இலக்கியங்கள் எல்லாம் இவனோடே முடிவடைந்து, இவனுக்குப் பின்னால் உள்ள தமிழ் இலக்கியங்கள் எல்லாம் இவனிடம்  ஆரம்பிக்கிறது என்ற பெருமை பெற்ற யுகசந்திக் கவிஞன். மொழியின் வீச்சைக் கற்க பாரதியை விடச் சிறந்த ஆசானை நான் படிக்கவில்லை இதுவரை.