செவ்வாய், 23 ஜூலை, 2013

2. வரலாற்றின் பாடங்கள்

நைனிடால் சிறையில் இருந்து ஜவஹர்லால் நேரு தனது மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்களின் மொழிபெயர்ப்பு 

                    ------------------------------------------------------------

ஜனவரி 5, 1931

என் கண்ணே, நான் உனக்கு எதை எழுதுவது ? எங்க ஆரம்பிப்பது ? பழங்காலத்தைப் பற்றி நான் நினைக்கும் போது எல்லாம் பலதரப் பட்ட சித்திரங்கள் என் மனதில் தோன்றுகின்றன. அதில் சில நினைவுகள் மற்றவற்றைக் காட்டிலும் அதிகமான நேரம் என் மனதை ஆக்கிரமிக்கிறது. அவை என் மனதிற்கு நெருக்கமானவைகள். அவைகளைப் பற்றி நான் நினைக்கும்போது எல்லாம், தற்போதைய நிகழ்சிகளுடன் அவைகளை நான் ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிடுகிறது. அப்படிச் செய்யும் போது, வரலாற்றின் மூலம் நாம் என்ன பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம் என்ற சிந்தனையும் எழுகிறது.

ஒன்றோடு ஓன்று தொடர்பில்லாத ஓவியங்களின் அணிவகுப்பு போல, மனித மனதின் சிந்தனைகள் இருந்து வருகிறது. நம்மால் வரலாற்றின் நிகழ்சிகளை ஓரளவு வரிசைப் படுத்திவிட முடியும், ஆனால் பல நேரங்களில் இந்த நிகழ்சிகளே அதிசயமாகவும், ஏதாவது ஒரு வகையில் நேராகத் தொகுக்கக் கூடியதாக இருப்பது இல்லை என்பது தான் உண்மை.

வரலாற்றைப் படிப்பது என்றால் எப்படி இந்த உலகம் மெதுவாக ஆனால் நிச்சயமாக மாற்றிக்கொண்டே இருக்கிறது என்பதைப் பற்றியும், எப்படி மிருகங்கள் எல்லாம் பரிணாம வளர்ச்சியில் மாறி, மாறி முடிவில் அறிவில் சிறந்த மனிதன் என்ற மனிதன் என்று ஆகி, அந்த மனிதனும் தனது அறிவின் துணையோடு மற்ற மிருகங்களை எல்லாம் அடக்கி ஆண்டான் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது தான். காட்டுமிராண்டி என்ற நிலையில் இருந்து நாகரீகத்தை நோக்கிய மனிதனின் பயணமே வரலாறு.

பொதுவான ஒரு இலக்கை நோக்கி ஒருவரோடு ஒருவர் இணைந்து பணி செய்யும் கூட்டுறவு முறை எப்படி வளர்ச்சி அடைந்தது என்பதைப் பற்றி நான் உனக்கு முன்னரே கூறி உள்ளேன். ஆனால் வரலாற்றின் நீண்ட பக்கங்களை உற்று நோக்கினால், இந்த கூட்டுறவு முறை போதுமான அளவு நடைமுறையில் இருக்கிறதா என்பது விவாதிக்கப் பட வேண்டிய ஒன்றாகவே எனக்குத் தோன்றுகிறது.

மனிதர்கள் ஒருவரை ஒருவர் சுரண்டும், நாடுகள் ஒன்றை ஓன்று சுயலாப நோக்கிற்காக தாக்கும் இந்த நாள்களில், கூட்டுறவின் தேவை மிக அதிகமாகவே உள்ளது. பல லட்ச ஆண்டுகளின் முயற்சிக்குப் பின்னும், மனிதன் இன்னும் சுயலாப நோக்குடன் செயல்படும் போது, நாம் பண்பட்ட மனிதர்களாக மாற இன்னும் எத்தனை காலம் பிடிக்கும் ? வரலாற்றின் பக்கங்களில் பல நேரங்களில், உலகம் இப்போது இருப்பதை விட சிறந்ததாக, நாகரீகமாக இருந்தது போல நமக்கு தோன்றுகின்றது. அது போன்ற நேரங்களில் நாம் முன்னேறிக் கொண்டு இருக்கிறோமா அல்லது பின்னோக்கிச் சென்று கொண்டு இருக்கிறோமா என்ற சந்தேகம் நமக்கு வருகிறது. நமது நாட்டிற்க்கும், இப்போது உள்ள நிலையைக் காட்டிலும் சிறந்த ஒரு கடந்த காலம் உள்ளது.

இந்தியா, எகிப்து, சீனா, கிரேக்கம், இது போன்ற பல நாடுகளுக்கு ஒரு சிறந்த கடந்த கால வரலாறு உண்டு. ஆனால் பல நாடுகள் அந்த சிறந்த நிலைமையை விட்டுப் பின்னோக்கிச் சென்றதும் உண்டு. ஆனால் இதற்காக நாம் மனம் தளர வேண்டியது இல்லை. எந்த ஒரு நாட்டின் வளர்ச்சியோ அல்லது தாழ்ச்சியோ மிகப் பெரிய அளவில் உலகத்தைப் பாதிப்பது இல்லை.

மகத்தான கடந்த காலம் பற்றியும், அறிவியல் முன்னேற்றங்கள் பற்றியும் பலர் இன்று பழம்பெருமை பேசிக்கொண்டு இருப்பதை நீ அறிவாய். அறிவியல் அறிஞர்கள் போற்றப் படவேண்டியவர்கள்தான். ஆனால் இப்படிப் பழம்பெருமை பேசுபவர்கள் அப்படிப் பட்ட மனிதர்கள் இல்லை. அப்படி ஒன்றும் மனிதன் பல மிருகங்களை விட மிகப் பெரிய முன்னேற்றங்களை அடைந்து விட்டான் என்று சொல்ல முடியாது. இன்று கூட பல மிருகங்கள் மனிதனைக் காட்டிலும் சிறந்தவையாகவே இருக்கின்றன.

எனது இந்தக் கூற்றை சரியான முறையில் புரிந்து கொள்ளாத மனிதர்கள் என்னைப் பார்த்து எள்ளி நகையாடக் கூடும்.

நீ இப்போது தான் மேட்டர்லிங்க் எழுதிய எறும்புகளின் உலகம் என்ற புத்தகத்தைப் படித்து முடித்ததாகச்சொன்னாய், அந்தப் பிராணிகளின் சமூக அமைப்பைப் பற்றி யோசித்துப் பார். இன்று வாழும் உயிர் இனங்களில் மிகச் சிறியவை அவை, ஆனால் மனிதர்களைக் காட்டிலும் கூட்டுறவு முறையிலும், அந்த இனத்தின் பொதுவான நன்மைக்காக தியாகம் செய்யவும் அவை பல படிகள் முன்னால் உள்ளது. பரஸ்பர உதவி செய்வதும், பொது நன்மைக்காக தியாகம் புரிவதும், நாகரீகத்தின் அளவுகோல் என்றால் எறும்புகள் மனிதர்களைக் காட்டிலும் நாகரீகமானவை.

" ஒரு குடும்பத்திற்காக ஒரு உறுப்பினரையும், ஒரு சமுதாய நலனுக்காக ஒரு குடும்பத்தையும், ஒரு நாட்டின் நலனுக்காக ஒரு சமுகத்தையும், தன்னை உணர உலகத்தையும் தியாகம் செய்யலாம்" என்று ஒரு சமிஸ்கிரத நூல் கூறுகிறது. தன்னை உணர்தல் என்றால் என்ன என்பதை நாம் ஒவொருவரும் நமக்கு தோன்றும் படி கூறலாம், ஆனால் இந்தக் கருத்து என்னைப் பொறுத்தவரை பொது நன்மைக்காக தியாகம் செய்வதையே குறிக்கிறது.

இந்த மகத்தான உண்மையை நாம் பல ஆண்டுகளாக மறந்து விட்டோம், அதுவே நமது வீழ்ச்சிக்கு காரணம். இப்போது இதனை நாம் புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம். தங்கள் தனிப்பட்ட துயரங்களைப் பற்றி கவலைப் படாமல், இந்த நாட்டின் விடுதலைக்காக பாடு படும் மக்களைப் பார்க்கும் போது, நம்பிக்கை வருகிறது. ஒரு மிகப் பெரிய புனிதமான  பணியில் அவர்கள் ஈடு பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். நாம் இன்று நாட்டின் விடுதலைக்காக போராடிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இதில் நமது சுதந்திரம் மட்டும் இல்லை, உலக மக்களின் பல கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு பதிலும் இருக்கிறது. எனவே உலக நன்மைக்காகவே இந்தப் போராட்டம்.

இன்று நீ அலகாபாத் ஆனந்தபவனத்தில், நான் நைனிடால் சிறையில், உனது தாயார் மலாகா சிறையில். மீண்டும் ஒரு நாள் நாம் ஒன்றாகக் கூடுவோம், அந்த நினைப்பே இப்போது என்னை சந்தோசம் கொள்ளச் செய்கிறது.


















ஞாயிறு, 14 ஜூலை, 2013

3. புரட்சி ஓங்குக !

நைனிடால் சிறையில் இருந்து ஜவஹர்லால் நேரு தனது மகள் இந்திரா காந்திக்கு எழுதிய Glimpses of World History என்கிற கடிதங்களின் மொழிபெயர்ப்பு. 
                               --------------------------------------------------------------

ஜனவரி 3, 1931.

பிரியதர்ஷினி,

காண்பதற்கு இனியவள் நீ, காணாதபோது இன்னும் இனியவளாக இருக்கிறாய்.

இன்று உனக்கு நான் கடிதம் எழுதத் தொடங்கும்போது, வெகு தொலைவில் இடியோசை போன்ற ஒரு முழக்கத்தைக் கேட்டேன். சிறிது சிறிதாக அந்த முழக்கம் வலுப்பெற்று எங்களை நோக்கி வந்தது, நம் எல்லோருக்கும் பரிச்சியமான முழக்கம், நமது கேள்விகளுக்கு விடை தரும் முழக்கம் அது.

 இன்குலாப் ஜிந்தாபாத்                                                                 புரட்சி ஓங்குக

இந்தப் பெருமுழக்கம் எங்கள்  காதுகளுக்கு வெகு இனிமையாக இருந்தது. இதனை எழுப்புவார்கள் யார் ? ஆண்களா, பெண்களா, நகர மக்களா அல்லது கிராமத்து மனிதர்களா எதுவும் எங்களுக்குத் தெரியாது. இன்று இந்த முழக்கம் எழுப்பப்படும் காரணத்தையும் நாங்கள் அறியவில்லை. ஆனாலும், இந்தப் புரட்சிப் முழக்கத்திற்கு எங்கள் நல்வாழ்த்துகளை நாங்கள் இந்தச் சிறையில் இருந்து அனுப்பி வைத்தோம்.

நாம் ஏன் "புரட்சி ஓங்குக" என்ற முழக்கத்தை எழுப்பவேண்டும் ? மாற்றத்தையும், புரட்சியையும் நாம் ஏன் விரும்பவேண்டும் ? இந்தியா இன்று ஒரு மிகப் பெரும் மாற்றத்தை  எதிர்நோக்கி உள்ளது. அந்த மாறுதல் நடந்தபிறகும், இந்தியா சுதந்திரத்தை அடைந்த பின்னரும், நாம் ஓய்வெடுக்க முடியாது. இந்த உலகில் உயிரோடு உள்ள எல்லாமும் மாறிக்கொண்டே இருக்கின்றன. இயற்கை நொடிக்கு நொடி, நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கிறது. இறந்தவைகள் மட்டுமே மாறாமல் இருக்கும். ஓடாத தண்ணீர் குட்டையாகத் தேங்கி விடுகிறது.

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நாம் மாறிக்கொண்டே இருக்கிறோம். குழந்தைகள் சிறுமிகளாக, சிறுமிகள் இளம் பெண்களாக, இளம் பெண்கள் பருவ மங்கையர்களாக, மங்கையர்கள் பேரிளம் பெண்கள் என்று மாறுவது தான் இயற்கை. நாம் இந்த மாறுதல்களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். ஆனால் பலர் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் மனதையும், அறிவையும் மூடிக்கொண்டு எந்த புது விசயமும் அவர்களை வந்துஅடைவதை மறுத்துக் கொண்டு வாழ்கிறார்கள். யோசிப்பது என்பதே அவர்களைப் பயமுறுத்துவதாக உள்ளது.

இப்படிப் பட்ட மனிதர்களை புறம்தள்ளி உலகம் முன்னேறிச் செல்கிறது, மாறவிரும்பாத மனிதர்கள் வரலாற்றின் பக்கங்களில் இருந்து காணாமல் போய் விடுகிறார்கள். பிரெஞ்சு புரட்சி, ரஷியப் புரட்சி போன்ற நிகழ்சிகள் வரலாற்றின் திசையை முழுவதுமாக மாற்றிவிடுகிறது.

நாம் இன்று ஒரு புரட்சிக் காலத்தின் நடுவில் இருக்கிறோம். நாம் சுதந்திரத்தை விரும்பிப் போராடுகிறோம், ஆனால் வெறும் சுதந்திரம் மட்டும் அல்ல, அதனைத் தாண்டியும் பல விசயங்கள் நமக்கு தேவை. புதிய காற்று நமது நாடு எங்கும் வீச வேண்டும். பழைய கசடுகளையும், வறுமையையும், துன்பத்தையும் நாம் முழுவதுமாக அகற்ற வேண்டும். இந்தப் புனிதமான பணிக்கு பங்களிப்பதைத் தடுக்கும் வேறு வேறு எண்ணங்களை நமது மக்கள் மனதில் இருந்தும் நாம் அகற்றவேண்டும். இது ஒரு சவாலான காரியம்தான், ஆனால் நாம் முயற்சி செய்யத்தான் வேண்டும். அதற்க்கான உந்துசக்தியை இந்த முழக்கம் நமக்கு அளிக்கும்

" இன்குலாப் ஜிந்தாபாத்"                                                   " புரட்சி ஓங்குக" 

எதிர்காலம் நமக்கு எதனைத் தரும் என்பது யாரும் அறியாத ஓன்று. ஆனால் நிகழ்காலம் நமது வேலைக்கான பரிசை நிச்சயமாகத் தந்து தான் உள்ளது. அன்பான, அதே நேரத்தில் கம்பீரமான, யாராலும் தடுக்க முடியாத நமது நாட்டின் பெண்கள் இந்தப் புனிதமான வேள்வியில் தங்கள் இடத்தைத் தாங்களே எடுத்துக் கொண்டுவிட்டார்கள். நமது அழகான பெண்களைத் தடுத்து இருந்த பர்தா இன்று கண்காட்சி சாலையில் முடங்கி விட்டது.

இந்த நாட்டின் குழந்தைகள், அவர்கள் பெற்றோரைப் போல் இல்லாமல் பயம் என்பதே இல்லாமல் அடிமை விலங்கை உடைக்கத் தயார் ஆகி விட்டார்கள்.

மேலென்றும் கீழென்றும் சக்கரம் சுழல்கின்றது, அதில் தான் சரித்திரம் நிகழ்கின்றது. ஆனால் அந்தச் சக்கரத்தை மேல் நோக்கி தள்ளும் நமது கடமை நமக்கு உள்ளது

இன்குலாப் ஜிந்தாபாத்                                                             புரட்சி ஓங்குக 


சனி, 13 ஜூலை, 2013

1.புத்தாண்டுப் பரிசு

நைனிடால் சிறையில் இருந்து ஜவஹர்லால் நேரு தனது மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்களின் மொழிபெயர்ப்பு 

     ------------------------------------------------------------------------------------------------

புத்தாண்டு தினம் 1931

ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு முன்னால், நான் அலஹாபாத் நகரிலும் நீ முசோரி நகரிலும் இருந்த போது நான் உனக்கு எழுதிய கடிதங்கள் உனக்கு நினைவு இருக்கும் என்று நான் நம்புகிறேன். அந்தக் கடிதங்களை நீ விரும்பியதாக எனக்குச் சொல்லி இருக்கிறாய். நமது உலகத்தைப் பற்றிய விஷயங்களை உன்னோடு நான் ஏன் பகிர்ந்து  கொள்ள வில்லை என்று நான் அடிக்கடி யோசிப்பது உண்டு. ஆனால் ஏனோ எனக்கு ஒரு தயக்கம். பழங்காலத்தைப் பற்றியும், மகத்தான மனிதர்களைப் பற்றியும் யோசித்துக் கொண்டு இருப்பது நன்றாகத் தான் இருக்கும். வரலாற்றைப் பற்றிப் படிப்பது உற்சாகமான  ஒரு பொழுதுபோக்குத்தான், ஆனால் அதை விட முக்கியமானது வரலாற்றை உருவாக்குவது. இன்று நமது நாட்டின் வரலாறு உருவாகி  வருகிறது என்பதை நீ அறிவாய்.

நமது நாட்டின் வரலாறு என்பது மிகப் பழமையானது, பல நேரங்களில் அது அந்தப் பழமையில் மறைந்தும் போய் விடுகிறது. வருத்தம் தரக் கூடிய, நாம் கேவலமாக எண்ணக் கூடிய நிகழ்சிகள் பல நம் வரலாற்றில் உண்டு, ஆனால் முழுமையான ஒரு சித்திரம் என்பது நாம் பெருமையோடு எண்ணும் வகையில் தான் நமது சரித்திரம் இருக்கிறது. ஆனால் இன்று நாம் நமது பழம்பெருமைகளைப் பற்றி நினைக்கும் நிலையில் இல்லை, நமது சிறப்பான எதிர்காலமே நாம் இன்று நினைக்க வேண்டிய ஓன்று. வருங்காலத்தை உருவாகும் பணியில் நமது நிகழ்காலம் கடந்து போய்க்கொண்டு இருக்கிறது. 

இந்த நைனிடால் சிறையில் படிக்கவும், எழுதவும் எனக்கு நேரம் நிரம்ப இருக்கிறது. ஆனால் எனது மனம் வெளியே சுற்றித் திரிகிறது, பெருமை வாய்ந்த விடுதலைப் போராட்டமும், அதில் பங்கெடுக்கும் மக்களின் வீரச் செயல்களும் என் மனதில் நிறைந்து உள்ளன.  நான் இப்போது வெளியே இருந்தால் என்ன செய்து கொண்டு இருப்பேன் என்ற எண்ணமும் எனக்கு உள்ளே ஓடிக் கொண்டு இருக்கிறது. நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் நான் முழுமையாக ஆழ்ந்து இருப்பதால் கடந்த காலத்தைப் பற்றி எண்ண எனக்கு நேரம் இருப்பது இல்லை. ஆனால் நடக்கும் நிகழ்ச்சிகளில் நான் பங்கெடுக்காத போது அதனைப் பற்றி எண்ணி என்ன பயன் ? 

ஆனால் நான் எழுதாமல் இருந்ததற்கான உண்மையான காரணம் எது என்று உனக்குச் சொல்லவா ! உனக்கு கற்றுக் கொடுக்கும் அளவு எனக்கு வரலாறு தெரியுமா என்ற ஐயம் எனக்கு உள்ளது. நீ வளர்ந்து கொண்டு இருக்கிறாய் கண்மணி, நான் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கற்றுக் கொண்டவைகளைத் தாண்டி நீ வளர்ந்து விட்டாய், இப்போது நான் கற்றுக் கொண்டவைகளும், நான் உனக்கு சொல்லுவதும் உனக்கு உற்சாகம் ஊட்டுவதாக இருக்குமா என்ற ஐயம் எனக்கு இருக்கிறது. இன்னும் சில காலத்தில் நீயே எனக்கு ஆசிரியராக மாறி பலவற்றை எனக்கு கற்றுக் கொடுப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. உன் பிறந்த நாளில் நான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்ட உலகின் மிக அறிவாளியான மனிதனைப் போல நான் என்னை எண்ணிக் கொள்ள ஒருநாளும் மாட்டேன். 

உலகின் ஆதி நாட்களின் கதையை நீ முசோரியில் இருந்த போது எழுதியது மிக எளிது. ஏன் என்றால் அந்த நாட்களைப் பற்றிய நமது அறிவு என்பது மிகக் குறைவு. ஆனால் அந்த நாட்களைத் தாண்டிய பின்னர், வரலாறு உருவாகும் போது மனிதன் தனது இருப்பைத் தக்க வைக்கும் பயணங்களை ஆரம்பிக்கிறான். சில நேரங்களில் சவாலான, பல நேரங்களில் முட்டாள்தனமான அந்தப் பயணத்தைப் பின்தொடர்வது என்பது  கடினமான ஓன்று. ஒரு வேளை சரியான புத்தகங்கள் இருந்தால் அதனை முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால் இங்கே நைனிடால் சிறையில் நூலகம் என்பது இல்லை. ஆகையால் நான் விரும்பினாலும் ஒரு முழுமையான ஒரு உலக வரலாற்றை உனக்கு சொல்ல முடியுமா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.

ஒரே ஒரு நாட்டின் வரலாற்றையோ அல்லது சில நாட்களையும் சில மனிதர்களையும் பற்றிப் படிப்பதை வரலாற்றைத் தெரிந்து கொள்வது என்று நினைக்கும் மாணவர்கள் என்னைக் கவருவது இல்லை. வரலாறு என்பது ஒன்றோடு ஒன்று தொடர்புடைய நிகழ்சிகளைக் கொண்டது, உலகத்தின் பல பகுதிகளில் என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ளாமல், ஒரு நாட்டின் வரலாற்றிப் புரிந்து கொள்ள முடியாது என்பது தான் என் எண்ணம். நீ வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்ளுவது என்றால் அப்படி முழுமையாகப் படித்து அறிய வேண்டும், ஓன்று இரண்டு நாட்டின் சரித்திரத்தைப் பற்றி மட்டும் தெரிந்து கொள்வதில் எந்தப் பயனும் இல்லை.

நாம் நினைப்பது போல மனிதர்கள் இடம் மிகப் பெரிய வேறுபாடுகள் இருப்பது இல்லை. உலக வரைபடங்கள் நாடுகளைப் பல வண்ணங்களில் காட்டலாம். மனிதர்கள் பிறர்களிடம் இருந்து மாறுபட்டு இருந்தாலும், அவர்கள் மற்றவர்கள் போலவே மிக அதிகமாக இருக்கிறார்கள். ஆகவே நாடுகளின் எல்லைக்கோடுகளைக் கொண்டோ அல்லது வரைபடங்கள் காட்டும் நிறங்களின் மூலமோ மனிதர்களை நாம் வேறுபடுத்திப் பார்க்கக் கூடாது.

நான் எழுத நினைக்கும் வரலாற்றை நான் உனக்கு எழுதப் போவது இல்லை, அதற்கு  நீ இன்னும் பலப் பல புத்தகங்களைப் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் எனக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் கடந்த காலத்தைப் பற்றியும், அப்போது இருந்த மனிதர்கள் பற்றியும், அவர்கள் செய்த சிறப்பான செயல்களைப் பற்றும் நாம் எழுதுகிறேன்.

நான் எழுதும் இந்தக் கடிதங்கள் உனக்கு கிடைக்குமா என்பதும், அப்படிக் கிடைத்தாலும் அவை உனக்கு ருசிகரமாக இருக்குமா என்பதையும்  நான் அறியேன். மிக அருகில் இருந்தாலும் நாம் மிகத் தொலைவில் தான் இப்போது இருக்கிறோம். பல நூறு மைல்களுக்கு தொலைவில் நீ முசோரி நகரில் இருந்த போது, நான் நினைத்த நேரம் எல்லாம் உனக்கு எழுத முடிந்தது, தோன்றிய நேரம் எல்லாம் உன்னைக் காண என்னால் விரைந்து வர முடிந்தது.

ஆனால் நைனிடால் சிறையின் இந்த உயர்ந்த மதில்கள், யமுனை நதியின் இரு கரையிலும் இருக்கும் நம்மைப் பிரித்து வைத்து உள்ளது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை உன்னிடம் இருந்து எனக்கு ஒரு கடிதமும், ஒரு முறை என்னிடம் இருந்து ஒரு கடிதமும், இருபது நிமிட நேர்காணலும் மட்டுமே இப்போது சாத்தியம். ஆனால் இந்தக் கட்டுப்பாடுகளும் நல்லதுதான், ஏன் என்றால் எளிதாகக் கிடைக்கும் எதனையும் நாம் மதிப்பது இல்லை. படிக்கும் பழக்கம் இருக்கும் எவருக்கும் சிறைவாழ்க்கை என்பது நன்மை செய்யக் கூடிய ஒன்றுதான், ஆனால் என்ன, இன்று இந்த வாய்ப்பு இந்தியாவில் பலருக்கு கிடைத்து உள்ளது.

இந்தக் கடிதங்களை நீ விரும்புவாயா என்பதை நான் அறியேன், ஆனால் எனது மகிழ்ச்சிக்காக நான் இவைகளை எழுதத் தொடங்கி விட்டேன். இந்த முயற்சி என்னை உன்னுடன் நெருக்கமாக இருக்க வைக்கிறது, உன்னுடன் பேசுவது போலவே நான் இப்போது உணர்கிறேன்.  நான் உன்னை அடிக்கடி நினைத்துக் கொள்வது உண்டு, ஆனால் இன்று முழுவதும் உன் எண்ணம் தான் என்னை ஆக்கிரமித்துக் கொண்டு உள்ளது. இது புதுவருடப் பிறப்பு. இன்று அதிகாலையில் நான் படுக்கையில் இருந்தவாறே கடந்து சென்ற வருடத்தைப் பற்றி எண்ணிக் கொண்டு இருந்தேன். நம்பிக்கைகளும் வருத்தங்களும், வீர தீரச் செயல்களும் கலந்த  ஒரு வருடம் அது.

நான் பாபுஜியைப் பற்றி எண்ணிக்கொண்டு இருந்தேன், ஏர்வாடா சிறையில் இருந்தவாறே அவர் இந்த பழமையான தேசத்தை இளமையான துடிப்புமிக்க ஒன்றாக மாற்றி வருகிறார்.நான் உன் தாத்தாவைப் பற்றியும் மற்ற பலரைப் பற்றியும் நினைத்துப் பார்த்தேன். முக்கியமாக உனது தாயார். பகல் பொழுதில் உன் தாயார் கைது செய்யப்பட்டு சிறைக்கு கொண்டு செல்லப் பட்டார் என்ற செய்தி கிடைத்தது. ஒரு மகிழ்வான புத்தாண்டுப் பரிசு அது. முன்னமே எதிர்பார்க்கப் பட்ட ஓன்று தான் அது, இந்த சிறைவாசம் உன் தாயாருக்கு சந்தோசத்தை தான் தரும்.

ஆனால் நீ தான் தனியாக இருப்பாய். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நீ உன் தாயையும் என்னையும் பார்க்க முடியும். எங்கள் இருவரின் செய்திகளையும் நீ தாங்கிச் செல்லுவாய். கையில் எழுதுகோலும், தாளும் வைத்துக் கொண்டு நான் உன்னை நினைத்துக் கொண்டு இருக்கிறேன். அப்போது சத்தமே இல்லாமல் நீ என் அருகில் வருகிறாய், நாம் இருவரும் பேச ஆரம்பித்து விடுகிறோம். நமது நாட்டின் சிறப்பான கடந்தகாலம் பற்றியும், அதை விடச் சிறப்பான ஒரு எதிர்காலத்தை உருவாக்குவது பற்றியும் நாம் பேசிக் கொண்டு இருப்போம்.

இந்த ஆண்டு முடியும் போது, நமது கனவிற்கு அருகில்  நாம் இருப்போம் என்ற ஒரு உறுதியை நாம் இப்போது எடுத்துக் கொள்வோம். சிறப்பான நமது நாட்டின் வரலாற்றிற்கு ஒரு பிரகாசமான பங்களிப்பை நாம் செய்யோம் என்ற உறுதிமொழியை நாம் எடுக்க வேண்டும்.

அன்புடன் 

வெள்ளி, 12 ஜூலை, 2013

பிறந்த நாள் பரிசு

நைனிடால் சிறையில் இருந்து ஜவஹர்லால் நேரு தனது மகள் இந்திரா காந்திக்கு எழுதிய Glimpses of World History என்கிற கடிதங்களின் மொழிபெயர்ப்பு. 


அறையும் ஆடரங்கும் படப் பிள்ளைகள்
தறைவில் கீறிடின், தச்சரும் காய்வரோ?
இறையும் ஞானம் இலாத என் புன் கவி,
முறையின் நூல் உணர்ந்தாரும், முனிவரோ?

                                                              - கம்பன் 

        --------------------------------------------------------------

                                                                                                                                                                                            அக்டோபர் 26, 1930


அன்பே பிரியதர்சினி,  

இது உனது பிறந்தநாள். உன் எல்லாப் பிறந்த நாட்களிலும் நான் உனக்கு வாழ்த்துகளையும் பரிசுகளையும் அளிப்பது வழக்கம். இன்று நைனிடால் சிறையில் இருந்து நான் உனக்கு என்ன பரிசுகளை அளிக்க முடியும். நெடிது உயர்ந்த இந்த சிறையின் மதில் சுவர்கள் கூட தடுக்க முடியாத பரிசு எனது எண்ணங்களும் சிந்தனைகளும் தான். 

கண்ணே, உபதேசம் செய்வதையும், அறிவுரைகள் கூறுவதையும் நான் விரும்புவதே இல்லை என்பதை நீ அறிவாய். எப்போதாவது அறிவுரை கூற நான் ஆரம்பிக்கும் போது, நான் எப்போதோ படித்த உலகின் மிக அறிவாளியான மனிதனின் கதை எனக்கு வந்து விடுகிறது. 

பதின்மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னால் சீன தேசத்தில் இருந்து, அறிவையும் ஞானத்தையும் தேடி யுவாங் சுவாங் என்ற பயணி இந்தியாவிற்கு வந்தார். அவரது ஆர்வம், பனி படர்ந்த இமய மலையும், பாலைவங்களையும் தாண்டி பலப் பல சவால்களையும் அபாயங்களையும் கடந்து இந்தியாவிற்கு வர வைத்தது. இன்று பாட்னா என்று அறியப்படும் பாடலிபுத்திர நகரத்தின் அருகே உள்ள நாலந்தா பல்கலைக்கழகத்தில் அவர் கற்றுக்கொண்டும், பிறருக்கு கற்றுக் கொடுத்ததும் வாழ்ந்து வந்தார். 

அவர் இந்தியா முழுதும் பயணம் செய்து, அந்த நாள்களில் இந்த நாட்டில் வசித்து வந்த மக்களையும் அவர்கள் வாழ்க்கை முறைகளையும் கற்றுத் தேர்ந்தார். புத்தரின் போதனைகளில் அவர் அன்று மிகப் பெரிய அறிஞர் என்று கொண்டாடப் பட்டார். அவர் எழுதிய புத்தகத்தில் இந்த மிக அறிவாளியான மனிதனின் கதை இருக்கிறது.

இது தென் இந்தியாவில் இருந்து, இன்றைய பகல்பூர் நகருக்கு அருகில் உள்ள கர்னசுவர்ண என்ற நகருக்கு வந்த ஒருவரைப் பற்றிய கதை. இந்த மனிதர் தனது வயற்றைச் சுற்றி தாமிர தகடுகளையும், தலையில் ஒரு ஒளி விடும் ஒரு விளக்கையும் அணிந்து இருந்தார். இப்படிப் பட்ட ஒரு வினோதமான ஒப்பனையில் அவர் பல இடங்களுக்கு பயணித்து வந்தார். ஏன் இப்படிப் பட்ட உடை என்று கேட்பவர்களுக்கு, அறியாமையில் உழறும் மக்களுக்கு வழி காட்ட தலையில் விளக்கையும், தனது அறிவின் கூர்மையால் தனது வயறு வெடித்து விடாமல் இருக்க வேண்டி தாமிர தகடுகளை அணிவதாக அவர் விளக்கம் அளித்து வந்தார்.  

ஆனால் அப்படி வயறு வெடிக்கும் அளவிற்கு நான் அறிவாளியும் இல்லை, எனது அறிவு எனது வயற்றிலும் இல்லை. எங்கே எனது அறிவு இருந்தாலும் அது முழுமை அடையவில்லை என்பதும், கற்றுக் கொள்ள இன்னும் இந்த உலகில் பல விசயங்கள் உள்ளன என்பதையும் நான் அறிந்து வைத்து உள்ளேன். என் குறைவான அறிவோடு நான் எப்படி பிறருக்கு அறிவுரை சொல்ல்வது ? 

எது சரி, எது சரி இல்லை என்பதையும் எது செய்யத் தக்கது எது செய்யத் தகாதது என்பதையும் அறிவுரைகளால் புரிந்து கொள்ள முடியாது. பேசுவதன் மூலமூம், விவாதங்களின் மூலமுமே உண்மையைப் பற்றி, அதுவும் சிறிதளவு புரிந்து கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். 

உன்னுடன் பேசுவதையும் விவாதிப்பதையும் நான் மிக விரும்பிச் செய்து வந்து உள்ளேன். ஆனால் நமது உலகம் மிகப் பெரியது. நமது உலகத்தைத் தாண்டி உள்ள உலகங்கள் இன்னும் புதுமையானது. ஆகவே யுவாங் சுவாங் கூறும் அறிவாளியைப் போல நாம் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு விட்டோம் என்றும், இனி தெரிந்து கொள்ள வேண்டியது எதுவும் இல்லை என்று என்ன வேண்டிய அவசியம் இல்லை. 

புதிதாக எதையாவதை தெரிந்து கொள்ளும் ஒரு சந்தோஷமான அனுபவத்தை அனுபவிக்காமல், நாம் முற்றும் தெரிந்த அறிவாளிகள் என்று எண்ணிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே நான் உனக்கு எதையும் உபதேசிக்கப் போவது இல்லை. அப்படி என்றால் நான் என்ன செய்ய ? ஒரு கடிதம் என்பது ஒரு பேச்சுவார்த்தைக்கு ஒரு போதும் ஈடாக முடியாது. ஏன் என்றால் ஒரு ஒரு பக்கக் கருத்தையே தாங்கி வர முடியும். எனது இந்தக் கடிதம் ஒரு அறிவுரை போல் இருந்தால் அதனை நீ ஒரு கசப்பான மருந்து என எண்ணி அருந்த வேண்டாம். நாம் பேசுவது போலவே, உன்னை யோசிக்க வைக்க நான் தூண்டுவதாகவே எடுத்துக் கொள். 

வரலாற்றின் பக்கங்களில் நாம் நாடுகளின் மிகச் சிறந்த காலகட்டங்களையும், மிகச் சிறந்த ஆண்கள் மற்றும் பெண்களைப் பற்றியும், கற்பனைக்கு எட்டாத நிகழ்சிகளைப் பற்றியும் படிக்கிறோம். பல நேரங்களில் நமது கற்பனை நம்மை அது போன்ற இறந்த காலத்திற்கே நம்மை அழைத்துச் சென்று விடுகிறது. அந்த கதாநாயகர்கள் போலவும் கதாநாயகிகள் போலவும் நாம் நம்மைக் கற்பனை செய்து கொண்டு விடுகிறோம். 

ஜோன் ஆப் ஆர்க் பற்றி முதல் முதலில் நீ படித்த போது அடைந்த பரவசம் உனக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கறேன். சாதாரண மனிதர்கள் ஒருபோதும் கதாநாயகர்கள் ஆவது இல்லை, அவர்கள் தங்கள் தினப்படி வாழ்க்கையைப் பற்றியும், தங்கள் குழந்தைகள் பற்றியும், குடும்பக்க் கவலைகள் பற்றியும் மட்டுமே நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். 

ஆனால் சில நேரங்களில் எல்லா மாந்தர்களும் ஒரு மிகப் பெரிய சவாலால் தூண்டப் பட்டு, சாதாரண மனிதர்கள் கூட நாயகர்கள் ஆகி விடுகிறார்கள். வரலாறு அப்போது மிகவும் விறுவிறுப்பாக மாறி, புதிய அத்தியாயங்கள் எழுதப் பட்டுகின்றன. மிகப் பெரிய தலைவர்கள் தோன்றி சாதாரண மனிதர்களையும் அசாதாரண மனிதர்களாக மாற்றி விடுகிறார்கள். 

1917, நீ பிறந்த வருடம் உலக வரலாற்றில் ஒரு மறக்க முடியாத வருடம். 
தன் நாட்டு மக்கள் மீது அன்பும், கனிவும் பாசமும் கொண்ட ஒரு மனிதன் உலகம் மறக்க முடியாத ஒரு புரட்சியை ஆரம்பித்த வருடம் அது. நீ பிறந்த அதே மாதத்தில் ரசியாவின் வரலாற்றையே மாற்றிய ஒரு புரட்சியை லெனின் ஆரம்பித்தார். 

அதே போல இன்று, இந்தியாவின் சாமானிய மக்களின் நலனைப் பற்றி எண்ணிக் கொண்டு, சாதாரண மக்களை அசாதாரணமான மனிதர்களாக மாற்றும் பணியில் பாபுஜி ஈடுபட்டு இருக்கிறார். தங்கள் சுமைகளில் இருந்து நமது மக்கள் விடுபடவும், மீண்டும் அவர்கள் சுதந்திரமான மனிதர்களாக மாற முடியும் என்ற நம்பிக்கையை அவர் மக்களிடம் விதைத்துக் கொண்டு வருகிறார். 

பாபுஜி இப்போது சிறையில் இருக்கிறார், ஆனால் அவரது செய்தி இந்த நாட்டின் ஆண்கள், பெண்கள் ஏன் குழந்தைகளைக் கூட அவர்கள் கூட்டில் இருந்து வெளியே வரச் செய்து, இந்த நாட்டின் போர் வீரர்களாக அவர்களை மாற்றி உள்ளது. இந்தியாவின் வரலாறு எழுதப்படும் நேரம் இது, அதனை நமது கண்களின் முன்னால் காணவும், அதில் பங்கு பெறவும் என்ற ஒரு நல்ல வாய்ப்பு உனக்கும் எனக்கும் கிடைத்து உள்ளது. 

இந்த மகத்தான பணியில் நாம் என்ன பங்கு வகிக்க முடியும் ? நமக்கு என்ன வாய்ப்புகள் கிடைக்கும் ? நான் அறியேன், ஆனால் நாம் எது செய்தாலும் அது இந்தப் பணியின் புகழினைக் குறைக்காமலும், நமது மக்களின் மதிப்பைக் குறைக்காமலும் இருக்க வேண்டும். நாம் இந்தியாவின் போர் வீரர்களாக நாம் மாற வேண்டும் என்றால் இந்தியாவின் மதிப்பின் காவலர்களாக நாம் மாற வேண்டும். இது ஒரு புனிதமான உறுதிமொழி. நாம் செய்வது சரியா தவறா என்ற சந்தேகம் பல நேரங்களில் நமக்கு வரலாம். 

நாம் செய்வது சரியா என்ற கேள்வி உன் முன் எழும்போது, நான் கூறும் இந்த சிறிய பரிசோதனையை நீ செய்து பார். இது உனக்கு உதவியாக இருக்கக் கூடும். நீ மறைக்க நினைப்பதையோ, அல்லது மறைவாகச் செய்வதையோ ஒரு போதும் செய்யாதே. நீ அஞ்சுவதைத்தான் மறக்க நினைப்பாய். பயம் என்பது உனக்கு தேவை அற்றது, புகழைக் கொடுக்காதது. அஞ்சாதே, அப்போது மற்ற எல்லாம் உன்னைப் பின் தொடர்ந்து வரும். நீ துணிவோடு இருந்தால், நீ கேவலமாக எண்ணக் கூடிய எதனையும் நீ செய்ய மாட்டாய். 

பாபுஜீ தலைமையில் நடக்கும் இந்த சுதந்திரப் போராட்டத்தில் ஒளிப்பதர்க்கோ அல்லது மறைப்பதர்க்கோ எதுவும் இல்லை. நாம் சொல்லுவதையோ அல்லது செய்வதைப் பற்றியோ நமக்கு ஒரு பயமும் இல்லை. பிரகாசமான ஒளியின் கீழ் நாம் நமது செயல்களைச் செய்து கொண்டு இருக்கிறோம். நமது தனிவாழ்விலும் கூட நாம் கதிரவனை நமது நண்பனாக ஏற்றுக் கொண்டு ஒளியின் கீழே நமது செயல்களைச் செய்வோம். தனிமை தேவைதான் ஆனால் மறைத்தல் என்பது தேவை இல்லை. 

இப்படி நீ செய்தால், நீ ஒளியின் மகளாக, எதிலும் அச்சமற்றவளாக வளருவாய். 

மிக நீண்ட ஒரு கடிதத்தை நான் எழுதிவிட்டேன், ஆனாலும் இன்னும் பலவற்றை நான் சொல்ல நினைக்கிறேன். எவ்வளவுதான் ஒரு கடிதத்தில் அடக்க முடியும் 

நான் முன்னமே சொன்னது போல, இந்த சுதந்திரப் போராட்டத்தை பார்க்கும் அதிர்ஷம் பெற்றவள் நீ. வீரமான ஒரு பெண் உனக்கு தாயாக உள்ளாள். உனக்கு ஏதேனும் பிரச்சனையோ அல்லது சந்தேகமோ வரும்போது உன் தாய் உனக்கு ஒரு தோழியாக இருந்து உதவுவாள். 

இந்தியாவின் சேவையில் அச்சமற்ற ஒரு போராளியாக நீ வளரவேண்டும். 

அன்பும் நல்வாழ்த்துகளும்.