திங்கள், 30 மார்ச், 2026

மார்ச் 30 - புரட்சியாளர் பண்டிட் ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மா நினைவுநாள்

நாட்டுக்காக உயிரைக் கொடுப்பது சிறப்பானது, அதிலும் சிறந்தது நாட்டுக்காக உயிரோடு இருப்பது. அதிலும் சிறப்பு நாட்டை அடிமைப்படுத்தியவர்கள் நாட்டில் இருந்து கொண்டே தாய்நாட்டின் விடுதலைக்கு உழைப்பது, அதற்கான தேசபக்தர்களை உருவாக்குவது. அப்படி உழைத்த தியாகி பண்டிட் ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மாவின் நினைவுநாள் இன்று.


பாரத நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தொடர்ச்சியாக ஆயுதம் தாங்கிய போராளிகளை லண்டன் நகரில் உருவாக்கிய நிறுவனம் இந்தியா ஹவுஸ். வீர சாவர்க்கர், வ வே சு ஐயர், மதன்லால் திங்ரா, மண்டயம் பார்த்தசாரதி திருமலாச்சாரியா, வீரேந்திரநாத் சட்டோபாத்யாய, காமா அம்மையார், லாலா ஹர்தயாள் என்று புகழ்பெற்ற வீரர்களை உருவாக்கி, தேசசேவைக்கு அளித்த இடம் அது. அதனை நிறுவியவர்தான் பண்டிட் ஷயாமாஜி கிருஷ்ண வர்மா.

1857ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் நாள் நூற்பாலை ஒன்றில் கூலித்தொழிலாளியாகப் பணியாற்றிக்கொண்டு இருந்த கிருஷ்ணதாஸ் பானுஷாலிக்கும் கோமதிபாய் அம்மையாருக்கும் மகனாக இன்றய குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தின் மாண்டவி பகுதியில்  பிறந்தவர் ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மா. தனது சிறு வயதிலேயே தாயாரை இழந்ததால் இவர் தன் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். தனது ஆரம்பிக் கல்வியை புஜ் நகரத்தில் முடித்த கிருஷ்ண வர்மா மேற்படிப்புக்காக மும்பைக்கு வந்தார். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே சமிஸ்க்ரித மொழியில் புலமையை வளர்த்துக்கொண்டார்.

ஆர்ய சமாஜத்தை நிறுவிய ஸ்வாமி தயானந்தரின் சீடராக, வேதாந்த தத்துவத்தை கிருஷ்ண வர்மா கற்றுக்கொண்டார். வடநாட்டில் பல்வேறு இடங்களில் வேதாந்த ஞானத்தைப் பற்றிய சொற்பொழிவுகளை அவர் நடத்தலானார். அவரது மேதைமையைப் பாராட்டி அதனை அங்கீகரிக்கும் விதமாக வாரணாசி நகரத்தில் உள்ள ப்ராஹ்மணர்கள் கிருஷ்ண வர்மாவுக்கு பண்டிட் என்ற பட்டத்தை அளித்து சிறப்பித்தனர். இவரது சமிஸ்க்ரித அறிவைக் கண்டு வியந்த மோனிர் வில்லியம்ஸ் என்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிருஷ்ண வர்மாவை தன் உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார்.

1879ஆம் ஆண்டு லண்டன் சென்ற கிருஷ்ண வர்மா 1883ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1885ஆம் ஆண்டு நாடு திரும்பிய கிருஷ்ண வர்மா வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். இவரது மேதமைக் கேள்விப்பட்டு மத்தியப்பிரதேசத்தில் உள்ள ரத்தினபுரி அரசு இவரை தங்கள் திவானாக நியமித்தது. சிறிது காலத்தில் உடல்நிலை காரணமாக அந்தப் பதவியை ராஜினாமா செய்த கிருஷ்ண வர்மா அஜ்மீர் நகருக்குக் குடியேறி அங்கே வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் உதய்ப்பூர் மன்னரின் அமைச்சராகவும் ஜூனாகாட் அரசின் திவானாகவும் பணியாற்றினார். ஆனால் அன்றய அரசர்களுக்கு வரையறை செய்யப்பட்ட அதிகாரங்கள் இருந்தன. பெரும்பான்மையான அதிகாரங்கள் ஆங்கிலேயர் வசமே இருந்தது. இதனால் மனம் நொந்த கிருஷ்ண வர்மா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் இங்கிலாந்து திரும்பினார்.

ஹிந்து ஞானமரபு வேறு ஹிந்து அரசியல்மரபு வேறு என்று இப்போது சில அறிஞர்கள் பேசத்தொடங்கி உள்ளனர். ஆனால் எப்போதெல்லாம் ஹிந்து அரசியல்மரபு ஹிந்து ஞானமரபோடு இணைந்து செயல்பட்டதோ அப்போதுதான் பாரதம் தலைசிறந்து இருந்தது என்பதுதான் வரலாறு. விஷ்ணுகுப்த சாணக்யனும் சந்திரகுப்த மௌரியன், சமர்த்த ராமதாசரும் சத்ரபதி சிவாஜியும், வித்யாரண்ய ஸ்வாமிகளும் ஹரிஹர புக்கரும், குரு நானக் தொடங்கி குரு கோவிந்தசிம்மன் வழியாக குரு கிரந்த சாஹேப் என்று தேவை ஏற்படும்போதெல்லாம் ஹிந்து ஞானமரபு ஹிந்து அரசியல்மரபிற்கு வழிகாட்டியாக இருந்துள்ளது.

அதன் நீட்சிதான் பத்தொன்பதாம் நூற்றாண்டு பல்வேறு ஹிந்து தர்மத்தின் காவலர்களாக ராமகிருஷ்ண பரமஹம்சரும் அவரது சீடர்களின் வரிசை ஒருபுறமும் சுவாமி தயானந்த சரஸ்வதி போன்றவர்கள் மறுபுறமும் என்று இந்த நாட்டை வழிநடத்த அவதரித்தார்கள். இங்கிலாந்து நாட்டுக்கு படிக்க வரும் பாரத மாணவர்களுக்காக அவர்கள் வசதிக்காக லண்டன் நகரில் வசதி செய்து கொடுக்கும்படி ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மாவுக்கு தயானந்த சரஸ்வதி அறிவுறித்தினார். அதன்படிதான் லண்டன் நகரில் ஒரு பெரிய கட்டடத்தை விலைக்கு வாங்கி இந்தியா ஹவுஸ் என்ற பெயரில் அவர் நிறுவினார். இதன் தொடக்க விழாவில் தாதாபாய் நௌரோஜி, மேடம் காமா ஆகியோர் கலந்து கொண்டனர். லண்டன் வரும் பாரத மாணவர்கள் தங்கிப் படிக்கும் இடமாக லண்டன் ஹவுஸ் விளங்கியது. அதிலும் தேசிய சிந்தனை உள்ள மாணவர்கள் ஓன்று கூடி, நாட்டின் விடுதலைக்காக என்ன செய்யலாம் என்று திட்டமிடும் இடமாகவும் அது விளங்கியது.

அரசியல் சிந்தனைநீட்சியில் கிருஷ்ண வர்மா திலகரின் வழியைப் பின்பற்றுபவராக இருந்தார். மீண்டும் மீண்டும் ஆங்கில அரசுக்கு விண்ணப்பம் அளிக்கும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் அவருக்கு உவப்பாக இல்லை. லண்டன் நகருக்கு வருகை தரும் பல்வேறு தலைவர்கள் லண்டன் ஹவுஸுக்கு வந்து, அங்குள்ள மாணவர்களிடம் உரையாடுவது வழக்கமாக இருந்தது. லாலா லஜபதி ராய், காந்தி போன்றவர்கள் அங்கே வந்துள்ளார்.

ஆயுதம் தாங்கிப் போராடும் எண்ணமுடைய பல்வேறு புரட்சியாளர்களை லண்டன் ஹவுஸ் உருவாக்கியது. அதில் முக்கியமானவர் வீர சாவர்க்கர், வ வே சு ஐயர், மதன்லால் திங்ரா போன்றவர்கள் முக்கியமானவர்கள். ஆங்கில அரசின் கண்கள் இந்தியா ஹவுஸ் மீது படிந்ததைத் தொடர்ந்து கிருஷ்ண வர்மா 1907ஆம் ஆண்டு யாரும் அறியாமல் பாரிஸ் நகருக்கு குடிபெயர்ந்தார். முதலாம் உலகப் போர் தொடங்கும் சாத்தியக்கூறுகளை யூகித்து அறிந்த கிருஷ்ணவர்மா அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து நாட்டுக்கும் பிரான்ஸ் நாட்டுக்கும் நல்லுறவு ஏற்படும் என்று எதிர்பார்த்து ஜெனீவா நகருக்கு சென்றுவிட்டார்.

ஏறத்தாழ முப்பதாண்டு காலம் நாட்டை விட்டுப் பிரிந்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட பண்டிட் ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மா 1930ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் நாள் காலமானார். தேசபக்தரின் மரணச் செய்தியை வெளியில் தெரியாமல் வைத்திருக்க ஆங்கில அரசு முயற்சி செய்தது. ஆனாலும் செய்தி கசிந்து லாகூர் சிறையில் தூக்குத் தண்டனைக்காக காத்துகொண்டு இருந்த பகத்சிங் மற்றும் அவர் தோழர்களும், திலகர் தொடங்கிய மராத்தா போன்ற பத்திரிகைகளும் அவரின் புகழைப் பேசி அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

வாழ்நாளின் பெரும்பகுதியை வெளிநாட்டில் கழிந்த கிருஷ்ண வர்மா தனது அஸ்தியும், தன் மனைவி பானுமதியின் அஸ்தியும் பாரதம் சுதந்திரம் அடைந்த பிறகு பாரத நாட்டுக்கு அனுப்பப்பட்டு அங்கேதான் கரைக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்து, நூறாண்டுகளுக்கு அவர்கள் அஸ்தியை ஜெனீவாவில் உள்ள தூய ஜார்ஜ் கல்லறைத் தோட்டத்தில் அதற்கான பணத்தைக் கொடுத்து ஏற்பாடு செய்திருந்தார்.

1947ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த உடனேயே சகல மரியாதைகளோடும் அவரின் அஸ்தி பாரத நாட்டுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் வரலாற்றை மறைத்து, மாற்றி எழுத முனைப்பாக இருந்த அரசியல்வாதிகளால் அது நடைபெறவில்லை. இறுதியாக 2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி அன்றய குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோதி, பண்டிட் ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மாவின் அஸ்தியையும் அவர் மனைவி பானுமதியின் அஸ்தியையும் பெற்றுக்கொண்டு பாரதம் வந்தார். மும்பையில் இருந்து அவரின் சொந்த ஊரான மாண்டவி நகருக்கு பெரும் ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட அந்த தியாகியின் அஸ்தி கிராந்தி தீர்த் என்ற நினைவிடத்தில் மரியாதையோடு வைக்கப்பட்டு உள்ளது. லண்டன் நகரில் உள்ள இந்தியா ஹவுஸ்  நினைவிடம் உருவாக்கப்பட்டு உள்ளது. கட்ச் நகரில் அருகே உருவான புது நகரம் ஷ்யாமாஜி கிருஷ்ணவர்மா நகர் என்றும், கட்ச் பல்கலைக்கழகத்திற்கு ஷ்யாமாஜி கிருஷ்ணவர்மாவின் பெயரைச் சூட்டி நாடு அந்தத் தியாகிக்கு மரியாதை செலுத்தியது.

எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாது நாட்டுக்காக தங்களை முழுவதும் அர்ப்பணம் செய்த பல்லாயிரம் தியாகிகளின் உதிரத்தால் கிடைத்தது நமது சுதந்திரம். அதனைக் காப்பாற்றுவதும், நாட்டின் பெருமைக்காக நமது திறமைகளை அர்ப்பணம் செய்வதுதான் அந்தத் தியாகிகளுக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்கும். 

புதன், 25 மார்ச், 2026

மார்ச் 25 - போராளி உஷா மேத்தா பிறந்ததினம்

"42.34 மீட்டர் அலைவரிசையில் பாரத நாட்டின் ஒரு பகுதியில் இருந்து காங்கிரஸ் வானொலி நிலையத்தின் ஒலிபரப்பு  இது" - 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் நாள் அது. பாரத நாட்டின் வானொலிகளில் இந்தக் குரல் திடீர் என்று கேட்டது. நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் எல்லாக் குரல்களையும் ஒடுக்கி விட்டோம் என்று இறுமார்ந்திருந்த ஆங்கில ஆட்சிக்கு ஒரு நேரடி சவாலை அந்தக் குரல் எழுப்பியது.  

1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மும்பை நகரில் கூடிய காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநாட்டில் " வெள்ளையனே வெளியேறு" என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்தது.  ஆனால் அதற்கு முன்னரே ஆங்கில அரசு எல்லாத் தலைவர்களையும் கைது செய்து வெவ்வேறு சிறைகளில் அடைத்தது. நாட்டு மக்களுக்கு விடுதலைப் போராட்டத்தில் செய் அல்லது செத்து மடி என்ற அறிவுரை வழங்கப்பட்டது. ஆங்கில அரசோடு எந்த வகையிலும் ஒத்துழைக்க வேண்டாம் என்றும், கல்வி நிலையங்களையும், நீதிமன்றங்களையும் புறக்கணிக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். மாகாணங்களில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் அரசாங்கம் அனைத்தும் ராஜினாமா செய்தன. 

தலைவர்கள் இல்லாத நிலையில் மாநாட்டுப் பந்தலில் காங்கிரஸ் கொடியை ஏற்றி அதிகாரபூர்வமாக போராட்டத்தை தொடங்கி வைத்து விட்டு அருணா ஆசப் அலி தலைமறைவானார். போராட்டத்தை தொடர்ந்து நடத்தவும், போராட்டக்காரர்களை ஊக்குவிக்கவும், போராட்டம் பற்றிய செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு உத்திகள் கையாளப்பட்டன. அதன் ஒரு பகுதியாக செயல்பட்ட காங்கிரஸ் வானொலி நிலைய சேவையை உருவாக்கி நடத்தியவர்தான் போராளி உஷா மேத்தா. 

தொடர்ச்சியான அரசின் கண்காணிப்பில் இருந்து தப்பித்து பல்வேறு இடங்களில் இருந்து இந்த வானொலி தனது ஒளிபரப்பை நடத்தி வந்தது. ராம் மனோகர் லோஹியா, ஜெயப்ரகாஷ் நாராயணன், அச்சுத பட்வர்தன் முதலியோர் உஷாவிற்கு துணையாக இருந்தார்கள். இறுதியில் 1942ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் நாள் உஷா கைது செய்யப்பட்டார். எல்லா ஒலிபரப்பு கருவிகளும் அரசால் கைப்பற்றப்பட்டன. 

உஷா மேத்தா 1920ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் நாள் பிறந்தவர். இவரது தந்தை ஆங்கில அரசில் நீதிபதியாகப் பணியாற்றி வந்தார். இன்றய குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகர் பகுதியில் சரஸ் என்ற கிராமமே உஷாவின் பிறந்த இடமாகும். உஷாவின் ஐந்தாவது வயதில் அந்தப் பகுதிக்கு காந்தி வருகை தருகிறார். அங்கே காந்தி நடத்திய முகாமில் கலந்து கொண்டு உஷா ராட்டையில் துணி நெய்யக் கற்றுக்கொள்கிறார். சைமன் கமிஷனை எதிர்த்து நடைபெற்ற ஊர்வலத்தில் உஷா கலந்து கொள்கிறார். 

அரசு அதிகாரியான உஷாவின் தந்தைக்கு உஷாவின் நிலைப்பாடு பிடிக்கவில்லை. உஷாவின் தந்தை அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர்கள் குடும்பம் மும்பை நகருக்குக் குடியேறுகிறது. இங்கே உஷாவிற்கு பல்வேறு அரசியல்வாதிகளோடு நேரடித் தொடர்பு ஏற்படுகிறது. மிகச் சிறு வயதிலேயே உஷாவின் மனதில் காந்தியின் தாக்கம் ஏற்பட்டதால், வாழ்க்கை முழுவதும் கதர் துணியை மட்டுமே அணிவதாகவும், திருமண உறவில் ஈடுபடாமல் இருக்கப் போவதாகவும் உஷா உறுதி எடுத்துக் கொள்கிறார். மும்பை நகரில் வில்சன் கல்லூரியில்  தத்துவத் துறையில் இளம்கலை பட்டம் பெற்ற பிறகு உஷா சட்டம் படிக்கத் தொடங்குகிறார். ஆனால் 1942ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தால் அவர் சட்டக் கல்லூரியில் இருந்து விலகுகிறார். 

1857இல் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப்போர் சரியான தகவல் தொடர்பு இல்லாத காரணத்தால்தான் வெற்றி அடையவில்லை என்று நம்பிய உஷா வெள்ளையனே வெளியேறு போராட்டமும் அப்படி முடிந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் காங்கிரஸ் வானொலி நிலையத்தை தலைமறைவாக நடத்தி வந்தார். அரசின் தணிக்கை முறை கடுமையாக இருந்த காலம் அது. பத்திரிகைகள் மூலமாக எந்த விதமான தகவல்களும் நாட்டு மக்களுக்கு சென்று சேரவில்லை. அந்தக் குறையை உஷா நடத்திவந்த காங்கிரஸ் வானொலி தீர்த்து வைத்தது. பதிவு செய்யப்பட்ட பல்வேறு தலைவர்களின் சொற்பொழிவுகள், போராட்டம் பற்றிய தகவல்கள் தொடர்ச்சியாக இதில் ஒலிபரப்பானது 

கைது செய்யப்பட்ட உஷா ஆறுமாதங்கள் தன்மைசிறையில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். வானொலியை தான் மட்டுமே நடத்தியதாகவும் இதில் வேறு எவருக்கும் எந்தப் பொறுப்பும் இல்லை என்று உஷா கூறினார். அரசின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த உஷாவிற்கு நான்காண்டு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டு அவர் பூனா நகரில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். 1946ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பாம்பாய் ராஜதானியின் தற்காலிக உள்துறை அமைச்சர் திரு மொரார்ஜி தேசாய் உஷாவை விடுதலை செய்து ஆணை பிறப்பித்தார். 

நாடு விடுதலை அடைந்த பிறகு தனது படிப்பை மீண்டும் தொடர்ந்த உஷா மேத்தா, காந்திய சித்தாந்தத்தில் முனைவர் பட்டம் பெற்றார். மும்பை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றத் தொடங்கிய உஷா மேத்தா வரலாறு மற்றும் குடிமையியல் துறையின் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். ஆங்கிலம் மற்றும் குஜராத்தி மொழிகளில் உஷா பல்வேறு கையேடுகள் மற்றும் புத்தகங்களை எழுதியுள்ளார். 

காந்தி அமைதி இயக்கம் மற்றும் பாரதிய வித்யாபவன் ஆகிய அமைப்புகளோடு இணைத்து உஷா பல்வேறு சேவைகளை முன்னெடுத்தார். 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு நாள் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட உஷா நோய் வாய்ப்பட்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் நாள் காலமானார். 

உஷா மேத்தாவின் சேவைகளை அங்கீகாரம் செய்யும்விதமாக பாரத அரசு 1998ஆம் ஆண்டு அவருக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதை வழங்கி சிறப்பித்தது. 

உஷா மேத்தா போன்று பல்வேறு தியாகிகளின் வீரச் செயல்களால் கிடைக்கப்பெற்றது நமது சுதந்திரம். அதனைக் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது என்பதை என்று நினைவில் வைப்போம். 

திங்கள், 23 மார்ச், 2026

மார்ச் 23 - அரசியல் வானில் ஒரு இளம்தாரகை - ஸ்ம்ரிதி இராணி பிறந்தநாள்

எந்த ஒரு நிறுவனமோ, இயக்கமோ அல்லது அரசியல் கட்சியோ நெடுங்காலம் நீடித்து இருப்பதற்கு ஒரு வழிகாட்டும் கொள்கையும் அதனால் ஈடுபட்டு அதில் தன்னை இணைத்துக் கொள்ளும் இளைஞர் பட்டாளமும், அவர்களை வழிகாட்டி அவர்களைத் தலைவர்களாக மாற்றும் மூத்த நிர்வாகிகளும் தேவை. அப்படி ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்திலும் பின்னர் பாரதிய ஜனதா கட்சியிலும் அடுத்த தலைமுறை தலைவர்களில் முக்கியமானவராக விளங்கும் ஸ்ம்ரிதி இராணி அவர்களின் பிறந்தநாள் இன்று


அஜய் குமார் மல்ஹோத்ரா - ஷிபானி பக்ச்சி தம்பதியரின் மூத்த மகளாக ஸ்ம்ரிதி 1976ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் நாள் பிறந்தார். ஸ்ம்ரிதியின் தாத்தா ஒரு ஸ்வயம்சேவக், அவர் தாயார் ஜனசங்கத்தின் உறுப்பினர். எனவே இயல்பாகவே அவருக்கு அரசியல் ஈடுபாடு இருந்ததில் வியப்பில்லை.

சாதாரண மத்தியதர குடும்பத்தில் பிறந்த ஸ்ம்ரிதி, தனது சிறு வயதிலேயே அழகுசாதனப் பொருள்களை விற்பனை செய்து பொருளீட்டத் தொடங்கினார். 1998ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பத்து போட்டியாளர்ககளில் ஒருவராகத் தேர்வானார். அதனைத் தொடர்ந்து திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் நடிக்க ஸ்ம்ரிதி மும்பை நகருக்கு குடியேறினார்.

ஊச் லா லா லா என்ற தொலைக்காட்சித் தொடரை தொகுத்தளிக்கத் தொடங்கிய ஸ்ம்ரிதி, ஏக்தா கபூர் தயாரித்த குன்கி சாஸ் பி கபி பஹு தி என்ற தொலைக்காட்சித் தொடரில் துளசி விரானி என்ற பாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார். இந்தத் தொடரின் வெற்றி அவரை வட மாநிலங்களில் அறியப்பட்ட முகமாக மாற்றியது. அந்தக் காலகட்டத்தில் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ஸ்ம்ரிதி தயாரித்து வழங்கினார்.

2003ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த ஸ்ம்ரிதி, அடுத்த ஆண்டே மஹாராஷ்டிரா மாநில இளைஞர் அணியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கபில் சிபிலை எதிர்த்துப் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் இந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெறவில்லை.

ஆனால் இந்த தற்காலிகப் பின்னடைவு அவரின் அரசியல் வாழ்வில் ஒரு பகுதி மட்டுமே. தனது தொடர்ந்த உழைப்பினால் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளராகவும், பெண்கள் அணியின் தேசியத்தலைவராகவும் அவரை கட்சி நியமித்தது. 2011ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் சார்பாக ஸ்ம்ரிதி இராணி மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அமேதி தொகுதியில் ஸ்ம்ரிதி இராணி களமிறங்கினார்.

1967ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதியில் அதுவரை 14 தேர்தல்கள் நடைபெற்று இருந்தன. அதில் ஒரு முறை ஜனதா கட்சியும், ஒரு முறை பாஜகவும் வெற்றி பெற்று இருந்தது. 12 முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று இருந்தது. அதிலும் நேரு குடும்பத்தின் சொந்த தொகுதியாக சஞ்சய் காந்தி, ராஜிவ் காந்தி, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் 1980ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக (1988 தேர்தல் தவிர ) அந்தத் தொகுதியில் வெற்றி பெற்று இருந்தனர். ராகுல் காந்தி காங்கிரஸ் வேட்பாளராக இருந்த தொகுதியில் அவரை எதிர்த்து ஸ்ம்ரிதி இராணி போட்டியிட்டார். ஒருலட்ச ஒட்டு வித்தியாசத்தில் ராகுல் அப்போது வெற்றி பெற்றார்.

ஆனால் அடுத்த ஐந்தாண்டு காலகட்டத்தில் ஸ்ம்ரிதி இராணி அந்தத் தொகுதியைச் சுற்றிச் சுற்றி வந்து மக்களின் நம்பிக்கையைப் பெற்றார். 2019ஆம் ஆண்டு மீண்டும் ராகுலை எதிர்த்து அமேதி தொகுதியில் போட்டியிட்டார். வெற்றிபெறுவது கடினம் என்பதை உணர்ந்து கொண்ட ராகுல் கேரளா மாநிலத்தின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். எதிர்பார்த்தது போல ராகுல் காந்தியைவிட ஐம்பத்தைந்தாயிரம் வாக்குகள் அதிகம் பெற்று ஸ்ம்ரிதி அமேதி தொகுதியைக் கைப்பற்றினார்.

2014ஆம் ஆண்டு அமைந்த மோதி தலைமையிலான அரசில் மனிதவள மேம்பாட்டுத்துறை, அதனைத் தொடர்ந்து செய்தித் தொடர்புத் துறையின் கூடுதல் பொறுப்பு, ஜவுளித்துறை ஆகிய துறைகளின் அமைச்சராகவும், 2019ஆம் ஆண்டில் அமைந்த அமைச்சரவையில் ஜவுளிதுறை மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராகவும் ஸ்ம்ரிதி இராணி பணியாற்றி வருகிறார்.

ஸுபின் இராணி என்ற தொழிலதிபரை மணந்து கொண்ட ஸ்ம்ரிதி இராணிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்திய அரசியல் வானில் 44 வயது என்பது மிக இளைய வயதுதான். இன்னும் நீண்ட கால அரசியல் வாழ்வு ஸ்ம்ரிதி இராணிக்கு உள்ளது என்பதுதான் உண்மை.

பாரத நாட்டின் சேவையில் ஸ்ம்ரிதி இரானியின் பங்கு இன்னும் வீரியமாக இருக்கட்டும் என்று ஒரே இந்தியா தளம் மனமார வாழ்த்துகிறது. 

ஞாயிறு, 22 மார்ச், 2026

மார்ச் 22 - தொழிலதிபர் T V சுந்தரம் ஐயங்கார் பிறந்தநாள்

தமிழகத்தின் முக்கியமான டிவிஎஸ் குழுமத்தின் நிறுவனர் திரு சுந்தரம் ஐயங்காரின் பிறந்ததினம் இன்று


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடி என்ற சிறு கிராமத்தில் 1877ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி பிறந்தவர் திரு சுந்தரம் ஐயங்கார். திருநெல்வேலி ஹிந்து கல்லூரியில் படித்த அவர் சட்டபடிப்பையும் முடித்தார். அதனைத் தொடர்ந்து ரயில்வேயில் குமாஸ்தாவாகவும் பின்னர் வங்கியிலும் பணியாற்றினார். பின்னர் தொழில்துறையில் சுந்தரம் ஐயங்கார் கால்பதித்தார்.

1911ஆம் ஆண்டு தனது நிறுவனத்தை ஆரம்பித்த ஐயங்கார் 1912ஆம் ஆண்டு பஸ் போக்குவரத்தைத் தொடங்கினார். தஞ்சாவூர் - புதுக்கோட்டை வழியில் இவரது முதல் பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. பேரம் பேசும் நிலைமையை மாற்றி தூரத்திற்கு ஏற்ப கட்டணம், பயணிகள் கொடுக்கும் பணத்திற்கு ஒப்புகை சீட்டு, குறிப்பிட்ட காலத்தில் கிளம்பி சரியான நேரத்தில் குறிப்பிட்ட இடத்தை அடைதல் என்று அந்தக் காலத்திலேயே தரத்தில் கவனம் செலுத்தினார். டிவிஎஸ் நிறுவனத்தின் பேருந்துகள் வருவதை வைத்து கடிகாரத்தின் நேரத்தை சரி செய்துகொள்ளலாம் என்று அன்று பேசுவது இயல்பான ஒன்றாக இருந்தது.

பேருந்து போக்குவரத்தைத் தொடர்ந்து அதோடு தொடர்புடைய பல்வேறு தொழில்களிலும் டிவிஎஸ் நிறுவனம் கால்பதிக்கத் தொடங்கியது. வாகன உதிரிப்பொருள்கள், பெட்ரோல் / டீசல் விநியோகம், டயர் உற்பத்தி என்று விரிவடைந்தது. பின்னர் நாடு சுதந்திரம் அடைந்தபிறகு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்களின் விநியோக உரிமையும் டிவிஎஸ் நிறுவனத்திற்கு கிடைத்தது. எந்தவிதமான சமரசமும் இல்லாத தரக்கட்டுப்பாடு, அரசின் சட்டதிட்டங்களை மீறாத செயல்பாடு, பணிபுரியும் ஊழியர்களை குடும்ப உறுப்பினர்கள் போல நடத்துதல் என்று ஒரு உதாரண நிறுவனமாக டிவிஎஸ் நிறுவனத்தை ஐயங்கார் வார்த்தெடுத்தார். நிறுவனத்தில் கான்டீன் வசதி, தொழிலாளர்களுக்கு குடியிருப்பு, மருத்துவ வசதி, அவர்கள் பிள்ளைகள் படிக்க பள்ளிக்கூடம் என்று அன்றய காலகட்டத்தில் எந்த தொழிலதிபரும் யோசிக்காத வசதிகளை தங்கள் தொழிலாளிகளுக்கு அவர் ஏற்படுத்திக் கொடுத்தார்.

வாகன விநியோகத்தில் ஈடுபட்ட நிறுவனம், தங்கள் வாகனங்களை விற்பனை செய்ய சுந்தரம் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தையும் உருவாக்கியது. இன்று வாகன கடன் வழங்குவதில் சுந்தரம் பைனான்ஸ் முக்கியப் பங்கு வகிக்கிறது. அரசு தனியார் போக்குவரத்தை அரசுமயமாக்கியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு உற்பத்தி நிறுவனங்கள் நிறுவப்பட்டது. வீல்ஸ் இந்தியா, சுந்தரம் கிளேட்டன், டிவிஎஸ் மோட்டார்ஸ்,  என்று பல்வேறு நிறுவங்களாக அவை உருவெடுத்தன.

தாங்கள் தயாரிக்கும் பொருள்களின் தரத்திற்காக சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த நிறுவனங்கள் பல்வேறு உதிரிப்பாகங்களை ஏற்றுமதியும் செய்து வருகின்றன. டிவிஎஸ் குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள் தரக் கட்டுபாட்டுக்கான டெமிங் தர விருதையும் பெற்றுள்ளன. இன்று ஏறத்தாழ 60,000கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டு 8.5 பில்லியன் அமெரிக்கா டாலர் வியாபாரத்தை டிவிஎஸ் குழுமம் செய்து வருகிறது.

சுந்தரம் ஐயங்கார் அவர்களுக்கு ஐந்து மகன்களும் மூன்று மகள்களும் உண்டு. முற்போக்கு சிந்தனையாளராகவும், காந்தியைப் பின்பற்றுபவராகவும் சுந்தரம் ஐயங்கார் இருந்தார். சிறுவயதில் விதவையான தனது மகள் சௌந்தரம் அவர்களுக்கு ராமச்சந்திரன் என்பவருக்கு மறுமணம் செய்து வைத்தார், காந்திகிராம கிராமப்புற பல்கலைக்கழகத்தை நிறுவியவர்கள் இந்த தம்பதியினரே. 1955ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் நாள் சுந்தரம் ஐயங்கார் காலமானார்.

தமிழகத்தின் தொழில்வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்த திரு சுந்தரம் ஐயங்கார் அவர்களின் பிறந்ததினத்தில் அவரை ஒரே இந்தியா செய்தித்தளம் போற்றி வணங்குகிறது. 

சனி, 21 மார்ச், 2026

மார்ச் 21 - ஷெனாய் மேதை பிஸ்மில்லாஹ்கான் பிறந்தநாள்

பாரதம்  ஒரு விசித்திரமான தேசம். ஏறத்தாழ இருநூறாண்டு கால ஆங்கிலேயர் ஆட்சிக்குப்பின் சுதந்திரம் அடையும்போது இந்த நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இங்கே பெரும்பான்மையாக உள்ள ஹிந்துக்களோடு இணைந்து வாழ  முடியாது என்று எண்ணிய இஸ்லாமியர்களுக்காக பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவானது. பிரிவினை பல லட்சம் மக்களைக் கொன்று, அவர்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடி அதன்மேலே  இரண்டு நாடுகள் உருவானது.

ஆனாலும் இந்தநாட்டின்மீது நம்பிக்கை கொண்டு பல லட்சம் இஸ்லாமியர்கள் இந்தியாவிலேயே தங்கிவிட்டனர். அப்படி தங்கிய இஸ்லாமியர் ஒருவர்தான் இந்தியாவின் சுதந்திரநாள் அன்றும் இந்தியா குடியரசாக மலர்ந்த நாளன்றும் மங்கள வாத்தியம் இசைத்து வலிமையான பாரதத்தை வரவேற்று வாழ்த்தினார் என்பதும் அந்த மகத்தான கௌரவத்தை அவருக்கு இந்த நாடு அளித்தது என்பதும் யாரையும் நெகிழவைக்கும் ஒரு வரலாற்று நிகழ்ச்சியாகும். அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் புகழ்பெற்ற ஷெனாய் இசைக்கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லாகான் அவர்கள்.

இன்றய பிஹார் மாநிலத்தில் உள்ள தூம்ரான் மாவட்டத்தில் பாரம்பரியமான ஒரு இஸ்லாமிய இசைக்குடும்பத்தில் 1916ஆம் ஆண்டு பிஸ்மில்லாகான் பிறந்தார். இவரது பெற்றோர்கள் இவருக்கு கமருதீன் என்றுதான் பெயர் சூட்ட இருந்தார்கள். ஆனால் இவரது தாத்தா ரசூல் பாக்ஸ்கான் குழந்தையைப் பார்த்த பொழுதில் பிஸ்மில்லாஹ் ( அல்லாஹ்வின் திருப்பெயரால் ) என்று மகிழ்ச்சியோடு கூவினார். அதனால் பிஸ்மில்லாஹ்கான் என்றே இவர் அழைக்கப்பட்டார்.

தனது ஆறாவது வயதிலேயே காசி விஸ்வநாதர் ஆலயத்தின் ஷெனாய் வித்வானாக இருந்த தனது தாய்மாமா அலி பக்ஷிகானிடம் இவர் தனது இசைப் பயிற்சியைத் தொடங்கினார். தனது இசை காசி விஸ்வநாதரின் அருள் என்பதில் பிஸ்மில்லாஹ்கான் உறுதியான நம்பிக்கை கொண்டுஇருந்தார். ஷெனாய் வாத்தியத்திற்கு இவரால் உலகப்புகழ் கிடைத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

மத்தியபிரதேச அரசின் தான்சேன் விருது, சங்கீத நாடக அக்காதெமி விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகளை இவர் பெற்றார். இவை எல்லாவற்றிக்கும் மகுடம் வைத்தது போல 2001ஆம் ஆண்டு இந்திய அரசு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத்ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது.

சங்கீத நாடக அக்காதெமி இவர்பெயரால் உஸ்தாத் பிஸ்மில்லாஹ்கான் யுவபுரஸ்கார் என்ற விருதை 2007 ஆண்டு நிறுவியது. கலையுலகின் வளர்ந்துவரும்  இளம்கலைஞர்களுக்கான விருது இது.

காசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகமும், வங்காளத்தின் விஸ்வபாரதி பல்கலைக்கழகமும் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து சிறப்பித்துள்ளன.
முதுமையால் நோயுற்று இருந்த உஸ்தாத் பிஸ்மில்லாஹ்கான் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் நாள் காலமானார். இந்திய ராணுவத்தின் 21 குண்டு முழங்க இவரது நல்லடக்கம் நடைபெற்றது. இந்திய அரசு ஒருநாள் துக்கம் அனுஷ்டித்து. இவரது ஷெனாய் வாத்தியமும் இவர் உடலோடு புதைக்கப்பட்டது.

தனது இசையால் இந்த உலகத்தை மகிழ்வித்த உஸ்தாத் மறுஉலகிலும் தனது இசையால் புகழ்பெற்று இருப்பார்.

வியாழன், 19 மார்ச், 2026

மார்ச் 19 - இசையரசி டி.கே. பட்டம்மாள் பிறந்ததினம்

தமிழகத்தின் புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர் திருமதி டி கே பட்டம்மாள் அவர்களின் பிறந்ததினம் இன்று.

காஞ்சீபுரத்தைச் சார்ந்த தாமல் கிருஷ்ணஸ்வாமி தீக்ஷிதருக்கும் காந்திமதி என்பவருக்கும் மகளாக பட்டம்மாள் 1919ஆம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்கள் இருவருமே கர்நாடக இசை பயின்றவர்கள். மிகச் சிறு வயதிலேயே கேட்கின்ற பாடல்களைப் பாடும் திறமை இவருக்கு இருந்தது.

தனது பத்தாவது வயதிலேயே இவர் அன்றய சென்னை வானொலியில் தனது முதல் நிகழ்ச்சியை அரங்கேற்றினார். தனது பதின்மூன்றாம் வயதில் சென்னையில் உள்ள ரசிக ரஞ்சனி சபாவில் முழுமையான கச்சேரியை நடத்தினார். இசை பயிலவும், இசையுலகில் முன்னேறவும் இவர் பெற்றோர்கள் காஞ்சீபுரத்தில் இருந்து சென்னைக்கு குடியேறினர். சென்னை மட்டுமல்லாது நாட்டிலுள்ள பல்வேறு நகரங்களில் இவரது நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பை அளித்தனர்.

அன்றய காலகட்டத்தில் ப்ராமண சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள் பொதுமேடைகளில் ஆடவோ பாடவோ மாட்டார்கள். அதனை மாற்றி பரதநாட்டியத்தில் ருக்மணிதேவி அருண்டேல் போல சங்கீத மேடைகளில் முதலில் ஏறியவர் திருமதி பட்டம்மா அவர்கள்.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் இயற்றிய பாடல்கள் பல இவரால் பாடப்பட்டு பிரபலமானது. திருப்புகழ், தேவாரம் ஆகியவற்றை முறையாகக் கற்றுத்தேர்ந்து அவைகளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் பாடினார். புகழ்பெற்ற சாகித்யகர்த்தா பாபநாசம் சிவன் அவர்களிடம் இருந்து நேரடியாகப் பயின்று அவரது பாடல்களையும், மஹாகவி சுப்ரமணிய பாரதியார் பாடல்களையும் இவர் பெருமளவில் பரப்பினார். பயில்வதற்கு பாடுவதற்கும் கடினமான ராகம் தாளம் பல்லவி என்பதில் திறமைவாய்ந்தவராக இருந்ததால் இவர் பல்லவி பட்டம்மாள் என்று அழைக்கப் பட்டார்.

1940களில் பல்வேறு கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் தேசபக்திப் பாடல்களை, குறிப்பாக பாரதியார் பாடல்களை, அதிக அளவில் பாடிவந்தார். தீரர் சத்தியமூர்த்தி, ராஜாஜி, திரு.வி.க போன்ற தலைவர்கள் இவரை ”அதிகமாக தேசபக்திப் பாடல்களைப் பாட வேண்டாம். பெண்ணென்றும் பாராமல் வெள்ளையரசு சிறை வைத்துவிட்டால் என்ன செய்வாய்” என்று எச்சரித்தனர். ஆனாலும் விடாமல் தேசபக்திப் பாடல்களை மேடை தோறும் பாடிவந்தார்.

பல்வேறு திரைப்படங்களில் தேசபக்தி பாடல்களையும் ஆன்மீகப் பாடல்களையும் இவர் பாடி உள்ளார். AVM நிறுவனம் தயாரித்த படங்களில் பாரத சமுதாயம் வாழ்கவே, ஆடுவோமே பள்ளு பாடுவோமே, வெற்றி எட்டுத் திக்கும் என கொட்டு முரசே போன்ற பாரதியார் பாடல்களையும் இவர் பாடியுள்ளார்.

நம் நாடு விடுதலை அடைந்த 1947 ஆகஸ்டு பதினைந்து அன்று அதிகாலை (நள்ளிரவு) 12 மணிக்கு விடுதலை அறிவிப்பு வந்த பிறகு, நேருவின் பேச்சு முடிந்தவுடன் வானொலி நிலையத்தார் பட்டம்மாள் அவர்களை “ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே” பாடலைப் பாடச் செய்தனர்.

இவரது மேதைமையைப் பாராட்டி இவருக்கு சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி, கான சரஸ்வதி ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூஷண் பட்டத்தை அளித்து சிறப்பித்தது.

2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் நாள் இவர் சென்னையில் காலமானார். 

செவ்வாய், 17 மார்ச், 2026

மார்ச் 17 - விண்வெளி வீர மங்கை கல்பனா சாவ்லா பிறந்ததினம்

மனிதகுலம் சிந்திக்கத் தொடங்கிய காலம் முதலே விண்வெளியும், அதில் பறப்பதும் மனிதனுக்கு கிளர்ச்சியூட்டும் கனவாகவே இருந்து வந்துள்ளது. விண்வெளியில் கால்பதித்த முதல் பாரத பெண்மணி என்ற பெருமைக்கு சொந்தக்காரரான கல்பனா சாவ்லாவின் பிறந்ததினம் இன்று.  


மேற்கு பஞ்சாபில் ( இன்றய பாகிஸ்தான் ) முல்தான் பகுதியைச் சார்ந்த பனாரசிலால் சாவ்லா நாட்டின் பிரிவினையின் போது இன்றய ஹரியானா மாநிலத்திற்கு குடிபெயர்ந்தார். தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த அவர் பல்வேறு சிறு தொழில்களைச் செய்து வந்தார். சவாலான ஒரு காலகட்டத்தை அந்தக் குடும்பம் கடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் நான்கு குழந்தைகளில் இளையவராக 1962ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் நாள் கல்பனா பிறந்தார். 

சிறுவயதிலிருந்தே படிப்பிலும், ஓவியம் வரைவதிலும், நடனமாடுவதிலும் சிறந்து விளங்கினார் கல்பனா. மொட்டை மாடியில் அமர்ந்தவாறு வானத்தைப் பார்த்துக்கொண்டு இருப்பதிலும், விண்மீன்களை எண்ணுவதும் அவரின் முக்கியமான பொழுதுபோக்காக இருந்தது. பள்ளிப்படிப்பை முடித்த கல்பனா 1982ஆம் ஆண்டு சண்டிகர் நகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் வான்வெளிப் பொறியியல் ( Aeronautical Engineering ) துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அன்று இந்தத் துறையில் சேர்ந்த ஒரே பெண் மாணவி கல்பனாதான். அதனைத் தொடர்ந்து மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளிப் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1986ல் கொலராடோ பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முதுகலைப் பட்டமும், பிறகு 1988ல் வெண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.

கல்பனாவின் கனவு விண்வெளிப் பயணம்தான். 1995 ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த கல்பனா சாவ்லா, கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ்-87இல் பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார். பதினைந்து நாட்கள்  252 முறை பூமியைச் சுற்றி ஒரு கோடிக்கும் அதிகமான கிலோமீட்டர் பயணம் என்று விண்வெளியில் பறந்த முதல் பாரதப் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றார். 

2003ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி விண்வெளி ஆராய்ச்சிக்காக, அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107 அனுப்பி வைக்கப்பட்டது.கல்பனா உள்பட ஏழு விண்வெளி வீரர்கள் பல்வேறு ஆராய்ச்சிக்காக இந்த விண்கலத்தில் பயணம் செய்தனர். 16 நாள் ஆய்வை முடித்து வெற்றிகரமாக பிப்ரவரி 1ஆம் தேதி பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது அமெரிக்காவின் டெக்சாஸ் வான்வெளியில் வெடித்துச் சிதறியது. இதில் கல்பனா சாவ்லா உட்பட 7 விண்வெளி வீரர்களும் பலியாகினர். 

பிரதமர் வாஜ்பாய் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டபோது, அவர் பார்க்க விரும்பிய முக்கியமானவர்களில் ஒருவர் கல்பனா சாவ்லா. 
விண்ணில் இருந்து பார்த்தால் பாரதத்தின் கங்கை நதியும், இமயமலையும் எவ்வளவு அழகாகத் தெரிந்தது என்று கல்பனா பிரதமரிடம் குதூகலமாகக் கூறினார்.  

ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, விண்வெளியில் மிதந்து பாரத மக்களின் விடா முயற்சியை, எந்த சவாலையும் எதிர்கொள்ளும் நெஞ்சுரத்தை உலகெங்கும் பறைசாற்றிய கல்பனா சாவ்லாவின் இறப்பு என்பது பாரத நாட்டின் தேசிய துயரமாக அனுசரிக்கப்பட்டது. 

பாரதம் விண்ணில் ஏவிய வானிலை ஆராய்ச்சி செயற்கைக்கோளுக்கு கல்பனா என்ற பெயர் சூட்டப்பட்டது. பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் பெண்கள் விடுதி, ஹரியானா மாநிலத்தின் குருஷேத்திரா நகரில் அமைந்துள்ள கோளரங்கம், எஸ் ஆர் எம் பல்கலைக்கழகம், வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மௌலானா அபுல்கலாம் ஆஜாத் தொழ்ல்நுட்ப பல்கலைக்கழகம் என்று பல்வேறு கல்வி நிலையங்களின் மாணவ விடுதிகள் இன்று கல்பனா சாவ்லாவின் பெயரில் அழைக்கப்படுகின்றன. பாரதத்திலும், அமெரிக்காவிலும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் அவர் பெயரில் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் சிறப்புப் பரிசுகளை வழங்குகின்றன. 

வீர தீர சாகசச் செயல்களைப் புரியும் பெண்களுக்கான பரிசு கல்பனா சாவ்லா பெயரில் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. 


இன்னும் பல ஆண்டுகளுக்கு பாரதநாட்டின் பெண்களுக்கு கல்பனா சாவ்லாவின் வாழ்வு உத்வேகம் தருவதாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை