புதன், 7 ஆகஸ்ட், 2019

இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை M S ஸ்வாமிநாதன் - ஆகஸ்ட் 7

மேவிய ஆறுகள் பல ஓடி மேனி செழித்த நாடு என்றாலும் ஆங்காங்கே பஞ்சம் மண்டிய நாடும்தான் பாரதம். முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து நல்பியல் இழந்து நடுங்கு துயருறுத்து பாலை என்று படிமம் கொள்ளுமாம் என்று சிலப்பதிகாரம் வரையறை செய்கிறது. ஆனாலும் பதினேழாம் நூற்றாண்டுவரை பசியாலும் பஞ்சத்தாலும் கொத்து கொத்தாக பாரத மக்கள் இறந்ததாக வரலாறு இல்லை. ஆனால் ஆங்கில ஆட்சியினால் செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சத்தால் பல லட்சம் மக்கள் மடிந்தனர். தாழ்வுற்று வறுமைமிஞ்சி விடுதலை தவறிக் கெட்டிருந்த நாட்டின் கடைக்கோடியில் இருந்த ஒரு மாணவன் தனது படிப்பின் மூலம் இந்த நிலைமையை மாற்றவேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டான்.



கும்பகோணத்தைச் சார்ந்த அந்த இளைஞன் மான்கொம்பு சாம்பசிவம் ஸ்வாமிநாதன், சுருக்கமாக எம் எஸ் ஸ்வாமிநாதன். எம் கே சாம்பசிவம் - பார்வதி தங்கம்மாள் தம்பதியினரின் இரண்டாவது மகனாக 1925ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் நாள் கோவில்நகரமான கும்பகோணத்தில் பிறந்தவர் இவர். இவர் தந்தை ஒரு மருத்துவர். காந்தியவழியில் அந்நிய துணி புறக்கணிப்பு, எல்லா மக்களும் கோவிலில் நுழையும் போராட்டம் என்று தேசிய சிந்தனையோடு இருந்தவர் அவர். கும்பகோணம் பகுதியில் யானைக்கால் நோயை இல்லாமல் ஆக்கிய பெருமைக்கு சொந்தக்காரர் இவர் தந்தை. சமுதாயசேவை என்பது இதனால் ஸ்வாமிநாதனுக்கு பரம்பரை சொத்தாகவே வந்தது. தனது பதினோராம் வயதில் தந்தையை இழந்த ஸ்வாமிநாதன் தனது தாய்மாமன் அரவணைப்பில் வளர்ந்தார். மருத்துவ குடும்பத்தில் பிறந்தாலும் 1942 - 43ஆம் ஆண்டுகளில் உருவான வங்காள பஞ்சம் இவர் மனதை உலுக்கியது. மருத்துவப் படிப்பை புறக்கணித்து உணவு ஆராய்ச்சி செய்யும் நோக்கத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள மன்னர் கல்லூரியில் இளங்கலை விலங்கியல் படிப்பையும் பின்னர் சென்னையில் உள்ள விவசாயக் கல்லூரியில் விவசாய இளங்கலை பட்டத்தையும் பெற்றார். அதன் பின்னர் டெல்லியில் உள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி மையத்தில் முதுகலைப் பட்டத்தையும், பின்னர் நெதர்லாண்ட்ஸ் நாட்டிலும் அதனை தொடர்ந்து இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். வெளிநாடுகளில் வந்த வேலைவாய்ப்புகளை உதறித் தள்ளிவிட்டு ஸ்வாமிநாதன் பாரதம் திரும்பினார். டெல்லியில் உள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம் அவர் களமானது. இந்திய விவசாய ஆராய்ச்சி மையத்தின் ஆசிரியர், ஆராய்ச்சியாளர், ஆய்வு நிர்வாகி, இயக்குனர் என்று படிப்படியாக ஸ்வாமிநாதன் உயர்ந்தார்.

1960களில் விவசாய உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும் என்று பாரத அரசு முடிவு செய்தது. உருவானது பசுமைப்புரட்சி திட்டம். உயர் விளைச்சல் தரும் வீரிய விதை ரகங்கள், மேம்பட்ட உரப் பயன்பாடு, முறையான நீர்ப்பாசனம், பூச்சிக்கொல்லி மருந்து நிர்வாகம் என்ற கலவையான திட்டங்களின் செயல்பாட்டினால் நாட்டில் தேவையை விட விவசாய உற்பத்தி அதிகரித்தது. இதனை மத்திய அமைச்சராக இருந்த சி சுப்பிரமணியமும், அதிகாரவர்க்கத்தின் சார்பில் எம் எஸ் ஸ்வாமிநாதனும் செயல்படுத்தினர்.

தேசிய வேளாண் ஆணைய உறுப்பினர், இந்திய வேளாண் ஆராய்ச்சி கூட்டமைப்பின் தலைவர், மத்திய வேளாண் அமைச்சகத்தின் முதன்மை செயலாளர், மத்திய திட்டக்குழு உறுப்பினர் தேசிய உயிரித் தொழில்நுட்ப வாரியத்தின் தலைவர் என்று பல்வேறு பொறுப்புகள் அவரைத் தேடி வந்தன. பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையத்தின் தலைவராகவும் அவர் பணியாற்றினார்.

நாட்டின் ராஜ்யசபையின் நியமன உறுப்பினராக ஸ்வாமிநாதனை ஜனாதிபதி நியமித்தார். தேசிய விவசாயிகள் நல ஆணையத்தின் தலைவர், தேசிய வேளாண் அறிவியல் அகாடமி தலைவர் என்று பொறுப்புகளையும் இவர் வகித்தார்.

பாரத நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது இவருக்கு 1989ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

தனியொருவனுக்கு உணவில்லை என்ற நிலையை மாற்றிய காரணத்தால் ஸ்வாமிநாதன் பசுமைப்புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

அவரது பிறந்தநாளில் அவரை ஒரே இந்தியா தளம் வணங்கி வாழ்த்துகிறது.